Skip to main content

தமிழ்நாடும் மொழியும் 13 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

 அகரமுதல





(தமிழ்நாடும் மொழியும் 12 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும்

கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி

ஆனால் காப்பியக் காலத்திலே இம்முறை அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் காப்பிய க்காலத் தமிழ்ச்சமுதாயம் காதலை நாடவில்லை போலும். அதுமட்டுமல்ல; கோவலன் கண்ணகி திருமணத்திலே முத்தீ வளர்க்கப்பட்டது; பார்ப்பான் மறை ஓதினான்; மணமக்கள் தீவலம் செய்தனர். அஃதோடு இம்மணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் பெற்றோர்கள். மணமக்களின் ஒப்புதல் கேட்டதாகத் தெரியவில்லை. இறுதியிலே கண்ணகி – கோவலன் மணமக்களாகிவிடுகின்றனர். பிறகு பிரிந்துவிடுகின்றனர். கோவலன் போற்றா ஒழுக்கம் புரிகின்றான். கேட்பாரில்லை; அதுமட்டுமா? கோவலனுக்கு நண்பனாகவும் அறவுரை கூறுபவனாகவும் இருப்பவன் மாடலன் என்னும் மறையோன் ஆவான். செங்குட்டுவன் போன்ற பெருஞ் செல்வ மக்களுக்கும் உயர்ந்தோருக்கும் நெருங்கிய அறவுரை கூறுகின்ற நண்பனும் அவனே.

இரு காப்பியங்களிலும் பெரிதும் பேசப்படுகின்றவர்கள் பெண்களே. இதனால் காப்பியக் காலத்திலே பெண்களின் செல்வாக்கு அதிகமாயிற்றோ என எண்ண இடம் உளது. மழைக்காகக் களவேள்வி செய்து கடவுளைப் பரசல் காணப்படுன்றது. சங்கக்கால மன்னர்களைவிடச் செங்குட்டுவற்குப் பிற நாட்டு மன்னர் தொடர்பு அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் தமிழன் செல்வாக்கு காப்பியக் காலத்திலே வேங்கடத்தையுங் கடந்து சென்றுளது என அறியலாம்.

காப்பியக் காலத்தில் மக்கள் சீரும் சிறப்புமாய் வாழ்ந்தனர். தமிழ்நாட்டு மனையறம் மாண்புடன் விளங்கியது. மகளிர் அறவோர்க்களித்தல், அந்தணரோம்பல், துறவோர்க் கெதிர்தல், விருந்து புறந்தருதல் முதலிய அறங்களை ஆர்வமுடன் அயராது செய்தனர். ஆண்டுதோறும் இந்திரவிழா, பங்குனி வில் விழா, வேட்டுவர் குரவை முதலிய விழாக்களை மக்கள் மகிழ்ச்சியுடன் நடத்தினர். இந்திரவிழா தலைசிறந்த விழாவாகக் கருதப்பட்டது. இவ்விழா காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் சித்திரை நாள் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவின்போது மறக்குடி மகளிரும், மறவரும் காவற்பூதத்துப் பலிபீடிகையினை வழிபடுவர். அடுத்து பூதசதுக்கம் போன்ற ஐவகை மன்றங்கட்கும் அரும்பலியூட்டப்படும். மங்கலக் கொடி, தோரணம், பூரண கும்பம், பொற்பாலிகை முதலியன கொண்டு நகரையும் கோயில்களையும் மக்கள் அழகுசெய்வர். பின்னர் அரசியல் அதிகாரிகளும், படைவீரரும் பிறரும் ஒன்றாய்க் காவிரிக்குச் சென்று நீர் கொணர்ந்து விண்ணவர் தலைவனை விழுநீராட்டி, பாடிப்பரவி மகிழ்வர். இசைப்புலவர்கள் இன்னிசை வழங்க, நாடக மகளிர் நடனமாட, மக்கள் முறையே கேட்டும் கண்டும் மகிழ்வர். இறுதிநாளன்று மக்கள் கடலாடிக் கானற்சோலையில் களிப்புடனிருப்பர். காட்டில் வாழும் வேடுவர் வரிக்கூத்தாடி கொற்றவையைப் பரவுதலும் காப்பியக்காலத்தில் இருந்துவந்தது. இடையர்கள் குரவைக் கூத்தாடிக் கண்ணனைப் பரவினர். நிமித்தம் பார்த்தலும், நாள் பார்த்தலும், கனாப்பயன் கருதுதலும் வழக்கத்தில் இருந்தன. பூதங்களுக்குப் பலியிட்டு வழிபடும் வழக்கமும் இருந்தது. மக்கள் அரசனைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர்.

அரசர், வணிகர், அந்தணர், வேளாளர் என்ற பிரிவு காப்பியக் காலத்திலும் இருந்தது. இவர்கள் உயர்ந்தோராகக் கருதப்பட்டனர். கம்மியர், குயவர், தச்சர், கொல்லர், கஞ்சர், குறவர், ஆயர், எயினர், கூத்தர், சூதர் எனத் தொழில்புரிவோர் பல்வேறு வகையினராய் விளங்கினர். படைக்கலம் செலுத்துதல், சுதை வேலை, தச்சுவேலை, சங்கறுத்தல், மாலை தொடுத்தல், ஓவியம் எழுதுதல், துணி நெய்தல், செம்பு, வெள்ளி, இரும்பு, பொன் இவற்றால் பொருள்கள் செய்தல் முதலிய முக்கிய தொழில்களை மக்கள் செய்துவந்தனர்.

மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பமல்லது தொழுதகவு இல்”

எனச் செங்குட்டுவன் கூற்றாக அடிகள் பாடியிருப்பதின் மூலம் அக்காலத்தில் மன்னர்கள் தங்கள் பொறுப்பை நன்கு உணர்ந்து பணியாற்றினர் எனத் தெரியவருகின்றது. மக்கள் நலமே தம் நலம் எனத் தங்கள் மனதிலே கொண்டு, அவர்கள் அரசியற் சுற்றம், எண்பேராயம், ஐம்பெருங்குழு, நால்வகைப் படை இவற்றின் துணையுடன் நாட்டின் நலம் காத்துவந்தனர். எனவே மக்கள் இன்னல் ஏதுமின்றி இன்பமுடன் வாழ்ந்தனர்.

இருண்ட காலம்

தமிழ் நாட்டின் பொற்காலமாகிய சங்கக் காலத்திற்குப் பின்னர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளில், அதாவது கி. பி. 3, 4, 5-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றது என்று சொல்லமுடியாத அளவிற்கு இருள் சூழ்ந்திருந்தது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் என்னும் ஓர் அரச மரபினர் தமிழ்நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆளத்தொடங்கினர். இவர்களைப் போன்றே கி. பி. 4-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னாட்டில் சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர் என்போர் தலையெடுத்தனர். முத்தமிழ் வளர்த்த முடியுடை மன்னர் மறைந்தனர். நாளுக்கு நாள் தமிழர் வீரம் குன்றியதால் வடவராகிய இராட்டிரகூட, கங்க வேந்தர்கள் தமிழ்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தனர். எனவே இக்காலத்தினைத் தமிழக வரலாற்றில் இருண்டகாலம் என்று கூறவேண்டும். இக்காலத்தில் ஆண்டவர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரிவதற்கில்லை. எனினும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இக்காலத்தைக் களப்பிரர் இடையீட்டுக் காலம் என்று அழைப்பர். இக்களப்பிரர் வரலாறு குறித்து ஒன்றும் திட்டமாகக் கூறுவதற்கில்லை. முனைவர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் களப்பிரர், காளத்தி முதலிய தமிழ்நாட்டு வட எல்லை மலைத்தொடர்களில் வாழ்ந்த ஒரு கள்ளர் கூட்டத்தினர் என்று “பல்லவர் வரலாறு’ என்னும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் தமிழ் நாட்டினுள் புகுந்து தமிழ் வேந்தர்களை வென்று தமிழகம் முழுவதும் தம் ஆட்சியை நிறுவினர். வேள்விக்குடிச் செப்பேடுகள் இவர்கள் பாண்டியரை வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும், அவர்தம் ஆட்சியில் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முன்செய்திருந்த அறச்செயல் அழிக்கப்பட்டது என்றும் கூறுவதால் களப்பிரர் படையெழுச்சி பாண்டிய நாட்டில் பல மாறுதல்களை உண்டுபண்ணியது என நாம் அறியலாம். இதன் காரணமாகவே மதுரையில் நிலவிய கடைச்சங்கம் அழிவுற்றிருக்கவேண்டும் என அறிஞர் கருதுகின்றனர். சுருங்கக் கூறின் களப்பிரர் படையெடுப்பால் தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழ் நாகரிகம் ஆகியவை அடியோடு வீழ்ச்சி அடைந்தன.

சோழப்பேரரசு அழிந்த நேரத்தில் வடக்கிலிருந்து களப்பிரரும் பல்லவரும் முறையே தமிழகத்திற்கு வந்தனர். களப்பிரருக்கும் பல்லவருக்குமிடையே அடிக்கடி போர் நிகழ்ந்து கொண்டே இருந்தது. ஒருசில வரலாற்றறிஞர்கள் இவர்களே பிற்காலத்தில் முத்தரையச் சிற்றரசராகவும் குறுநில மன்னராகவும் விளங்கினர் என்று கூறுவர். இன்று செந்தமிழ்நாட்டில் வாழும் கள்ளர் மரபினர் களப்பிரர் வழிவந்தோராவர் என மற்றுஞ்சிலர் கூறுகின்றனர்.

இவ்விருண்ட காலத்தில் பாலி, பிராகிருதம், வடமொழி ஆகிய பிற மொழிகளும், பௌத்தம், சமணம் ஆகிய புறச் சமயங்களும் உயர்வெய்தின; பெருமையுற்றன. எனவே தமிழ்மொழி ஆதரவும் வளர்ச்சியும் இல்லாத – காரணத்தால் தளர்ச்சி அடைந்தது; தழைக்காது போயிற்று. களப்பிரர் பௌத்த சமயத்தைத் தமிழ்நாடெங்கணும் பரப்புவதற்குப் பெரிதும் முயன்றனர். பௌத்த சமய நூல்கள் பல பாலி மொழியில் எழுதப்பட்டன. இதன் காரணமாய் நம் தாய் மொழி வளர்ச்சி தடையுற்றது. எனினும் இவ்விருண்டகாலத்தினும் பல நீதி நூல்களும் ஏனைய சில நூல்களும் தமிழில் தோன்றின. அவற்றைப் பற்றி இலக்கிய வரலாற்றில் விரிவாகக் காண்போம்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்