பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி- களம் : 1 காட்சி : 3
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 2 – தொடர்ச்சி)
புதிய புரட்சிக்கவி- களம் : 1 காட்சி : 3
அரசனும், அமைச்சனும் அமர்ந்திருக்க இளவரசி வருகிறாள்
கலி விருத்தம்
அமைச்சர் : குலம்விளங்க வந்துதித்த
கொழுந்தே வருக
புலம் வியக்குஞ் செந்தமிழின்
பொழிவே வருக
இலம்விளக்கும் இந்நாட்டின்
ஒளியே வருக
நலம்பயக்கும் எம்மரசின்
இழையே வருக
இளவரசி: குடிகாத்து நலம்விளைக்குங்
கொற்றவ வணக்கம்
முடிவில்சீர் தமிழ்காக்கும்
முன்னவ வணக்கம்
இடிப்புரைதான் தனக்கில்லா
ஏந்தலே வணக்கம்
அடிதொடரும் எம்மரசின்
அமைச்சரே வணக்கம்
அறுசீர் விருத்தம்
மகிழ்வான செய்தி யொன்றை
மாமன்னர் உனக்க ளிப்பார்
முகிலூடு பறக்கும் சிட்டாய்
முனைப்போடு செல்க என்றார்
அகிலோடும் நீர்ப்பெ ருக்கில்
அசைந்தாடும் பயிரால் மக்கள்
மகிழ்கூடக் காக்கும் மன்னா
மனங்களிக்கும் செய்தி யாதோ
அரசன்: தமிழ்தனக்கே எதுகை மோனை
தனிச்சிறப்பை நல்கும் பான்மை
எமதுகுலப் பெருமைக் கின்னும்
எழில்கூட்டும் ஒளிவி ளக்கே
அமுதான தமிழின் யாப்பை
அயர்வறநீ கற்கும் வண்ணம்
அமைவான ஏற்பா டொன்றை
அமைச்சர்தாம் வகுத்திருக் கின்றார்
இளவரசி: நடைவண்டி கிடைக்கப் பெற்று
நடைதுள்ளும் குழந்தை யாக
படைதொடர முன்னே பாயும்
படைத்தலைவன் களிப்பே யாக
உடைபடவே தமிழ்எ திர்ப்பும்
உவப்புறும் புலவோ ராக
தொடையழகுத் தமிழைக் கற்கும்
தொடர்பணியுங் களிப்பே யன்றோ
காடு திருத்திக் கழனியாக்க
கனவு காணும் உழவனுக்குப்
பாடு படலைக் குறைப்பதாகப்
பருவ மழையும் பொழிந்தாற்போல்
பீடு தமிழின் யாப்பமைதி
பெருமை யுறநான் கற்றிடவே
நாடு போற்றும் நம்அமைச்சர்
நயந்த ளிக்கும் திட்டமென்ன?
அரசன்: அறநெறி பொருளை யீட்டி
அடுத்தவர் துன்பம் போக்கி
உறுவதோர் இன்பந் தானும்
உயர்வெனச் சொன்னார் முன்னோர்
முறுவலை நெஞ்சில் தோற்றி
முதிர்ச்சியை வாழ்விற் காக்கும்
உறுபொருள் கவிதை யாக்கல்
உயர்வினுக் குயர்வே யன்றோ
உயிரொன்று தோன்றும் போதும்
உயிர்ப்பின்றி நீங்கும் போதும்
வயிறொட்டி வாடும் போதும்
வளமையிலே களிக்கும் போதும்
உயிர்க்காதல் இணையும் போதும்
உடல்மட்டும் பிரியும் போதும்
தயவாகப் பாட்டி சைத்தல்
தமிழர்தம் மரபே யாகும்
அமைச்சர் : கவிதையாம் தமிழி ருக்கக்
கண்ணுக்கெனக் காட்சி வேண்டாம்
கவிதையாம் தமிழி ருக்கக்
காதுக்கெனக் குழலும் வேண்டாம்
கவிதையாம் தமிழி ருக்கக்
கனியென்ன நாவுக் குந்தான்
கவிதையாம் தென்ற லொன்றே
களிப்புறுத்தும் மனமும் சேர்த்து
ஆழ்பொருள் கவிதை தாமும்
அகமும் புறமு மாகி
வாழ்வியல் மெய்ப்பா டெட்டும்
வகையுற உணர்த்தி நம்மை
தாழ்விலா வாழ்க்கை தன்னில்
தகவுறப் பொருத்து மன்றோ
சூழ்வினை தேர்ந்து கொள்ளத்
துணையது கவிதை யாகும்
அரசன்: இருஞ்சுவைத் தேனைக் கொள்ளும்
இன்னிசைச் சுரும்பு போலக்
கருத்திலே முரண்பட் டாலும்
கவிநயம் போற்று வார்க்கு
விருப்புறு கவிதை யாக்கல்
வித்தகர் சிலர்க்கே யாகும்
மருவுறு கவிதை யாப்பின்
மரபுநீ உணரும் வண்ணம்
கல்வியாம் கண்ணைப் பெற்றுக்
கருவிழிப் புண்ணி ழந்தே
அல்லும் பகலும் ஒன்றாய்
அருந்தமிழ் நினைப்பில் ஒன்றும்
வெல்லுதற் கரிய ஆசான்
வித்தகன் உதாரன் என்போன்
எல்லையாய்த் திரைக்குப் பின்னால்
இருந்தமிழ் சொல்வான் நாளை
இழிகுலப் புலையன் மாட்டும்
இன்சுவைப் பாலைக் கொள்ளல்
வழிமரபு அதனால் நீயும்
வாட்டம் நாட்டம் இன்றிப்
பழியிலாத் தமிழின் யாப்பைப்
பழுதறத் தேர்ந்து நாட்டோர்
கழிபேர் உவகை கொள்ளக்
கவிபல படைத்து வாழ்க!
அமைச்சர்: தேனவிஞ்சும் தமிழே யாகத்
தீங்குயில்கள் கூவ ; புள்ளி
மான்துஞ்சும் நீழல் எல்லாம்
மண்டுசுவைக் கனிக ளாக ;
மீன்துஞ்சும் மகளிர் பான்மை
மென்தோகை மயில்க ளாட
வான்துஞ்சும் மலர்ம ணத்தில்
வளர்தென்றல் துணையாய் மேவ
எழிலாடும் சோலை மேடை
இடையாடுந் திரையி ருக்கத்
தெழியாடும் யாப்பின் நுட்பம்
தேர்ந்துரைக்கும் புலமை வல்லோன்
விழியாடாக் கவிஞன் மாட்டு
வினையொன்றிக் கற்று நின்னின்
வழியோடும் ஆட்சி மேவி
வாழிபல் லாண்டு வாழி
(தெழி-ஒலி)
எண்சீர் விருத்தம்
இளவரசி: இருள்கண்டு குளிர்மதியை
இகழ்வா ரில்லை
எழில்மலரை முள்ளெண்ணி
விடுவா ரில்லை
மருளற்ற சிந்தனையை
உடையார் தாமும்
மனித வாழ்வை இடரெண்ணித்
துறப்பா ரில்லை
பொருளற்ற அசைச் சொற்கள்
இடையிட் டாலும்
பொருள் பொதிந்த தமிழ்ப்பாடல்
மறப்பா ரில்லை
மருள்கொண்ட நெஞ்சுடையார்
விழியின் மேலாம்
மனத்தூய்மை மிகுத்தாரின்
ஒளிராக் கண்கள்
உயிரென்றே தமிழ்காக்க
முனைவோர் தாமும்
உட்பகையால் செயலற்று
நிற்ற லுண்டோ
புயலாக உள்ளத்தில்
விசையுண் டானால்
பொறியென்ன தடையென்ன
வெற்றி காண்பார்
உயிரொன்றி உள்ளங்கள்
இணையு மானால்
உயர்வென்ன தாழ்வென்ன
பிரிப்பா ரில்லை
நயன்மிகுந்த தமிழ்தேர்ந்த
புலமை யார்க்கு
நலிவென்ன விழிக்குறையால்
மேன்மை யன்றோ
அறுசீர் விருத்தம்
பொறிக்குறை பழியன் றென்று
புகன்றவர் தமிழர் அன்றோ
நெறிப்பட வாழ்வார் யாக்கை
நினைத்திடின் மேன்மை யாகும்
வறியதாம் பார்வை என்னாம்
வளர்தமிழ் கல்லாப் போது
செறிதமிழ்ப் பார்வை வல்லார்
செல்வழி வல்லா ராவர்
ஆண்டிடும் குடியை மேன்மை
ஆக்கிடும் பண்பின் மேலோய்
வண்டமிழ் யாப்பின் காதல்
வளர்க்குறும் புலவன் தன்பால்
கொண்டிடும் மதிற்பிற் சற்றுங்
குறையெதும் இல்லாப் பான்மை
மண்டிடுந் தமிழைக் கற்பேன்
மன்னவ மயக்கம் வேண்டாம்
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம்
புதிய புரட்சிக்கவி
Comments
Post a Comment