Skip to main content

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):20

 அகரமுதல




(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 19. தொடர்ச்சி)

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):20

வீர விருதுகள்

    வீரம் செறிந்த தமிழ் நாட்டில் வாழ்ந்த சில பெருநில மன்னரும்,குறுநில மன்னரும் அரிய வீரச் செயல்களால் அழியாப் புகழ் பெற்றனர். அவர் பெற்றிருந்த பட்டங்கள் வெற்றி விருதுகளாக விளங்கின. செய்யாற்றங்கரையில் நிகழ்ந்த கடும் போரில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவன், ‘செய்யாற்று வென்றான்’ என்ற பட்டம் பெற்றான். அவ்வாறே பாலாற்றங் கரையில் நிகழ்ந்த பெரும் போரில் மாற்றாரை வென்ற வீரன் ஒருவன், ‘பாலாற்று வென்றான்’ என்று பாராட்டப் பெற்றான். செய்யாற்று வென்றான் என்பதும், பாலாற்று வென்றான் என்பதும்,ஆர்க்காட்டு வட்டத்தில் ஊர்ப் பெயர்களாக விளங்குகின்றன. நெல்லை நாட்டில் சென்றவிடமெல்லாம் செருவென்ற சிறந்த படைத் தலைவன் ஒருவன் ‘எப்போதும் வென்றான்’ என்னும் உயரிய பட்டம் பெற்றான். அப் பட்டம் இன்றும் ஓர் ஊரின் பெயராக நின்று நிலவுகின்றது.

     போர்க் களத்தில் தனித்தனியே வீரம் விளைத்துப் புகழ் பெற்ற ஆண்மையாளரும் தமிழ் நாட்டில் உண்டு. ஒரு வீரன் மாற்றார் விடுத்த அம்புகளைத் தன் நெடுங் கரத்தால் பிடித்து முரித்தான். அச் செயல் கண்டு வியந்த படைத் தலைவன், அவ் வீரனுக்குக் ‘கணை முரித்தான்’ என்ற பட்டம் அளித்தான். மற்றொரு வீரன் மாற்றார் பொழிந்த சரமாரியைக் கண்டும் அச்சமென்பது சிறிதுமின்றி மலை போன்ற மார்பில் அம்புகளைத் தாங்கி நின்றான். அவ் வீரச் செயலை வியந்து அவனைச் ‘சரந்தாங்கி’ என்று சீராட்டினார்கள். இவ்விரு பட்டங்களும் பாண்டி நாட்டில் ஊர்ப் பெயராக வழங்கு கின்றன. மலை தாங்கி என்னும் பெயருடைய ஊர் ஒன்று சேலம் நாட்டிலே காணப்படுகின்றது.

    நாட்டில் அவ்வப்போது தலைகாட்டிய கலகங்களையும், குழப்பங்களையும் அடக்கி, அரசருக்கும் குடிகளுக்கும் நலம் புரிந்த வீரர்களும் உயரிய பட்டம் பெற்று விளங்கினார். உள் நாட்டுக் கலகத்தை ஒடுக்கிய ஒரு வீரனை ‘அமர் அடக்கி’ என்றும், கொடுமை விளைத்த ஒரு கூட்டத்தாரின் கொட்டத்தை ஒடுக்கிய மற்றொரு வீரனை ‘மறன் அடக்கி’என்றும் தமிழ் நாடு பாராட்டுவதாயிற்று. இவ்விரண்டு பட்டங்களும் தஞ்சை நாட்டில் ஊர்ப் பெயர்களாக இன்றும் வழங்குகின்றன.

    தென்னார்க்காட்டில் உலகங் காத்தான் என்பது ஓர் ஊரின் பெயர்.

கானாடு காத்தான் என்பதும், மானங்காத்தான் என்பதும் பாண்டி நாட்டிலுள்ள ஊர்கள்.

   போர்க்களத்திலும் அவைக்களத்திலும் சிறந்த சேவை செய்தவர்க்குப் பழந் தமிழ் மன்னர் ஏனாதி என்ற பட்டம் வழங்கினர். நாட்டுக்கும் அரசுக்கும் நற்றொண்டு செய்து பண்டைப் பெருமக்கள் பெற்ற அப் பட்டம் சில ஊர்ப் பெயர்களில் இன்றளவும் நின்று நிலவுகின்றது. ஏனாதி மங்கலம் என்ற ஊர் தென்னார்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ளது. ஏனாதிமேடு என்பது விருத்தாசல வட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்.

    இன்னும், வீரப் பரிசாகவும், வெற்றிச் சின்னமாகவும் விளங்கும் சில ஊர்கள் தமிழ் நாட்டில் உண்டு. தஞ்சை நாட்டிலுள்ள வீர மங்கலம், பரி வீரமங்கலம், கொற்ற மங்கலம், செருமங்கலம் முதலிய ஊர்கள் அத்தன்மை வாய்ந்தனவாகத் தோற்றுகின்றன.

வெண்ணி

    சோழ நாட்டை ஆண்ட ஆதி அரசருள் தலை சிறந்தவன் திருமாவளவன் என்னும் கரிகாற் சோழன். அம்மன்னனது கொற்றத்திற்குக் கால்கோள் செய்த இடம் வெண்ணிப் போர்க்களம். சேரனும் பாண்டியனும் சேர்ந்து கரிகாலனை அழிக்கக் கருதினர்; பெரும் படை எடுத்தனர். சோழ நாட்டில் நேசச் சேனை வெள்ளம் பரந்து பாய்ந்தது. அது கண்ட சோழன் படை உருத்தெழுந்து மற்றாரை எதிர்த்தது. வெண்ணி என்னும் ஊரில் இரு திறத்தார்க்கும் நிகழ்ந்த கடும் போரில் பாண்டியன் விழுந்து உயிர் துறந்தான். நேசப் படை நிலை குலைந்து ஓடிற்று. அந்நிலையில் கரிகாலன் விட்ட அம்பு, சேர மன்னன் முதுகில் தைத்தது. மானமழிந்த சேரன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான். வெற்றி மாலை சூடிய கரிகாலன் அன்று முதல் மூன்று தமிழ் நாட்டையும் ஒரு குடைக் கீழ் ஆளத் தொடங்கினான். இங்ஙனம் கரிகாலச் சோழன் வெண்ணியிற் பெற்ற  வெற்றியைப் பாட்டில் அமைத்தனர் தமிழ்ப் பாவலர்.1

தலையாலங்கானம்

     தலையாலங்கானமும் பண்டை நாளில் ஒரு பெரும் போரைக் கண்டது. பாண்டியன் நெடுஞ்செழியன் பகையரசரை வென்று அழியாப் புகழ் பெற்ற களம் தலையாலங்கானம். ‘இளையன் என்றும், சிறியன் என்றும் என்னை இகழ்ந்துரைத்த சேர சோழ மன்னரைத் தாக்கித் தகர்த்துச் சிறை பிடித்து மீள்வேன்’ என்று செழியன் கூறிய வஞ்சினப் பாட்டு புறநானூற்றிலே காணப்படுகின்றது.2 சேர சோழ மன்னர்க்குக் குறுநில மன்னர் ஐவர் துணைபுரிந்தனர். இரு திறத்தார்க்கும் தலையாலங்கானத்தில் நிகழ்ந்த கடும் போரில் செழியன் வென்றான். எழுவரும் தோற்றனர். புவிச் செல்வமும், புலமைச் செல்வமும் வாய்ந்த நெடுஞ் செழியனைப் புலவர்கள் பாமாலை சூட்டிப் புகழ்ந்தனர். செழியனது ஆன்ற மதிப்பிற்குரியராயிருந்த மாங்குடி மருதனார் அம்மன்னைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து மதுரைக் காஞ்சி பாடினார். நற்றமிழ் வல்ல நக்கீரர் அவன்மீது நெடுநல்வாடை பாடினார். இங்ஙனம் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் தமிழ் இலக்கிய உலகத்தில் அழியாப் புகழ் பெற்றான்.

     இமய மலையில் புலிக்கொடி யேற்றிய கரிகாலன் வழிவந்த சோழர்கள் பல்லவ மன்னர்க்கு ஆறு நூற்றாண்டுகளாக அடங்கி யிருந்தார்கள். அந்த நிலையில் பல்லவ மன்னன் அபராசிதன் என்பவன் கங்கவாணனைத் துணைக் கொண்டு பாண்டி நாட்டின்மீது படையெடுத்தான். கும்பகோணத்திற்கு வட மேற்கே ஐந்து கல் தூரத்தில் மண்ணியாற்றங்கரையிலுள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்தில் பல்லவன் படைக்கும். பாண்டியன் சேனைக்கும் பெரும் போர் நிகழ்ந்தது. கங்க அரசன் வரகுண பாண்டியனாற் கொல்லப்பட்டான். இங்ஙனம் வீரப் போர் புரிந்து வீழ்ந்த கங்கவாணனுக்குத் தமிழ் நாட்டார் நாட்டிய வீரக்கல், இன்று திருப்புறம்பயத்தில் ஒரு கோவிலாக விளங்குகின்றது. அப்போரில் பல்லவன் வெற்றி பெற்றான் ஆயினும், அது பெயரளவில் அமைந்ததே யன்றிப் பயன் அளித்ததாகத் தோன்றவில்லை. பல்லவர் ஆட்சி நிலை குலைவதற்கும், சோழரது ஆட்சி மீண்டும் சோழ மண்டலத்தில் நிலை பெறுவதற்கும், காரணமாயிருந்த திருப்புறம்பயப் போர் தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு பெரிய நிகழ்ச்சியாகும். அப் போரின் விளைவாகத் தஞ்சை மாநகரில் ஆதித்த சோழன் மணி முடி சூடி அரசாளும் பெருமை எய்தினான். அவன்வழி வந்த பெரு மன்னர் தஞ்சைச் சோழர் என்று பெயர் பெற்றுத் தமிழ் நாட்டுக்கு ஏற்றமும் தோற்றமும் அளிப்பாராயினர்.

 (தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

7. வெண்ணிக் குயத்தியார் கரிகாற்சோழனது வெற்றியை வியந்து பாடிய செய்யுளைப் புறநானூறு, 66 – இல் காண்க.
8. புறநானூறு, 72.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்