Skip to main content

தமிழ்நாடும் மொழியும் 24: சோழர் கால ஆட்சி முறை – பேரா.அ.திருமலைமுத்துசாமி

 அகரமுதல




(தமிழ்நாடும் மொழியும் 23 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 24

சோழர் கால ஆட்சி முறை

சோழ மன்னர்கள் வெற்றி வீரர்கள் மட்டுமல்ல; திறமை மிக்க ஆட்சி புரியும் ஆற்றல் உடைய மன்னர்கள் என்றும் கூறலாம். சில மன்னர்கள் போரிலே புலிகளாக இருப்பர்; மாற்றாரும் கண்டு தோற்றுக் காற்றெனப் பறந்தோடச் செய்யும் பெரு வீரமிக்க மன்னர்களாகவும் இருப்பர்; கூற்றுவனும் அத்தகைய அரசர்களைக் காணின் குடல் கலங்குவான். ஆனால் அவர்கள் நாட்டை ஆளத் திறமை சிறிதும் இல்லாது இருப்பர். இதனால் கண்ணீரும் செந்நீரும் சிந்திப்பெற்ற பெரு நாடுகளை ஆளும்திறன் இல்லாது, மனமழிந்து இறந்த எத்தனையோ மன்னர் பரம்பரையை வரலாற்றிலே நாம் காணலாம். ஆனால் சோழ மன்னர்கள் அப்படியல்ல; நாட்டை நன்கு ஆளும் ஆற்றலும் பெற்றிருந்தார்கள். பிற்காலச் சோழர்கள் ஆட்சியிலே சோழ நாடு, நாடும் ஏடும் புகழவல்ல சிறந்ததோர் நல்லாட்சியைப் பெற்றுத் திகழ்ந்தது. எனவே சோழர் ஆட்சிக் காலத்தை, அஃதாவது கி. பி. 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 13-ஆம் நூற்றாண்டின் இறுதி வரையுள்ள 400 ஆண்டு காலத்தை, தமிழ்நாட்டின் மற்றொரு பொற்காலம் எனக் கூறவேண்டும். அவர்கள் காலத்தில் நிலவியது முடியாட்சியே எனினும், முடியாட்சியின் உயிராக, உணர்வாகக் குடியாட்சியே கோலோச்சியது. இதனாலேயே முனைவர் கிருட்டிணசாமி, முனைவர் சிமித்து போன்ற வரலாற்று வல்லுநர்கள் சோழர்களின் ஆட்சியை வானளாவப் புகழ்ந்துள்ளனர். சோழர் கால ஆட்சி முறையைத் தெள்ளத்தெளிய விளக்கவல்லது உத்தரமேரூர், உக்கல் என்ற இரு பேரூர்களிலும் காணப்படும் கல்வெட்டுக்களாகும்.

சோழ நாடு

சோழப் பெருநாடு மண்டலங்களாகவும், மண்டலங்கள் வள நாடுகளாகவும், வள நாடுகள் நாடுகளாகவும், நாடுகள் கூற்றங்களாகவும், கூற்றங்கள் குறும்புகளாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. அக்கால மண்டலங்கள் இக்கால மாநிலங்கள் (Provinces); வள நாடுகள் இக்காலப் பெருமாவட்டங்கள் (Division); நாடுகள் – மாவட்டங்கள்; கூற்றம் – வட்டம்; குறும்புகள் – பிர்க்கா என நாம் ஒப்பிடலாம். சோழ நாடு ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த மண் டலங்கள் ஒரு காலத்தில் தனி நாடுகளாக விளங்கிப் பின் சோழ மன்னர்களால் வெல்லப்பட்டு சோழ நாட்டோடு இணைக்கப்பட்டனவாகும். இந்த மண்டலங்கள் சோழ நாட்டோடு சேர்க்கப்பட்ட காலத்தில் அந்தந்த மண்டலத்தின் முன்னைய அரசர்களாலும், அரச பரம்பரையினராலும் ஆளப்பட்டுவந்தன. ஆனால் பிற்காலத்தில், அஃதாவது இராசாதிராசன் காலத்தில் சோழமன்னர் பரம்பரையினரே அந்த மண்டல அதிகாரிகளாக ஏற்படுத்தப்பட்டனர். இவ்வித மாற்றத்திற்குக் காரணம், அந்த எல்லைப்புற மண்டலத்தின் பழைய மன்னர்கள் அடிக்கடி தனியரசு பெறக் கிளர்ச்சி செய்தமையேயாகும். கருணாகரத் தொண்டைமான் போன்ற பல்லவக் குறுநில மன்னர்கள் மண்டலத் தலைவர்களாக ஏற்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் சோழ மன்னர்களின் பெயர்களே இடப்பட்டன. மண்டல அதிகாரிகளுக்கு உதவியாகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் அறிவும் அனுபவமும் திறமையுமிக்க அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர். 

கிராம மகாசபை

ஒவ்வொரு கூற்றத்திற்கும் ஒவ்வொரு மகாசபை இருந்தது. இந்த மகாசபைக்கு ஒவ்வொரு குறும்பும் (வார்டு) ஒவ்வொரு உறுப்பினரைக் குடவோலை முறைப்படி தேர்ந்தெடுத்து அனுப்பியது. யார் தேர்தலில் நிற்கலாம், யார் தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்குரிய தகுதிகளும், தேர்தல் விதிகளும் அக்காலக் கல்வெட்டுக்களில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தலில் நிற்போருக்கு இருக்க வேண்டியன :-

  1. வரி செலுத்துகின்ற அல்லது வரி விதிக்கப்பட்ட கால் வேலி நிலம்.
  2. ஒரு சொந்த வீடு.
  3. வயது வரம்பு 35-75.
  4. மந்திர – பிராமண வேதத்தைக் கற்றுக் கற்பிக்கக் கூடிய ஆற்றல்.
  5. 1/8 வேலி நிலம்; ஒரு வேதமும், ஒரு பாசியமும் கற்றுக் கற்பிக்கும் ஆற்றல்.

மேற்கூறிய தகுதிகளோடு மேலும் பெறவேண்டியன :-

(1) வேதவிதிப்படி ஒழுகுதல் (2) அறமுறைப்படி ஈட்டிய செல்வம் (3) நற்சிந்தை (4) கடந்த மூன்றாண்டுகளாக யாதொரு குழுவிலும் இல்லாதிருத்தல்.

தேர்தலுக்கு நிற்க அனுமதிக்கப்படாதவர்கள்: –

இதற்கு முன்னால் ஏதாயினும் ஒரு குழுவில் இருந்து கணக்குகளை ஒழுங்கான முறையில் ஒப்பிக்காதவர்களும் அவர் தம் உறவினர்களும்.

பிறன்மனை விழைந்தோர், இழி பெண்டிரைச் சேர்ந்தோர், பஞ்சமா பாதகம் செய்தோர்.

சாதியினின்றும் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டவர்கள்.

வாழ்நாள் முழுதும் தள்ளி வைக்கப்பட்டவர்கள்.

பிற்காலச் சோழர் ஆட்சியில் நடந்த தேர்தல் முறை வரலாற்று வல்லுநர்களைப் பெரிதும் கவர்ந்ததொன்றாகும். தேர்தல் கிரேக்க நாட்டில் நடந்ததை – ஒத்திருந்தது என அவர்கள் கூறுகின்றனர். முதலில் தலைமைக் குருக்கள், கிராமப் பெரியவர்கள் அத்தனை பேரும் தவறாமல் கோவிலில் கூடுவார்கள். ஒரு குடத்தில் தேர்தலுக்கு நிற்போர் பெயர்களைத் தனித்தனியாக எழுதிய ஓலை நறுக்குகள் கிடக்கும். பின்னர் குடம் நன்கு குலுக்கப்படும். களங்கமற்ற பளிங்கு உள்ளமும், உலகமறியாத வயதும் உடைய ஒரு சிறுவனை அழைத்துக் குடத்திலுள்ள ஓலையை எடுக்கச் செய்வர். எடுத்த ஓலையைத் தலைமைக் குருக்கள் வாங்கி அதிலுள்ள பெயரை உரக்கப்படிப்பார். அதுபோல எல்லாக் குருக்களும் படிப்பார்கள். இவ்வாறு படிக்கப்பட்ட பெயருடையவரே கிராமச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார். இவ்வாறே எல்லா உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மகாசபையின் பணிகள்

ஒவ்வொரு கூற்றத்துக்கும் ஒவ்வொரு மகாசபை இருந்தது. மகாசபைகள் அடிக்கடி அரசாங்க அதிகாரிகளால் மேற்பார்வை இடப்பட்டபோதிலும், கிராமத்தைப் பொறுத்த வரையில் அல்லது அச்சபைக்குட்பட்ட ஊர்களைப் பொறுத்த வரையில் மகாசபை முழு அதிகாரம் செலுத்திவந்தது என்னலாம். கூற்றத்தின்கண் உள்ள ஊர்களும் நிலங்களும் மகாசபைக்குக் கட்டுப்பட்டனவாக விளங்கின. பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களும், கவனிப்பாரற்ற நிலங்களும் கிராமச் சபைக்கே சொந்தமாயின. அவற்றைப் பிறருக்கு வாரத்துக்கு விட்டுக் கவனிக்க மகாசபைக்கே முழு அதிகாரம் இருந்தது. வாரத்திற்கு எடுத்தோருக்கு விவசாயம் செய்கையில் எந்தவிதத் தீங்கும் ஏற்படாதவாறு கவனிக்கும் பொறுப்பும் மகாசபையைச் சேர்ந்ததாகவே இருந்தது. மேற்கூறிய கடமைகளினின்றோ, பொறுப்புகளினின்றோ தவறிய மகாசபை அதிகாரிகள் பொதுமன்றத்தினால் தண்டிக்கப்பட்டனர்.

கோவில்களுக்காகவும், பிற அறச்செயல்களுக்காகவும் அளிக்கப்படும் பணத்தையும் நிலத்தையும் ஏற்கவேண்டியது மகாசபையின் கடமைகளுள் ஒன்றாகும். ஏற்ற பணியைச் செவ்வனே செய்யவேண்டியது மகாசபையின் பொறுப்பாகும். இவ்வித அறச்செயல்களைக் கவனிக்க மகாசபை ஆண்டு தோறும் ஒரு குழுவை ஏற்படுத்தியது. மகாசபையின் நடப்புச் செலவுக்காகப் பொது நிலங்களை விற்றதும் உண்டு. இந்தப் பணத்திலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு அரசாங்க வரியை மகாசபை செலுத்தியது. மகாசபை கோவிற்குரிய நிலங்கட்கு வரி வாங்கவில்லை. வரி செலுத்தாத நிலங்களை மகாசபையே பறிமுதல் செய்தது. ஒரு சிக்கலைத் தங்களால் தீர்க்க முடியவில்லையானால் மகாசபை அதிகாரிகள் அச்சிக்கலைத் தீர்க்கத் தலைநகரின்கண் உள்ள பெரிய அதிகாரிகளுடைய கருத்தையும் அறவுரைகளையும் வேண்டுதலும் உண்டு. இந்த மகாசபைகள் தங்களுக்கெனப் பல களஞ்சியங்களும் வைத்துக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு மகாசபையிலும் மூன்று முக்கிய குழுக்கள் இருந்தன. அவையாவன :- (1) ஆட்சிக்குழு (2) குளம் மேற்பார்வையாளர் குழு (3) தோட்டவாரியக்குழு. இவை தவிரப் பிற குழுக்களும் பணியாற்றின.

இந்த மகாசபை, வட்டாரத் தலைமை அதிகாரியான சேனாபதியால் அடிக்கடி மேற்பார்வையிடப்பட்டது. சேனாபதியின் வேலை அடிக்கடி தனக்குட்பட்ட மகாசபைகளின் கணக்கையும், வேலைகளையும் கண்காணித்தலே ஆகும். மகாசபைகளின் செலவுக்கு வழி செய்தல் இச்சேனாபதியின் கையிலே தான் இருந்தது.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்