Skip to main content

தமிழ்நாடும் மொழியும் 14 . பல்லவப் பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

 அகரமுதல



(தமிழ்நாடும் மொழியும் 13 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 14

5. பல்லவப் பேரரசு

தோற்றம்

முற்கால இந்திய வரலாற்றிலே விளங்காதன பல உள. அவற்றுள்ளே பல்லவர் தோற்றமும் ஒன்று. இது நெடு நாளைக்கு முன்பு முனைவர் வி.ஏ. சிமித்து கூறியதாகும். கோபாலன் என்பவர் இது குறித்து, 1928-ஆம் ஆண்டில் கூறியதாவது :- தற்பொழுது நமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பல்லவர் தோற்றத்தைப்பற்றி நாம் எதுவும் உறுதியாகக் கூறமுடியாது. முதன் முதலில் பல்லவர் என்போர் பார்த்தியன் மரபினைச் சேர்ந்தவர்கள் என்றும், மேற்கு இந்தியா வழியாக வந்து தக்கணத்தைக் கடந்து அவர்கள் தொண்டை மண்டலத்தை அடைந்தனர் என்றும் எல்லாரும் கருதினர். பல்லவர் தங்கள் முன்னோரின் தொடர்பினைக் கைவிட்டமைக்குக் காரணம் அவர்கள் முற்றிலும் இந்தியப் பண்பாட்டில் முழுகினமையே என்றும் எண்ணினர். இக்காலத்தில்கூட ‘கேம்பிரிட்சு இந்திய வரலாற்றுச் சுருக்கம்’ என்ற நூலாசிரியர் பல்லவர் அயல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என எண்ணுகிறார். இதற்குக் காட்டப்படும் காரணங்கள் பின் வருமாறு;-

‘பார்த்தியன்’ என்ற சொல் காலப்போக்கில் ‘பால்த்தியன்’ எனத் திரிந்து பின் பல்லவன் என உருமாறிற்று. புராணங்களிலே சாகர்கள், யவனர்கள் ஆகிய அயலவரோடு பல்லவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கட்கிடையே உறவு முறையும் கற்பிக்கப்பட்டுள்ளது. கிருனார் (Girnar) கல்வெட்டிலே, உருத்திரதாமன் என்பவன் பல்லவர் தளபதியாகிய சுவிசாகன் என்பவனைக் குறித்துள்ளான், பலசாரி என்ற ஆந்திரப் பேரரசி ஒரு கல்வெட்டிலே, பல்லவரும், சாகரும் தன் மகனாகிய கௌதமபுத்திர சதகர்ணியால் தோற்கடிக்கப்பட்டனர் எனக் கூறியிருக்கிறாள்.

மேலே குறிக்கப்பட்ட குறிப்புகள் மூலம், பல்லவர் சதகர்ணியிடம் தோற்ற பின்பு தொண்டை மண்டலத்திற் குடியேறித் தொடக்கத்தில் ஆந்திரப் பேரரசின் சார்பாளராக (பிரதிநிதி) இருந்திருக்க வேண்டும் என்றும், பின்பு ஆந்திரப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலை அவர்கள் காஞ்சியில் முடிசூடி கி. பி. 250-இல் விடுதலைப் பண் பாடியிருக்க வேண்டும் என்றும் வாதிக்கப்படுகின்றது. முனைவர் கிருட்டிணசாமி ஐயங்கார் போன்ற இந்தியப் பேராசிரியர்கள் பலர் பல்லவர் இந்த நாட்டினரே என எண்ணுகின்றனர்மொழிநூல் விதிப்படி பார்த்தியன் என்ற சொல் ஒருக்காலும் பல்லவன் என ஆகமுடியாது; எனவே பல்லவர்கள் இந்திய மக்களே எனக் கருதுகின்றனர் அவர்கள். பல்லவர் என்போர் அசுவத்தாமன் – நாக கன்னிகை ஆகியோரின் வழித் தோன்றல்கள் என்றும், அவர்கள் பாரத்துவாச கோத்திரச் சத்திரியர்கள் என்றும், சில பல்லவர்கள் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சில கல்வெட்டுகள் அசுவத்தாமனை விடுத்து சிவனைக் குறிக்கின்றன. பிறந்த உடனே பல்லவம் (கொடி) மீது குழந்தையைப் படுக்கவைத்த காரணத்தினாலும், அக்குழந்தையின் வழித்தோன்றல்களாக விளங்கிய காரணத்தினாலும் பல்லவர்க்கு அப்பெயர் ஏற்பட்டதென்று ஒருசிலர் கூறுவர். புதுக்கோட்டை மன்னர் தன்னைப் பல்லவராயர் எனக் கூறிக்கொள்கிறார். இம்மன்னர் இந்நாட்டுக் குடியாகிய கள்ளர் குலத்தலைவர். மற்றும் வெள்ளாள மரபினருள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பல்லவராய கோத்திரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே புகழோடு விளங்கிய இராசசேகரன் என்பவர் தமது ‘புவன கோசம்’ (Bhuvanakosa) என்ற நூலிலே சிந்து வெளிப் பல்லவர், தென்னாட்டுப் பல்லவர் என பல்லவர்களை இரு பிரிவாக்குகிறார். மேற் கூறியவற்றிலிருந்து பல்லவர் இந்நாட்டவரே என்று வாதிக்கப்படுகிறது. ஆனால் அறிஞர்கள் இதனை இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. திரு. சீனீவாச ஐயங்கார் பல்லவர் மத்திய இந்தியாவிலுள்ள நாகரோடு தொடர்புடையவர்கள் எனக் கூறியுள்ளார். பல்லவர் தென்னாட்டுக் குறும்பர்களோடு உறவுடையவர் என்பது டாக்டர் சிமித் கூற்று.

பல்லவருடைய பிறப்பிடம் தக்காணம்; அவர்கள் ‘பஃக்லவர்’ எனப்படுவர் என்பது சி. வி. வைத்யா என்பவரின் கருத்து. முனைவர் கிருட்டிணசாமி கூறுவதாவது:- தமிழ்ச் சொல்லாகிய தொண்டை என்பதற்கு வடசொல் பல்லவம். எனவே வடமொழியில் பல்லவர் என அழைக்கப்படுபவர்கள் தமிழ்த்தொண்டையர்களே. தொண்டை மண்டலம் அவர்களது சொந்த நாடாக இருந்திருத்தல் வேண்டும். ஈழநாட்டு அறிஞராகிய சி. இராசநாயகம் கூற்று வருமாறு:- தொண்டை மண்டலத்தின் முதல் அரசன் தொண்டைமான் இளந்திரையன். இவன் மணிமேகலையிற் குறிப்பிடப்படுகிறான். தொண்டைமான் இளந்திரையனின் தந்தை சோழன் கிள்ளிவளவன்; தாய் பீலிவளை என்னும் நாககன்னிகை. இவளது சொந்த நாடு ஈழத்திற்கு அருகில் உள்ள மணிபல்லவம். பிறந்தவுடனே தொண்டைமான் இளந்திரையன் தொண்டைக் கொடியினால் சுற்றப்பட்டுக் கடலில் மிதக்கவிடப்பட்டான். கடல் அலைகளினால் அக்குழந்தை சோழ நாட்டுக் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை வளர்ந்த பின் தொண்டை மண்டலத்திற்கு அரசனானது. எனவே பின்னர் அக்குழந்தையின் பரம்பரையினர் தாய் நாடாகிய மணி பல்லவத்தின் பெயரால் பல்லவர் என அழைக்கப்பட்டனர்.

ஆனால் மேற்கூறிய கருத்து பல்லவர் தமிழரசரோடு கொண்ட பகைமைக்குக் காரணம் தெரிவிக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல; பல்லவர் முதலில் தமிழைவிட வடமொழிக்கும், வடநாட்டுப் பண்பாட்டுக்குமே ஊக்கமும், ஆக்கமும் அளித்தனர். தமிழ்ப் புலவர்களால் சோழ பாண்டியரைப் போல் பல்லவர் அவ்வளவாகப் பாடப்படவில்லை. இதிலிருந்து பல்லவர் தமிழ் நாட்டவர் அல்லர் என்பது போதரும். “இத்தனை இடையூறுகளும், பல்லவர் என்போர் ஒரு குல மக்கள் அல்ல; அவர்கள் ஓர் கலப்பினம்; அஃதாவது நாக பார்ப்பனர் பரம்பரை எனக் கொள்ளின் தீர்ந்துபோகும்” என்று பேராசிரியர்? வ. பொன்னுசாமி பிள்ளை எழுதி உள்ளார்.

ஆந்திரப் பேரரசின் தென் மாநிலச் சார்பாளர்களாக (Governor)வும், அலுவலராகவும் இருந்த பல்லவர் ஏறத் தாழ கி. பி. 250-ல் ஆந்திரப் பேரரசு வீழ்ச்சியுற்றகாலை விடுதலை முழக்கம் செய்து தனியரசு அமைத்தனர். இத்தனியரசின் தலைநகர் காஞ்சி; துறைமுகம் கடல்மல்லை; அரசாங்க இலச்சினை நந்தி. அடுத்து பல்லவப் பேரரசர்களைப் பற்றிப் பார்ப்போம்.

முற்காலப் பல்லவர்கள்

பல்லவர் பரம்பரையினைத் தெளிவாகச் சொல்லுதல் அவ்வளவு எளிதன்று. முற்காலப் பல்லவர்களின் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் பெரிதும் பிராகிருத மொழியிலேயே அமைந்துள்ளன. எனவே முற்காலப் பல்லவர்களைப் பிராகிருதப் பல்லவர்கள் என்று அறிஞர் அழைப்பர். மயிதவோலு சாசனம், இரகதகல்லி சாசனம், பிரிட்டிசு மியூசியம் சாசனம் என்ற மூன்றும் முற்காலப் பல்லவரைப்பற்றி விளக்கமாக அறிவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன. மேலும் இவையே தமிழக வரலாற்றைக் குறிக்கும் முதற் சாசனங்களாகும்.

முற்காலப் பல்லவருள் முதல்வன் பப்பதேவன். பல்லவர்கள் தமிழிலக்கியங்களில் ‘காடு வெட்டிகள்’ என அழைக்கப்படுகின்றனர். அதனை மெய்ப்பிப்பதுபோல பப்பதேவன் தனது ஆட்சிக் காலத்தில் 100,000 கலப்பைகள் உழவர்கட்கு வழங்கி இருக்கிறான். அவர்கள் காடுவெட்டி நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி இருக்கின்றனர்.

பப்பதேவனுக்குப் பிறகு அவன்றன் மகனான சிவசுகந்தவர்மன் பல்லவ மன்னனானான். பட்டமேறியதும் இவன் காஞ்சியைக் கைப்பற்றினான். இவ்வெற்றிக்காக இவன் விசயக்கந்தவர்மன் என அழைக்கப்பட்டான். மயிதவோலு, இரகதகல்லி என்னும் இரு பட்டயங்கள் பிராகிருத மொழியில் அமைந்துள்ளன. அவை சிவசுகந்தவர்மனால் வெளியிடப்பட்டவை. அந்தப் பட்டயங்களின் மூலம் ‘சிவச்கந்தவர்மன் முற்காலப் பல்லவருள் சிறந்த மன்னன்; அவன் அசுவமேத யாகம் செய்தான்; தருமராசன் என்ற பட்டப் பெயருடையான்; அவன் மௌரியரைப் பின்பற்றி அரசாண்டான்; எனவே அவன்றன் ஆட்சி வட நாட்டு முறையில் அமைந்திருந்தது’ என்ற கருத்துக்களை அறியலாம்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்