இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 27
அகரமுதல ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 29 January 2023 ( இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி ) ‘பழந்தமிழ்’ 7. பழந்தமிழ் நிலை தமிழ்மொழியின் தொடக்க காலத்தில் ஐ, ஔ நீங்கிய பத்து உயிர்களும், ற, ன நீங்கிய பதினாறு மெய்களும் இருந்திருக்கக் கூடும் எனக் கருதலாம். ஐ என்பதை அ இ எனவும் அய் எனவும், ஔ என்பதை அ உ எனவும் அவ் எனவும் எழுதியும் ஒலிக்கலாம் என்று தொல்காப்பியர் கூறுகின்றனர். ஆகவே ஐ யும் ஔ வும் கூட்டொலிகளாகின்றன . ற என்பது ல்+த சேருங்கால் உண்டாகக் காண்கின்றோம். புல்+தரை=புற்றரை. ன என்பது ல்+ந சேருங்கால் தோன்றக் காண்கின்றோம். புல்+நீர்=புன்னீர். ஐ, ஔ என்பவற்றை உயிர் எழுத்துகளின் கடைசியிலும், ற, ன, என்பவற்றை மெய்யெழுத்துகளின் கடைசியிலும் வைத்துள்ளமை இவ் வெழுத்துகளின் தோற்றக் காலத்தின் பிற்பட்ட தன்மையை அறிவிப்பதாகும். ஆயினும் தொல்காப்பியர் காலத்துக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே இவை தோன்றி எழுத்து வரிசையில் இடம்பெற்றுவிட்டன என்பதில் ஐயமில்லை. தொல்காப்பியர்...