Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 17

 அகரமுதல



(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 16 தொடர்ச்சி)

பழந்தமிழ்

5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி

  இவ்வாறே படர்க்கை ஒன்றன்பால், பலவின்பால், தன்மை, முன்னிலை விகுதிகளும் தமிழ்க் குடும்ப மொழிகள் அனைத்திலும் ஒரே வகையாக அமைந்துள்ளமையைக் காணலாம். விரிக்கின் பெருகுமாகையால் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் தருவதை விடுத்து இனி எண்ணுப் பெயர்களை நோக்குவோம்.

  தமிழ்                      மலையாளம்        கன்னடம்   தெலுங்கு

 ஒன்று                      ஒன்னு                      ஒந்து                         ஒகட்டி

 இரண்டு     ரண்டு                      எரடு              இரடு

 மூன்று                    மூன்னு                    மூரு               மூடு

 நான்கு                    நாலு             நால்கு                      நால்கு

 ஐந்து                        அஞ்சு                       ஐது                ஐயிது

 ஆறு                         ஆறு              ஆரு               ஆறு

 ஏழு               ஏழு                ஏளு               ஏடு

 எட்டு                        எட்டு            எண்ட்டு      எனிமிதி

 ஒன்பது      ஒம்பது                     ஒம்பத்து     தொம்மிதி

 பத்து                        பத்து                         ஹத்து                      பதி

 நூறு             நூறு              நூறு              நூரு

 ஆயிரம்      ஆயிரம்                   சாவிர                      வேலு

  மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளில் தமிழில்  உ ள்ளவாறு அமையாமல் எண்ணுப் பெயர்களில் சில ஒலிச்சிதைவு அடைந்துள்ளன. பேச்சு வழக்கில் உள்ளவாறு அமைந்துள்ளன.

  ஆயிரம் என்னும் எண்ணிற்குக் கன்னடத்தில் சாவிர என்றும் தெலுங்கில் வேலு என்றும் பெயர்கள் வந்துள்ளமை எவ்வாறு என்று தெளியவில்லை.

கன்னடச் சாவிர (சவர என்பதும் உண்டு) வடமொழியின் சகசிர என்னும் சொல்லிலிருந்து வந்திருக்கக்கூடும் என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றனர். தமிழ் ஆயிரமும் வடமொழிச் சகசிரத்திலிருந்து வந்திருக்கக்கூடுமென்று அவர் கூறுகின்றமை பொருத்தமுடைத்தன்று. அறிஞர் குண்டர்ட்டு ஆயிரம் என்ற சொல்லின் தோற்றத்தைப் பின்வருமாறு காட்டுகின்றார்:

            சகஃச்ரம்(சகஸ்ரம்)  சகசிரம் > அ  அ  யிரம்  ஆயிரம்

 இப் பேரெண்ணைத் தமிழ்க் குடும்பத்தினர் வடமொழி யாளரிடருந்து கடன் பெற்றிருக்கக்கூடும் என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றமையும் உண்மைக்கு மாறுபட்டது. தமிழில் நூறாயிரம், கோடி கோடிக்கு மேற்பட்ட ஆம்பல், வெள்ளம் முதலிய எண்கள் ஆரியர் தொடர்பு கொள்வதற்கு முன்பே இருக்கக் காண்கின்றோம். அவ்வாறு இருக்க ஆயிரம் என்ற எண்ணுப் பெயரை மட்டும் ஆரியர்களிடமிருந்து தமிழர் கடன் வாங்கி இருப்பர் என்பது எவ்வாறு பொருந்தும்?

  தெலுங்கு கொண்டுள்ள  வேலு தனித் திராவிடச் சொல்லே என்பதில் அவர் ஐயம் கொள்ளவில்லை. அச்சொல் வெயிலு என்பதிலிருந்து தோன்றிருக்கக்கூடும் என்று அவர் எண்ணுகின்றார்.

  இனி ஐம்பூதப் பெயர்களை நோக்குவோம்: பூதம் என்பது தனித்தமிழ்ச் சொல். தோன்றுவதற்குக் காரணமாயது என்று பொருள். பூ  பூத்தல்  பூதம். தமிழிலும் அதன் கிளை மொழிகளிலும் ஒரேவிதமான பெயர்களைப் பெற்றுள்ளமை இது பழந்தமிழ்ச்சொல் என்பதை நிலைநாட்டும்.

  தொல்காப்பியர் தம் நூலில் இதனை எடுத்தாண்டுள்ளார்.* பூதங்கள் யாவை என்று கூறுவனவும் பழந்தமிழ்ச் சொற்களே.

            தமிழ்                   நிலம், நீர்,தீ,வளி,வான்.

            மலையாளம்  நிலம், வெள்ளம், தீ, காற்று, விண்ணு.

            கன்னடம்      நெல (நிலம்), நீரு, பொனல் (புனல்),               காலி (கால்=காற்று), தீ, ஆகாச (காயம்),

            தெலுங்கு        நெல (நிலம்), நீரு (நீர்), நிப்பு (நெருப்பு),         காலி (கால்), வின்னு (விண்ணு).

 ++

* தொல்: சொல்: 57

++

  இனி நம் உறுப்புப் பெயர்களை நோக்குவோம்.

            தமிழ்            மலையாளம்        கன்னடம்   தெலுங்கு

            தலை              தல              தலெ                         தல

            நுதல்                                    நொசல்                   நுதுரு 

            கண்    கண்ணு     கண்ணு                   கன்னு

            கண்ணீர்                                          கண்ணீரு

            மூக்கு             மூக்கு                     மூகு              முக்கு

            பல்       பல்              ஹல்லு1                   பல்லு

            நாக்கு            நாவு                                                நாலுக*

            செவி              செவி                      கிவி               செவி

            முகம்              முகம்                     முக                முகமு

            மிடறு             கழுத்து       கழுத்து                    மெட

            உரம்               நெஞ்சு                                உரமு

            தொடை   துட                    தொடெ                   தொட

  இனி உணவுப் பொருள்களை நோக்குவோம்.

  மலையாளம்: அரி (அரிசி), அப்பம், இர (இரை), இறச்சி (இறைச்சி), உப்பு, ஊண், எண்ண (எண்ணெய்), கஞ்ஞி (கஞ்சி), கடுகு, கறி, சோறு, தயிர், தவிடு, தேன், பால், மசால (மசாலை), மருன்னு, (மருந்து), முட்டா (முட்டை), முளகுதண்ணி (மிளகுத் தண்ணீர்), மோர், வெண்ண (வெண்ணெய்).

  கன்னடம் : அப்ப (அப்பம்), அப்பள (அப்பளம்), ஹாலு (பால்), உப்பு, மந்து (மருந்து), பிர்து (விருந்து), அக்கி (அரிசி) பெண்ணெ (வெண்ணெய்), எளநீரு (இளநீர்), ஊட்ட (ஊட்டம்), அவல், அள (அளை=தயிர்), இட்டலி, உண்ணி (உண்டி), எண்ணெ (எண்ணெய்), கஞ்சி, கள், கறி, கூழ், தவுடு, திண்டி (தின்றி), தீனி.

+++

1. கன்னடத்தில் “ப “ஹ வாக மாறும். * நாலுக = தொங்குவது.

+++

தெலுங்கு : தோச (தோசை), இட்டென (இட்டலி), பச்சடி, எர (இரை), தீனி, திண்டி (தின்றி), உப்பு, பாலு,வென்ன (வெண்ணெய்), அப்பமு, கஞ்சி, நேயி (நெய்), தெனெ(தேன்), தவுடு, பப்பு (பருப்பு), பொட்டு, கள்ளு (கள்), பிரியமு (மிளகு), வெல்லுல்லி (வெள்ளுள்ளி), எறச்சி (இறைச்சி), அப்பளமு (அப்பளம்), ஆமவட (ஆமைவடை).

  இவ்வாறு எவ்வகையில் நோக்கினாலும் தமிழும், தமிழல் திராவிட மொழிகளும் ஒரு மொழி போலவே தோன்றுகின்றன. பெரும்பாலும் செப்பமுற்ற வழக்குகள் தமிழிலேயே உள்ளன. பிறமொழிகளின் சொற்கள், சிதைந்த வழக்குகளாகவே யுள்ளன. பண்பட்ட பழந்தமிழிலிருந்து பிரிந்து, நெருங்கிய தொடர்பு குறைந்த மொழிப் பகுதிகள் காலம் செல்லச் செல்ல உருமாறிக்கொண்டே வந்துவிட்டன. செப்பமுற்ற தமிழையொட்டி அவை இயங்குவதற்கேற்ற சூழ்நிலைகள் இல்லை. பழந்தமிழ் வழங்கிய பகுதிகள் ஒரு பொது அரசுக்குள் கொண்டு வரப்படவில்லை. ஆங்காங்குத் தட்பவெப்ப நிலைகள் வெவ் வேறு விதமாக உள்ளன. ஒரு பகுதியினர்க்கும் இன்னொரு பகுதியினர்க்கும் நெருங்கிய கூட்டுறவு கொண்டு வாழும் வகையில் போக்குவரவு வசதிகளும், வாணிபம், கலை இலக்கியம், ஆட்சிமுறை முதலியன பற்றிய தொடர்புகளும் அமையவில்லை. வடவேங்கடம் தென் குமரியாயிடையிட்ட பகுதிகளில் பெரும் தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்ததுபோல் பிற பகுதிகளில் தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்திலர். புலவர்களைப் போற்றும் மன்னர்களும் தோன்றினாரிலர். ஆதலின் முதன்மைத் தமிழ் நிலத்தில் புலவர்கள் கழகம் அமைத்துத் தமிழ் வளர்த்தது போல் ஆங்கெல்லாம் புலவர் கழகம் தோன்றித் தமிழை வளர்க்க வில்லை.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்