Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 25

 அகரமுதல




(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 24 தொடர்ச்சி)

பழந்தமிழ்

இவர்கள் ஆரியர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னால் வாழ்ந்தவர்களாவார்கள் என்று கூறலாம். ஒரு சிலர் அவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய காலத்திலோ அக்காலத்தை ஒட்டிப் பின்போ வாழ்ந்திருக்கலாம். சிலர் பெயர்களும் பாடல்களுட் பயின்ற சில சொற்களும் வடமொழியைச் சார்ந்தன என்று கருதப்பட்டன. தேவன், பூதன், கீரன் முதலியனவற்றை வடசொற்கள் என்றே கருதியோரும் உளர். இவையெல்லாம் தூய தமிழ்ச்சொற்களே. தேவன் என்ற சொல் இனியன், விருப்பத்திற்குரியன், இடத்திற்குரியன் என்னும் பல பொருளினது. பூதன், பூதம்  என்ற தமிழ்ச் சொல்லினடியாகத் தோன்றியது. பூதம் தோன்றுதற்குரியது என்னும் பொருளினது. மூலம் என்னும் பொருள் தரும். ஐம்பூதங்கள் உலகத்திற்குரிய மூலப்பொருள்களல்லவா? கீரன் என்ற சொல் கீர் என்பதைப் பகுதியாக உடையது. கீர் என்பது தோண்டுதல், பிளத்தல், பகுத்தல் என்னும் பல பொருள்களைத்தரும். சொற்களைப் பகுத்துக் காண்போன், தொடர்களைப் பகுத்துக் காண்போன், மெய்யையும் பொய்யையும் பகுத்துக் காண்போன் என்னும் பொருள்களில் கீரன் என்னும் சொல் தோன்றியிருக்கலாம். கீரன் என்னும் பெயர் பெருவழக்காக இருந்துள்ளது. ஆதலின் தமிழ்ச்சொல் என்பதில் ஐயமின்று. குமரன் என்பதும் தமிழ்ச்சொல்லே. குமரி பெண்பால். குமரிமுனையும், குமரிநாடும், குமரி மலையும், குமரியாறும், குமரிக்கண்டமும் ஆரியர் வருகைக்கு முன்னே, ஏன் அவர்கள் தோன்றுவதற்கு முன்னே தமிழர் பெற்றிருந்தவையாகும். குமரி தமிழ்ச் சொல்லன்று என்று எவரும் கூறார். அதன் ஆண்பாற் சொல்லே குமரன் என்பதாம். இவையிரண்டும் பின்னர் வடமொழிக்கண் சென்று குமாரி என்றும் குமாரன் என்றும் உருப்பெற்றன.

  புலவர் பெயர்களுள் பல சிதைவுற்றும் உள்ளன. சில பெயர் ஆர் விகுதியை இழந்துள்ளன. சில பெயர்களில் னகரம் ளகரமாகவும், ளகரம் னகரமாவும் மாறியிருக்கலாமோ என ஐயுறும் நிலையில் சிதைந்துள்ளன.

  இவர்களுள் அம்மூவனார், ஓதல் ஆந்தையார் எனும் இருவருமே நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை உடையவராய் உள்ளனர். கயமனார் பாடல்கள் இருபத்து மூன்று. பத்தும் அதற்கு மேலும் பாடியுள்ளார் அழிசி சாத்தனார், இடைக்காடனார், இளங்கீரந்தையார், குடவாயிற் கீரத்தனார், குன்றியனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், வெள்ளி  வீதியார் ஆவார். ஏனையோர் பத்துக்கும் குறைவான பாடல்களை உடையோ ராவார். நூற்று எண்பத்தேழு புலவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலையே பெற்றுள்ளனர். ஒரு புலவர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரே பாடலைத்தானா இயற்றியிருப்பர்! தொகை நூல்களைத் தொகுத்தவர்கள் ஒவ்வொன்றினையே பொறுக்கி எடுத்துக்கொண்டனர் போலும், பின்னர் எஞ்சியன போற்றுவாரின்றி அழிந்து விட்டன போலும்.

 ஆரியர் வருகைக்கு முன்னர் வாழ்ந்த புலவர்களுள் இருநூற்றெழுபதுக்கு மேற்பட்டவர்கள் பற்றியும், பாடிய பாடல்களுள், எண்ணூற்றுறுபதுக்கு மேற்பட்டன பற்றியும் பாட்டாலும் தொகையாலும்  நாம் அறிய இயலுகின்றது. அங்ஙனமாகவும் ஆரியச் செல்வாக்குக் குட்படாத பழைய இலக்கியம் எதனையும் நாம் தமிழ்மொழியில் பெற்றிலோம்1 என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்?

 ஆரியர் தமிழகத்திற்கு வந்த காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் என்று வரலாற்று ஆசிரியர்கள் வரையறுத்துள்ளனர். தொல்காப்பியர் வாழ்ந்த காலமும் கி.மு. ஏழாம் நூற்றாண்டு அளவில் இருக்கக்கூடும் என்று துணிய இயலுகின்றது. தொல்காப்பியர் தமக்கு முன்புள்ள நூல்களை ஆராய்ந்தே தம் நூலை இயற்றியுள்ளார் என்பது அவருடைய நூலாலேயே அறியக் கிடக்கின்றது. ஆதலின் தமிழிலக்கியம் தோன்றி வளர்ந்த காலம் கிருத்து பிறப்பதற்குப் பல

++

1.We have at present  no traces of any literary work in the Tamil Language, however ancient, which does not betary Sanskrit influence to some extent. K.A. Neelakanta Sastri – The Pandyan Kingdom – Page 2.

++

நூற்றாண்டுகட்கு முன்பாகும் என்று முடிவுகட்ட முடிகின்றது. ஆனால் ஆராய்ச்சி அறிஞர் வையாபுரிப் பிள்ளை சங்ககாலப் புலவர் எவரும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் அல்லர் எனக் கூறுகின்றார்.இக் கூற்று உண்மை நிலைக்கு மாறுபட்டது என்பதை எவரும் தெள்ளிதில் அறியலாகும்.

   தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள பல கருத்துகள் வடமொழி நூல்கள் பலவற்றுள் காணப்படுகின்றதாகக் கூறி அவ்வாறு காணப்படுவதனால் தொல்காப்பியம் அந் நூல்களுக்கு எல்லாம் பிற்பட்டது என்று முடிவு கட்டியுள்ளார் ஆராய்ச்சியறிஞர் வையாபுரிப்பிள்ளை. தொல்காப்பியர் கூறியுள்ள எண்வகை மெய்ப்பாடுகளும், பரதமுனிவர் நாட்டிய நூலில் கூறியுள்ள முறையைப் பின்பற்றியதாகும் என்று  கூறி அதனால் பரதமுனிவர் காலமாம் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது தொல்காப்பியர் காலம் என்று வரையறுத்துள்ளார்.3 பின்னர் எவ்வகையால் நோக்கினும் ஆசிரியர் தொல்காப்பியர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்ளுதல் பொருந்தும் எனத் தோன்றுகிறது4 என்று முடிவு கட்டிவிட்டார் அப் பேரறிஞர்.

 உலகியல், அறிவியல், கலை இயல் உண்மைகளை வடமொழி யாளரே கூறும் தகுதியுடையார் என்று கருதிவிட்டார் அவர். தமிழ்நூலார் கூறிய பின்னர் வடநூலாரும் கூறியிருத்தல் கூடுமென்று எண்ணிப் பார்க்க அவர் மறந்துவிட்டார். தொல்காப்பியர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராய் இருப்பின் தொல்காப்பியம் கூறும் விதிகள் பல சங்க இலக்கியங்களோடு மாறுபடக் காரணம் இல்லை. முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிச் செய்யப்பட்ட அந் நூலில் சங்க இலக்கியங்களின் இயல்புக்கேற்ப இலக்கண விதிகள் கூறப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்

+++

2. No post of Sangam age seems to be earlier than the Second Century A.D. – History of Tamil Language and Literature – Page 22

3. தமிழ்ச்சுடர் மணிகள்  பக்கம் 53.  

4.தமிழ்ச்சுடர் மணிகள் பக்கம் 54

++

என்பதுதானே வரன்முறை. அவ் வரன்முறை அறிந்துதானே தொல்காப்பியர் தம் நூலை ஆக்கியுள்ளதாகப் பனம்பாரனார் கூறியுள்ளார். அவர் கூறியது என்பதும் பிற்காலத்தார் பொய்க் கூற்றாகும் என்று புறத்தே தள்ளிவிட்டாலும், தொல்காப்பியர்  தம் கால மொழிநிலை அறியாது நூல் இயற்றிவிட்டார் என்று கூறும் இகழற்பாட்டுக்கு ஆசிரியர் தொல்காப்பியரை ஆளாக்குவது அறிவுடைமை யாகுமா? அன்றியும் மொழி நிலையை விடுத்து மக்கள் வாழ்க்கை நிலையை எடுத்துக்கொளினும் தொல்காப்பியர் கூற்றோடு முரண்படக் காணலாமே. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகம் குழப்ப நிலையில் இருந்தது. தமிழகத்தின் இருண்ட காலமென அதனை அழைப்பர். தமிழகம் மூவேந்தர்கள் ஆட்சியினின்றும் நீங்கிக் களப்பிரர் எனும் அயலவர் ஆட்சியில் சிக்குண்டு அல்லல் பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு பாலியும் பிராகிருதமும் செல்வாக்குப் பெற்றிருந்த காலம் என்பர் அதனை. தொல்காப்பியர், தம் நாட்டை வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று வாயார அழைக்கின்றார். ஆதலின் தொல்காப்பியர் தமிழ் வேந்தர் ஆட்சி பெற்றிராத இருண்ட காலத்தில் வாழ்ந்தவராகார். தமிழ்வேந்தர் சிறப்பாக ஆண்ட புகழ்மிக்க காலத்தில்தான் அவர் வாழ்ந்திருக்க வேண்டுமென்பதில் எட்டுணையும் ஐயம்கொள்ள இடமின்று.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்