பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 2
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 1 – தொடர்ச்சி)
புதிய புரட்சிக்கவி
களம் : 1 காட்சி : 2
உதாரன் இருப்பிடம், உதாரன் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்தவாறிருக்க, அமைச்சர், பரிவாரத்துடனும், பரிசுப் பொருட்களுடனும் வந்து வணங்குகிறார்
கலித்துறை
அமைச்சர்: வானும் மண்ணும்
வாழுங் காலம் தமிழ்வாழ
தேனும் பாலும்
கலந்து பாடும் கவிமன்னா
தானை கொண்டு
தரணி யாளும் தமிழ்வேந்தன்
ஏனை இவற்றோடு
இனிதே சொன்னான் தன்வணக்கம்
உதாரன்: நாடு வாழ்க
நன்மை சேர்க நற்றமிழின்
பீடு காத்துப்
பெருமை சேர்க்கும் அரசுவாழ்க
பாடி இன்றமிழ்
பயிலு கின்ற எனதில்லம்
நாடி வந்த
ஏது சொல்வீர் நனியின்னே
அமைச்சர்: காயுங் கனிந்த
கனியொடு கிழங்குங் கணக்கிலவாய்
நாயும் பன்றியும்
போல நாமும் தின்னாமல்
வாயும் வயிறும்
வதைபடா துண்டு வாழுதற்கே
தோயும் சுவையைத்
தொகுத்த ளிக்கும் அட்டிலதாய்
குடிகள் போற்றும்
கொற்றவன் பெற்ற குலக்கொடியாள்
முடிபல கண்ட
முத்தமிழ்ப் பாடல் கற்றுணர்ந்தாள்
படித்த தமிழில்
எடுத்த சுவையைப் பாரறிய
வடிக்கும் யாப்பை
வகையாய்க் கற்க விரும்புகிறாள்
உதாரன்: கற்ற தமிழைப்
பற்றும் மனத்தர் யாருக்கும்
குற்றம் இன்றிக்
கூறக் கடவேன் என்றாலும்
சற்றும் மனத்தில்
செருக்கை நீக்கி எனைநாடும்
உற்றவர் எவர்க்கும்
உரைப்பேன் தமிழை எந்நாளும்
அமைச்சர்: மாந்தர் தம்மில்
உயர்வு தாழ்வு தவறாகும்
சேர்ந்த செல்வம்
செகத்தில் யார்க்கும் பொதுவாகும்
தேர்ந்த கல்வித்
திறத்தில் யாரும் நிகரென்றே
ஆய்ந்த தமிழால்
தேர்ந்து கூறும் கவிவேந்தே
எட்டுந் தமிழில்
இனிமை சேர்க்க வல்லவளாய்
மட்டு வார்க்கும்
மலரை விஞ்சும் மெல்லியலாள்
குட்ட மென்னும்
குறையைக் கொண்டாள் சொல்லளவில்
அட்டி யில்லை
அவளை யீங்கே அழைத்துவர
ஏடு தூக்கி
இல்லம் நாடி வருவார்க்குப்
பாடுந் தமிழைப்
பயிற்றல் வல்ல பாவேந்தே
காடு நீங்கி
நாடு வந்த காரணத்தால்
பீடு போமோ
பெயரிய வலிமை வேங்கைக்கே
மன்னும் வேந்தன்
மார்பின் ஆரம் பதிந்தாலும்
தின்னும் வறுமை
சிறியாள் நெஞ்சில் தவழ்ந்தாலும்
பென்னம் பெரிய
கடலுள் விளைந்த முத்தினுக்கே
சின்னஞ் சிறிய
குறையும் உண்டோ சீர்மையிலே
வேல்தனை வீசி
வேங்கையை வீழ்த்தும் வீரனிடம்
கோல்தனைக் கொடுத்துக்
குறுமுயல் தாக்கச் சொலலாமோ
நூல்தனைத் தேர்ந்து
நுவலுங் கவிதைத் திறனுரைக்க
சால்பினை உடையாய்
சாற்ற வுளரோ வேறொருவர்
கருவிழிப் பாவை
கன்னித் தமிழெனுங் கவிமன்னா
உருவங் குலைந்த
உடலைப் பெற்ற இளவரசி
பருவங் கொண்டாள்
பலருங் காண இவண்வருதல்
மருவுந் தமிழால்
மனத்தை யளக்குஞ் செயலாமோ
உதாரன்: நன்றே எண்ணி
நாவால் வெல்லும் மதியமைச்சே
ஒன்றே தேர்ந்தேன்
ஒண்டமிழ் வளர்த்தல் பணியென்றே
இன்றே வருவேன்
இளையாள் காணா வகையிருந்தே
வென்றே தமிழை
விரும்பும் வண்ணம் கவியுரைப்பேன்
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம்
புதிய புரட்சிக்கவி
Comments
Post a Comment