பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 12 January 2023 No Comment
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4 தொடர்ச்சி)
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5
அமுதவல்லி – உதாரன்
கலி விருத்தம்
அமுதவல்லி : புண்பட்ட நெஞ்சும் பொலிவுற மாந்தர்
பண்பாடுந் தமிழைப் பணிந்து வணங்குவேன்
பண்பட்ட திறனாம் புலமை யென்னுங்
கண்பெற்ற கவிஞர்க்குக் கனிவான வணக்கம்
பதின்சீர் விருத்தம்
வெண்பா அரும்பா வீணாம்
முயற்சி யென்றே
விலகி யோடி வியப்பர்
பலரு மன்றே
நுண்பா களிப்பா நூறாய்ப்
பாட வென்றே
நுவன்றீர் பலவாய் நுண்மைக்
கருத்துஞ் சேர்த்தே
எண்பா இனிப்பா என்பர்
அகவல் பாட
எனக்கு மின்னே இயம்புவீர்
இனிமை சேர
நண்பா ஒண்பா நயப்போர்
தமிழைத் தேட
நானிலம் முழுதும் நற்றமிழ்ச்
செங்கோல் நீட
அகவல்
நேரிசை ஆசிரியப்பா
உதாரன் : காட்டுப் புல்லைக் கடிது மேய்ந்து
மேட்டு நிலத்தில் மெல்ல அசையிடும்
காராம் பசுவின் கொழுமடி பொழியும்
பாலின் பெருக்கில் பழுதற வாழும்
முல்லை நிலத்து முதிய பெண்டிர்
எல்லை கழிந்த யிரவுப் போதில்
வல்லாண் முருங்கை மென்றளிர் முருகிட
உருக்கும் நெய்யின் உவப்புறு வாசம்
பெருகுநீர் மருதம் பெயரிய மாடம்
மருவுங் காதல் இளையர் நெஞ்சை
உருக்கிட மனையாள் மலர்க்குழல் கோத
தொத்துங் கிளியாய்த் தோளிற் சாய்ந்தவர்
பனிமொழி பிதற்றும் வளமுறு நாட்டின்
இளவர சாகும் இளையா யின்று
தெளிவுறக் காண்குவம் செந்தமிழ் நாட்டில்
சங்கப் புலவோர் புவிமுழு தேற்கும்
விழுமிய கருத்தை விளம்பிடக் கொண்ட
செழுமிய பாவாம் அகவற் சிறப்பே
வேண்டிக் கல்லாது வெறுத்து மயங்கும்
கன்னித் தமிழின் கரவுப் பகையெனக்
கருமை மூழ்கிக் கனத்த பஞ்சென
உருவம் பலவாய் உருண்டு மோதி
நறவுத் தமிழின் நன்னயம் போல
நான்கு திசையும் நறுக்கென மின்னி
தன்னல மில்லாத் தமிழனை மோதி
ஆற்ற லிழப்போன் அலறலா யிடித்துக்
கடைக்கண் ணாலே காதலை வழங்கும்
பொற்புடை நங்கையாய்ப் பொறுக்கென வீழ்ந்து
உருமெனும் ஒலியா லுவகையு மச்சமும்
வருபவர் தமக்கு வழங்கிநீ ராட்டும்
அருவியாய் ஆறாய் அகன்றிடும் ஓடையாய்
நன்செயாய்ப் புன்செய் நலங்கொள ஆங்கே
நெஞ்சை யள்ளும் நிழலுடைப் பொழிலில்
அகவி யழைக்கும் அழகிய மயிலாய்
விழுமிய துரைத்தே வேண்டிய நெறியே
நீண்ட பாடலாய் நிமிர்ந்தொளிர்
ஆண்மை யுடையதை அகவ லென்பரே
இணைக்குறளாசிரியப்பா
என்பு முருக இயற்றிய தவத்தால்
ஆண்டு பலவாய் அறிவிற் சிறந்தோர்
ஈண்டைய நடப்பின் ஏதுணர வேண்டி
வாதத் திறனால் வாய்க்கும் நன்றென
காய்ந்து வருந்தி கணக்கிலா நாட்கள்
ஓய்த லின்றி உரைப்பா ராகிக்
களிறுரு வாய்ந்த கண்ணிலா மாந்தராய்
அறாஅ நெஞ்சின் அரவுங் கீரியும்
உறாஅ துற்றிடும் உயிர்கொள் பகையாய்
கலாஅம் விளைத்துக் கணக்கிலா உயிர்களை
களப்பலி யாக்கி
சமயம் பலவாய்ச் சாத்திரம் பலவாய்ப்
பிணங்கிக் கலங்கும் பிரிவுகள்
பெருக்கிய தல்லால்
கடாஅ முடாஅ வென்றே
இடியெனும் பெயரால்
மின்னல் விளைத்து மண்ணில் பொழியும்
மழையின் காரணம் மற்றியார் உரைத்தார்
மற்றாங் கறிவியல்
உற்றிடும் வகையால் ஓர்ந்து
செப்பிடும் உண்மை செவ்விய தாகி
ஒப்புற மாந்தரை ஒருங்கே பிணைத்தல்
கண்ட பின்னருங் கருத்திலா வாதத்தால்
மண்டிடும் மதங்களை மனங்கொளல் வீணே
நிலைமண்டில ஆசிரியப்பா
வீணென் றிகழாது விரும்பு முலகில்
அணுவி னசைவும் அவனல திலவென
நுணுகி யுரைக்கும் நூலுரை தேரின்
தேராது தெளியாது தீங்கினைப் புரிவோர்
யாருடை அசைவால் யாங்ஙனம் செய்குவர்
செய்வினை தம்முள் உய்வினை யறியா
தொய்வினை மாந்தர்க்குத் தொடுப்பதும் யார்செயல்
உண்டென இல்லென உரைப்பதும் எவர்செயல்
எடுப்பதும் அவனே கவிழ்ப்பதும் அவனெனின்
உடுப்பதும் நானே விடுப்பதும் நானென
உடுத்தலும் களைதலும் உணர்வினில் மயங்கிக்
களிக்கும் பித்தனாய்க் கடவுளும் உண்டுகொல்
இனத்திற் கொருதூது இறைவ னனுப்பியும்
எண்ணிலாச் சமயமுஞ் சண்டையு மெங்ஙனம்
பன்னூ றாண்டாய்ப் பரவின நிலைத்தன
ஒன்றே கடவுளா யுண்டெனி லீங்கே
பண்டு மின்றும் பலவாய்க் கண்டும்
அண்டங் களுக்கப்பால் அவனெங் கொளித்துளான்
உருவிலா அவனுக் குண்டோ பலகுணம்
அறிவைக் கொடுத்தல் அவனது வேலை
வறிதா யிழத்தல் சாத்தான் செயலெனில்
ஆண்டவ னாக்கிய அண்டங்கட் கிடையே
யாண்டவன் முளைத்தான் யாங்ஙனம் உதித்தான்
சாத்தானை யடக்கிச் சத்திய வழிநம்மை
காக்குந் திறனிலார் கடவுளா மென்றே
மீத்திறம் பேசுதல் மெய்யிலா நாநடையே
அடிமறி மண்டில ஆசிரியப்பா
நடத்தை திருந்தா நட்பும் வேண்டாம்
மடமை பெருக்கும் மதமும் வேண்டாம்
உடமை சுருட்டும் உலகியல் வேண்டாம்
கடமையே பேசும் கயமை வேண்டாம்
அறுசீர் விருத்தம்
நண்ணும் மேற்கு வானத்தில்
நாளும் மாலை மேகங்கள்
எண்ணி யிருந்தே நோக்குங்கால்
எண்ணப் படியே வடிவாகும்
எண்ணும் இசையின் கூறெல்லாம்
எண்ணப் படியே சீராகி
வண்ணங் காட்டும் வில்லாக
வளர்தமிழ் பெருக்கும் விருத்தப்பா
விடியல் நேரம்
விடலைப் பெண்டிர்
விரலாற் பூட்டும்
பொடிசெய் கோலம்
புதுப்புது வகையாய்ப்
பொலிவைக் கூட்டும்
அடியுஞ் சீரும்
அளவாய்க் கூடி
அமையுஞ் சிறப்பால்
மடியிற் சாயும்
மங்கை பாங்கில்
மயக்கும் விருத்தம்
பாட்டெலாம் பண்ணின் கூறு
பண்ணெலாம் ஒலியின் கூறு
ஈட்டலாம் இயன்ற வாறு
இசையினை அறிந்த வாறு
காட்டலாம் கற்ற வாறு
கற்பனைக் குற்ற வாறு
நாட்டலாம் நவிலு மாறு
நன்மையைச் சொல்லு மாறு
பெண்மையை நுகர வல்லார்
பேதைமை அறிய வல்லார்
நுண்மையை வியக்க வல்லார்
நூறெனப் பெருக்க வல்லார்
திண்மையைத் தேக்க வல்லார்
தீங்கினைக் காக்க வல்லார்
பண்ணினை அளக்க வல்லார்
பாவகை ஆக்க வல்லார்
அமுதவல்லி : தாவுகிற மற்போர் வீரன்
தாக்கிடும் விசையைப் போல
நாவுக்குள் ஓடை பாய
நங்கையர் அடுதல் போல
பாவுக்குள் வகைமை தோற்றிப்
பைந்தமிழ் வளர்த்து நன்மை
யாவுக்கும் யாப்ப மைத்தல்
நன்றென நவின்றீர் நன்றி
சாற்றிடுஞ் சமயந் தெய்வம்
சார்த்தியே கருத்த ளித்தீர்
போற்றிடுங் கருத்தென் றாலும்
புவியுளோர் நெஞ்சம் முற்றும்
ஏற்றிடுங் காலம் மட்டும்
இயம்புதல் தொடர வேண்டும்
மாற்றிடும் மயக்க மில்லை
மனத்தினுட் கொண்டேன் நானும்
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Comments
Post a Comment