பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5 தொடர்ச்சி)
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1
மோனைப்புலவன் – அல்லி
கலித்தாழிசை
மோனை : மேற்றிசையில் ஒளிகுறைய
மேகங்கள் கருத்துவர
தோற்றந்தான் மிகுந்தமயில்
தோகையை விரித்தாட
காற்றினிலே குயிலோசை
கனிவைமிக எழுப்புகையில்
வேற்றாளாய் எனைவிலக்கி
விரைந்துநீ செலலாமோ
ஆதவனும் மேற்றிசையில்
அழகொளியைப் பரப்பிவிட
போதினையே மலர்த்தியங்கே
புகுகின்ற வண்டுதானும்
காதலையே மிகுத்தளிக்கக்
கையேந்தி நான்நிற்க
சாதலையே எனக்காக்கிச்
சடுதியில்நீ செலலாமோ
தாதையாம் சூரியனும்
தயக்கமுடன் மறைந்துசெல்ல
காதலனாம் வெண்மதியும்
கருமேகந் தாண்டிவர
கோதையாள் அல்லியுந்தான்
குறுநகையா யிதழ்விரிக்க
வேதனையில் எனைவீழ்த்தி
விரைந்துநீயும் செலலாமோ
அல்லி : பெற்றோரும் மகிழ்ந்திருக்க
மற்றையோர் சூழ்ந்திருக்க
கற்றோரும் வாழ்த்துரைக்கக்
கலியாணஞ் செய்யாமல்
புற்றில்வாழ் பாம்பாகப்
போக்குபெரு மூச்சிரைக்க
பற்றாது நன்னெறியைப்
பதைப்புறுதல் நன்றாமோ
ஆதியான வழக்கப்படி
ஆன்றோர்தம் முன்னிலையில்
தீதில்லா வதுவையினைச்
செய்தெனைக் கொள்ளாமல்
வீதியிலே வழிமறித்து
வீண்வம்பு பலசெய்து
மேதிபோலப் பாதையிலே
மேவுதலும் நன்றாமோ
கனியும் நாளிருக்கக்
காவலும் எனக்கிருக்க
முனியும் சொற்கூறி
முன்வழி விலக்குகிறாய்
துணிவை நெஞ்சிறுத்தித்
தூய்மை வெளியகற்றி
பனியிலே ஏர்பூட்டும்
பரபரப்பு நன்றாமோ
அறுசீர் விருத்தம்
மோனை : மன்னன் மகளும் மற்றாங்கே
மாத்தமிழ் யாப்பு முடித்திலளோ
சின்னவன் உதாரன் செப்புமொழி
சேர்ந்து பயிலல் தீங்கன்றோ
உண்ணெகிழ் அன்பால் உரைக்கின்றேன்
உறுவ தெண்ணிக் காத்திடவே
எண்ணம் எனக்குத் தீங்கில்லை
எள்ளத் தனையுங் காழ்ப்பில்லை
அல்லி : கழையைக் கையில் பற்றியவன்
கயிற்றின் மேலே நடப்பதுவாய்
பழைய யாப்பை மறவாமல்
படைப்புத் திறனுங் குன்றாமல்
உழையே இருக்குங் கன்னிகையை
உள்ளத் தாலும் தீண்டாமல்
விழையுந் தமிழில் நாள்தோறும்
விளைக்கு மின்பம் பலவாகும்
எண்சீர் விருத்தம்
மோனை : குற்றால அருவியிலே
குளிர்ச்சி போமோ
கொஞ்சுத்தமிழ்ப் பாட்டினிலே
இனிமை போமோ
வற்றாது காவிரியில்
வரத்துண் டானால்
வளமையிலே தஞ்சைதான்
குறைந்து போமோ
பற்றாது செந்நெறியைப்
பணத்தைத் தேடும்
பாவியவன் நெஞ்சத்தில்
நடுக்கம் போமோ
முற்றாத கன்னியவள்
மனக்கு ளத்தில்
முளைக்குமொரு காதல்மலர்
அற்றுப் போமோ
அறுசீர் விருத்தம்
அல்லி : உன்னை யறிவேன் நன்றாக
உள்ள முணர்வேன் ஒன்றாக
தின்னுஞ் சோற்றுக் கேற்றபடித்
தினமுங் காவல் பூணுகிறேன்
மன்னும் அரசுக் கிளையவளும் மனத்தில் வெண்மை கொண்டவளே
கன்னல் தமிழைப் பயிற்றுகிற
கவிஞன் செம்மை மிக்கவனே
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Comments
Post a Comment