Skip to main content

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):21

 அகரமுதல






(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 20. தொடர்ச்சி)

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):21

 4. குலமும் கோவும்

     பழந் தமிழ் நாட்டில் பல வகுப்பார் வாழ்ந்திருந்தார்கள்; பல குல மன்னர் ஆட்சிபுரிந்தார்கள். அன்னார் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் பெயரும் பெருமையும் ஊர்ப் பெயர்களால் விளங்குகின்றன.

நாகர்

     நாகர் என்பார் ஓர் இனத்தார். தமிழ் இலக்கியங்களில் நாகநாடு செல்வமும் அழகும் வாய்ந்த சிறந்த நாடாகக் குறிக்கப்பட்டுள்ளது.சோழ மன்னன் ஒருவன் நாக மங்கையை மணந்து பெற்ற மைந்தனே தொண்டைமான் என்னும் பெயரோடு காஞ்சி மாநகரில் அரசாண்டான் என்று பண்டைக் கதை கூறும்.2 அன்றியும், தமிழ் நாட்டில் நிறுவப் பெற்ற தலைச் சங்கத்தில் முரஞ்சியூர் முடி நாகராயர் என்பார் சங்கப் புலவருடன் வீற்றிருந்து முத்தமிழை வளர்த்தார் என்று தெரிகின்றது. இன்னும், கடைச் சங்கப் புலவர்களில் நாகன் என்னும் பெயருடையார் சிலர இருந்தனர். நன்னாகன், இளநாகன், வெண்ணாகன் என்னும் மூவரும் பாடிய பாடல்கள் பழந் தொகை நூல்களிற் சேர்க்கப்பட்டுள்ளன, தமிழ் நாட்டிலுள்ள நாகப்பட்டினம், நாகர்கோவில் முதலிய ஊர்களின் பெயர்களில் நாகர் நாமம் விளங்குகின்றது.

அருவர்

    அருவர் என்பார் மற்றொரு குலத்தார். அவர் வாழ்ந்த நாடு அருவர் நாடு  என்று பெயர் பெற்றது. அந்நாடு ஆந்திர நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடை நடுவே அமைந்திருந்தது. அன்னாருடன் பழகிய ஆந்திர நாட்டார் தமிழர் எல்லோரையும் அருவர் என்றே குறித்தார்கள். இதற்குச் சான்று கலிங்கத்துப் பரணியில் உண்டு. குலோத்துங்க மன்னன் ஆணைப்படி ஆந்திர தேசத்திலுள்ள கலிங்க நாட்டின் மீது படையெடுத்த தமிழ்ச் சேனையைக் கண்டபோது,

       “ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடநாடர்

       அருவர் அருவரென அஞ்சி

ஓடினர் எனப் பரணிக் கவிஞர் பாடியுள்ளார். அருவர் பேசிய தமிழ் மொழியைத் தெலுங்கர் அருவம் என்றார்கள். அதுவே பிற்காலத்தில் அரவம் என்றாயிற்று.3 அருவர் நாட்டைக் கொடுந் தமிழ் நாடுகளில் ஒன்றாகத் தமிழ் இலக்கண நூலோர் கூறினர். இக் காலத்தில் அருவர் தமிழ் நாட்டிற் காணப்படவில்லை. ஆயினும், திருச்சி நாட்டிலுள்ள அரவக்குறிச்சி என்ற ஊரும், நீலகிரியிலுள்ள அரவங்காடு என்னும் இடமும் அருவரோடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

     மழவர் என்பார் மற்றொரு பழைய குலத்தார் ஆவர். அன்னார் சிறந்த படை வீரர்.4 முடிவேந்தர்களும் அவர் உதவியை நாடினர். அக்குலத்தார்க்கும், தமிழ் இரச குலத்தார்க்கும், உறவு முறையும் இருந்ததாகத் தெரிகின்றது. தஞ்சை நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று அக் குலத்தார் பெயரைத் தாங்கி நிற்கின்றது.

      “மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே

      மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

என்று தேவாரத்திற் பாடப்பெற்ற மழபாடி என்னும் ஊர் மழவரால் உண்டாக்கப் பட்டதாகும். மழவர் பாடி என்பது மழபாடியாயிற்று.5

     திரையர் என்பார் இன்னொரு பழந் தமிழ் வகுப்பார். திரை கடலின் வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர். தொண்டை நாட்டை யாண்ட பண்டை யரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர் பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி அரசாண்ட இளந் திரையைனைத் தலைவனாக வைத்து உருத்திரங்கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார்.6

     இன்னும், தொண்டை நாட்டில் திரையர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் பெயரால் திரையனேரி என்னும் ஊர் உண்டாயிற்று. அதுவே இப்பொழுது செங்கற்பட்டு நாட்டில் தென்னேரியாக விளங்குகின்றது.7

     முத்தரையர் என்னும் பெயர் வாய்ந்த பண்டைக் குலம் ஒன்று பழந் தமிழ் நூல்களிலே பேசப்படுகின்றது. அவரும் சிறந்த படைவீரராக விளங்கினார். அக்குலத்தைச் சேர்ந்த வள்ளல்களின் பெருமையை நாலடியார் என்னும் பழைய நீதி நூல் பாராட்டுகின்றது. அன்னார் குணநலங்களை வியந்து, “முத்தரையர் கோவை” என்ற நூலும் இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது.8 சாசனங்களில் சத்துரு பயங்கர முத்தரையன், பெரும் பிடுகு முத்தரையன்  முதலியோரின் வீரச் செயல்கள் குறிக்கப்படுகின்றன. இராமநாதபுரத்திலுள்ள முத்தரசன் என்னும் ஊரும், தஞ்சை நாட்டிலுள்ள முத்தரசபுரமும் திருச்சி நாட்டிலுள்ள முத்தரச நல்லூரும் அக்குலத்தாரது பெருமையைக் காட்டுவனவாகும்.

முனையர்

    முனையர் என்ற குலத்தாரும் பழந் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள். அவர் சிறந்து வாழ்ந்த இம் முனைப்பாடி என்று பெயர் பெற்றது.9 அவ்வூரைத் தன் அகத்தே கொண்ட நாடு திருமுனைப்பாடி நாடு. தேவாரம் பாடிய மூவரில் இருவரை ஈந்தது அந் நாடே. சுந்தரர் வாழ்ந்த காலத்தில் நரசிங்க முனையர் என்னும் சிற்றரசன் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டு வந்ததாகத் திருத் தொண்டர் புராணம் தெரிவிக்கின்றது.10

பாணர்

    பாணர் என்றும், வாணரென்றும் பெயர் பெற்ற குடியினர் பெரும்பாணப்பாடி என்னும் நாட்டை நெடுங்காலம் ஆண்டு வந்தனர். முனையர் பெயரால் முனைப்பாடி எழுந்தாற் போன்று, பாணர் பெயரால் பெரும் பாணப்பாடி உண்டாயிற்று. அதன் தலை நகரம் நிவா நதிக் கரையிலுள்ள திருவல்லம் என்னும் தீக்காலி வல்லம் ஆகும். வாணபுரம் என்ற மறு பெயரும் அதற்குண்டு. அந் நகரின் அருகே பாண மன்னர் வெட்டிய ஏரியும், அதைச் சார்ந்த ஊரும் வாண சமுத்திரம் என்று பெற்றன. இன்னும், வட ஆர்க்காட்டில் சோழிங்கருக்கு அண்மையிலுள்ள பாணவரம் என்ற ஊரும் பாணர் குடியை நினைவூட்டுகின்றது.11

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

1. சிலப்பதிகாரம், மங்கல வாழ்த்து, 19-20

2. மணிமேகலை, 24, 30-61

3. அரவம் என்பதைக் குறித்து வழங்கும் பலகொள்கைகளைக் காலுடுவெல் ஒப்பிலக்கணத்தின் முடிவுரையில் காண்க.

4. புறநானூறு, 88, 90.

5. பாடல் பெற்ற திருமழபாடியை மழுவாடி என்று சில சாசனங்கள் குறிக்கின்றன. “மழபாடி மேய மழுவாளனார்” எனத் திருநாவுக்கரசர் பாடுதலால் மழபாடிக், கோயிலில் மழுவாடி அமர்ந்தருளும் தன்மை அறியப்படும். ஆகவே, மழபாடி என்பது ஊர்ப் பெயர்; மழுவாடி என்பது அங்குள்ள நாதன் நாமம். கொள்ளிட நதி வளைந்து செல்லும் இடத்தில் அழகுற அமைந்துள்ள மழபாடிக் கோயிலைப் “புனல்வாயிற் கோயில்” என்று சாசனம் குறிக்கின்றது. 98 of 1920.

6. தொண்டைமான் இளந்திரையன் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் உண்டு. புறம், 185.

7. திரைய மங்கலம் என்ற ஊர், செங்கற்பட்டுக் காஞ்சிபுர வட்டத்தில் உள்ளது.

8. தஞ்சை நாட்டு முத்தரையரைப்பற்றி நீலகண்ட சாத்திரியார் எழுதிய ‘சோழர்’ முதற்பாகம், 133, 134-ஆம் பக்கங்களிற் காண்க.

9. மழவர்பாடி, மழபாடி என்று பெயர் பெற்றாற் போன்று முனையர்பாடி, முனைப்பாடியாயிற்று.

10. “நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர்” – தடுத்தாட்கொண்ட புராணம், 5.

11. S.I.I. Vol III, Part I. p.99.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்