Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 80

 அகரமுதல





(குறிஞ்சி மலர்  79 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்  28 தொடர்ச்சி


“இது தொடங்கி எத்தனை நாளாயிற்று முருகானந்தம்?”

“நாலு நாளைக்கு முன்னால்தான் திறப்பு விழா எல்லாம் பிரமாதமாகத் தடபுடல் செய்தார்கள். பருமாக்காரர்தான் திறந்து வைத்தார்.”

“ஊம்! இனிமேல் இது ஒரு புது வம்பா?” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டவாறே அச்சகத்துக்குள் நுழைந்தான் அரவிந்தன். முருகானந்தமும் பின் தொடர்ந்தான். அன்று இரவு அரவிந்தனுக்கு உறக்கமே இல்லை. பருமாக்காரரைப் போல் வசதியுள்ளவர்கள் ஒருவர் மேல் பகைமை முற்றி வைரம் பெற்றுவிட்டால் திட்டத்தோடும், தீர்மானத்தோடும், கெடுதல் செய்து விரைவாக அழிக்க முடியும். ஏழையும், ஏழையும் பகைத்துக் கொண்டால்தான் தெருவில் நின்று ஒருவருக்கொருவர் குடுமியைப் பிடித்து அநாகரிகமாகக் கன்னத்தில் அறைந்து கொண்டிருப்பார்கள். வசதியுள்ளவர்கள் பகைவனைப் பழி வாங்குவதில் கூட அழுக்குப்படாமல் நாகரிகமாகப் பழி வாங்குவார்கள். இப்போது பருமாக்காரர் அப்படிப்பட்ட முறையில்தான் பழிவாங்கத் தொடங்கியிருக்கிறார் என்று அரவிந்தனுக்கு ஒருவாறு விளங்கியது. ‘மீனாட்சிசுந்தரம் சாகவில்லை! இத்தகைய வேதனைகளால் சாகடிக்கப்பட்டிருக்கிறார். இந்த வேதனைகளால் அவருடைய மனத்தை அணுஅணுவாகக் கொன்று துடிதுடிக்கச் செய்திருக்கிறார்கள்’ என்பதையும் அவன் இப்போது தெளிவாக உணர்ந்து கொண்டான்.

அன்று இரவு அச்சகத்தில், மீனாட்சிசுந்தரம் இறந்த வேதனையையும் சுற்றிலும் உருவாகும் பகைகளையும் எண்ணிக்கொண்டே உறக்கமின்றித் தவித்த அவன் மனத்தில் முடிவாக ஒரு வைராக்கியம் உண்டாயிற்று. ‘இவர்களை நான் பழிவாங்க விரும்பவில்லை. ஆனால் பாடம் கற்பிக்க விரும்புகிறேன். பாடம் கற்பித்தே தீருவேன்’ என்று மனத்துக்குள் உறுதி செய்து கொண்டான் அவன். மீனாட்சிசுந்தரம் காலமாகிவிட்டார் என்பதற்காக முன்பு செய்திருந்த எந்த ஏற்பாட்டையும் அரவிந்தன் நிறுத்தத் தயாராயில்லை. ‘பூரணியைத் தேர்தலிலும், அரசியலிலும் ஈடுபடச் செய்வது நல்லதன்று’ என்று அவரிடம் அன்றைக்கு வாதாடினான் அவன். இப்போதோ அதைப் பற்றி அவனே தன் கருத்தை மாற்றிக் கொண்டு, ‘முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடா’தென்று உறுதியாகியிருந்தான்! அவன் கருத்து மாறுவதற்குக் காரணமாயிருந்தவை பருமாக்காரரின் சூழ்ச்சிகள்தாம். ‘இந்த ஊரில் என் விருப்பத்தை மீறி ஒரு துரும்பு அசையாது. உங்களையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்ற ஆள் பலமும், பண பலமும் என்னிடம் இருக்கின்றன’ என்று அன்றொரு நாள் தம் மாளிகைக்கு அழைத்துப் போய் அவனை மிரட்டி அனுப்பி இருந்தாரே பருமாக்காரர்; ஆணவத்தோடு கூடிய அந்த மிரட்டலை அவன் அதற்குள் எப்படி மறந்துவிட முடியும்? அவருடைய கருத்துக்கு இணங்க மறுத்த தன்னை அடித்துக் கீழே தள்ள ஆள் ஏவி விட்டாரே; அதையும் அவன் மறந்துவிடவில்லை. ‘பெட்டி நிறையப் பணமும், மனம் நிறைய அயோக்கியத்தனமும், உடல் நிறைய ஒழுங்கீனமுமாகத் திரியும் இம்மாதிரிப் பெரிய மனிதர்களைச் சரியானபடி முகமூடியைக் கிழித்தெறிந்து சமூகத்துக்குக் காட்டிவிட வேண்டும்’ என்று முருகானந்தம் ஆவேசமாகக் கொதித்துப் பேசுவது போல் அரவிந்தன் இவர்களைப் பற்றி வாய் அலுக்கக் கண்ட இடங்களில் பேசிக் கொண்டு திரிவதில்லை. ‘இவர்கள் கெட்டவர்கள்; அதற்காக இவர்களை நான் அழிக்க விரும்பவில்லை. இவர்களுடைய கெடுதல்களைத்தான் அழிக்க விரும்புகிறேன்‘ என்று மனத்தில் இவர்களைப் பற்றி ஒரு சிவப்புப் புள்ளி போட்டு நினைவு வைத்துக் கொண்டான்.

மீனாட்சிசுந்தரம் காலமாகி ஒரு மாதத்துக்குப் பிறகு காரியங்களெல்லாம் முடிந்து ஓய்வடைந்த பின் அமைதியான நிலையில் ஒரு நாள் திருமதி மீனாட்சிசுந்தரத்தினிடம் அச்சக நிருவாகம் பற்றிக் கலந்தாலோசித்தான் அரவிந்தன்.

“வழக்கம் போல் எல்லாம் நடக்கட்டும். புதிதாக நான் என்ன சொல்லப் போகிறேன்? எனக்கு நல்லதைத்தான் நீ செய்வாய். எல்லாப் பொறுப்பையும் ஒப்புக் கொண்டு நம்பிக்கையாய்ச் செய்வதற்கு உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் எங்களுக்கு? எல்லாம் நீ பார்த்துச் செய்தால் எனக்குத் திருப்திதான்” என்று கூறிவிட்டார் திருமதி மீனாட்சிசுந்தரம். மீனாட்சிசுந்தரத்தைப் போலவே இந்த அம்மாளும் பெருந்தன்மையான மனம் கொண்டவர் என்பதை அரவிந்தன் அறிவான்.

அருகருகே இரண்டு அச்சகங்கள் இருந்தால் தொழில்முறைப் போட்டிகளும், வம்பு வழக்குகளும் ஏற்படாமலா இருக்கும்? ஒவ்வொரு வம்பாகத் தலை காட்டியது. ஒரு நாள் காலை மீனாட்சி அச்சகத்து முன் அறையில் அரவிந்தனும் முருகானந்தமும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது நாட்டுப்புறத்து மனிதர் ஒருவர் திருமண அழைப்பிதழ் அச்சிட வேண்டுமென்று வந்தார். உயர்ந்த காகிதத்தில் இரண்டு வண்ணத்தில் ஆயிரம் பிரதிகள் அச்சிட என்ன செலவாகும் என்று கேட்டார். அரவிந்தன் ஒரு துண்டுக் காகிதத்தில் கணக்குப் போட்டுக் கூட்டி அவரிடம் தொகையைச் சொன்னான்.

“அடுத்தாற் போல் இருக்கிற ‘காமாட்சி பிரசில்‘ நீங்க சொல்றதுலே சரிபாதித் தொகைக்கு அச்சடித்துத் தாராங்களே ஐயா! இதென்ன அநியாயமாப் பணம் கேட்கிறீங்க” என்று கோபித்துக் கொண்டு எழுந்து போய்விட்டார் வந்த மனிதர். மறுநாள் அதே நாட்டுப்புறத்து மனிதர் காமாட்சி அச்சகத்தில் அச்சிட்டு வாங்கிக் கொண்ட அழைப்பிதழ்களுடன் மீனாட்சி அச்சகத்தில் ஆத்திரத்தோடு நுழைந்து “இதோ பாருங்க, ஐயா! இந்த பத்திரிகையை, நேற்று நீங்க சொன்னதுலே பாதி ரேட்டுக்குத்தான் காமாட்சி பிரசுகாரன் அடிச்சுத் தந்திருக்கிறான்? இதற்கு என்ன குறை வந்திருச்சாம்” என்று அரவிந்தனிடம் ஒரு பத்திரிகையை எடுத்துக் காட்டிக் கூச்சல் போட்டார். அவர் காட்டிய பத்திரிகையைக் கையில் வாங்கிக் கொண்டு, “கொஞ்சம் உட்காருங்கள், பெரியவரே!” என்று சமாதானம் கூறி அவரை உட்கார வைத்துவிட்டு அந்த அழைப்பிதழைப் படிக்கலானான் அரவிந்தன்.

“எனது மகள் திருநிறைச்செல்வி மரகதத்துக்கும் மேல்ப்புத்தசரம்… மகன் திருநிறைச்செல்வன் கந்தசாமிக்கும் நடைபெற இருக்கும் மரண வைபவத்துக்குத் தாங்கள் சுற்றமும் உரவும் புடைசூழ வந்திருந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்யுமாறு வேண்டிக்கொல்லுகிறேன்” என்று அச்சிடப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் அரவிந்தனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. அடப்பாவிகளா? கை கூசாமல் ‘மண வைபவத்தை மரண வைபவம்’ என்று அடித்துக் கொடுத்திருக்கிறீர்களே என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டான். பிழையான பகுதிகளை அடியில் சிவப்புமையால் கோடிட்டு அந்தப் பெரியவரிடம் கொடுத்து “ஐயா பெரியவரே! திருத்தியிருக்கிற இடங்களையெல்லாம் படியுங்கள். இந்த மாதிரித் திருமணப் பத்திரிகைகளில் கொலைச் செய்தி அச்சடித்துத் தருகிற அளவு அலட்சியமாக எங்கள் அச்ச்கத்தின் வேலை நடக்காது. நாங்கள் பிழையில்லாமல் பொறுப்போடு நன்றாக அச்சிட்டுத் தருவோம், அதனால் எங்கள் தொகையும் சிறிது அதிகமாகத்தான் இருக்கும்” என்று சிரித்தவாறே சொல்லிவிட்டான். அழைப்பிதழைக் கூர்ந்து படித்ததும் நாட்டுப் புறத்து மனிதரின் முகமும் கடுங்கோபம் நிறைந்ததாக மாறிற்று.

“படுபாவிப் பயல்கள்! மூஞ்சியில் நெருப்பை அள்ளி வைக்க. இப்படியா அச்சடிப்பானுக? இவனுக வீட்டிலே எழவு விழுக. கையிலே கொள்ளியைத்தான் வைக்கணும்” என்று கூறிக் கொண்டே ஆத்திரத்தோடு வெளியேறிக் காமாட்சி அச்சகத்துக்குப் போர் தொடுக்கக் கிளம்பினார் அவர். இன்னொரு முறை ஏதோ ஓர் இடத்தில் பாரதி விழா அமைத்திருந்தவர்கள் நிகழ்ச்சி நிரல் அச்சடிக்க வந்தார்கள். அரவிந்தன் கூறிய தொகையை விட காமாட்சி அச்சகத்தில் மலிவு என்று அங்கே போய் மலிவாக அச்சிட்டு வந்தனர். நிகழ்ச்சி நிரல் தலைப்பில் ‘பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்’ என்றிருக்க வேண்டிய பாரதியின் கவிதை வரி, ‘பாரத தேசமென்று தேள் கொட்டுவோம்’ என்று சந்தி சிரிக்க அச்சாகியிருந்தது. அதே பாரதி விழாவில் முருகானந்தம் சொற்பொழிவு செய்ய நேர்ந்தது. சொற்பொழிவின் நடுவே ‘தேள் கொட்டுவோம்’ என்று அச்சாகியிருக்கும் இரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டான் முருகானந்தம்.

“சொந்தப் பகை ஆயிரம் இருக்கலாம்; பொதுக்கூட்டத்தில் போய் இதையெல்லாம் எதற்குப் பேசுகிறாய்? தப்பாக எண்ணிக் கொள்ளப் போகிறார்களே?” என்று அரவிந்தன் அவனைக் கண்டித்தான். ஆனால் அதற்குச் சிறிதும் அஞ்சாமல் முருகானந்தம், “நீ சும்மா இரு, அரவிந்தன். நான் எவனுக்கு பயப்பட வேண்டும்! தப்பு என்று பட்டதைக் கூசாமல் கண்டிக்க வேண்டியதுதான்” என்று கூறிவிட்டான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்