Skip to main content

இலக்கியம் கூறும் தமிழர் கல்வி (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்

 அகரமுதல




 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  13 –  தொடர்ச்சி)

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  14

6. கல்வி

பழந்தமிழ் நாட்டில் கல்வியின் சிறப்பை யாவரும் உணர்ந்திருந்தனர்.  கல்வியற்ற மக்களை விலங்குகளோ டொப்பவே கருதினர் என்பது,

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

 கற்றாரோடு ஏனை யவர் ”        ( குறள்-410)

என்னும் வள்ளுவர் வாய்மொழியால் அறியலாகும்.  அரசரும் இவ் வுண்மை தெளிந்து தம் கடனாற்றினார் என்பது பின்வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் தெளியலாகும்.

“ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. ”   

(புறநானூறு -183)

திருக்குறட் பொருட்பாலில் இறைமாட்சிக்குப் பின்னர்க் கல்வி, கல்லாமை, கேள்வி எனும் தலைப்புகளில் கல்வியின் இன்றியமையாமையும் பயனும் வற்புறுத்தப்படுகின்றமையாலும் கல்வியைப்பற்றி அக்கால மக்கள் கொண்டிருந்த கொள்கை தெற்றெனப் புலனாகும்.  வாழும் மக்களுக்குக் கல்வி கண்ணெனவே போற்றப்பட்டு வந்துள்ளது.  ஆண் பெண் சாதி சமய வேறுபாடின்றி அனைவரும் கல்வி பெறவேண்டும் என்ற கொள்கையே நாட்டில் நிலவியது. அக்காலப் புலவர்களில் பல் தொழிலினரும் கொள்கையினரும் நிலையினரும் பெண்களும் இருந்துள்ளமையே இதற்குச் சான்றாகும்.

அக்காலத்திலும் கல்வியை அறிவியல் என்றும், கலையியல் என்றும் கூறுபடுத்தியுள்ளனர்.  அறிவியலை ‘எண் ’ என்றும், கலையியலை எழுத்து என்றும் அழைத்துள்ளனர்.  அதனாலேயே திருவள்ளுவரும்,

 “ எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்

   கண்என்ப வாழும் உயிர்க்கு”               (குறள்-392)

என்று கூறியுள்ளார் என்று கருதுதல் வேண்டும். ‘எண்’ என்பதற்கு வெறுங் கணக்கு என்றும், ‘எழுத்து’ என்பதற்கு வெறும் இலக்கணம் என்றும் பொருள் கூறுதல் பொருந்தாது. அறிவியலுக்கு எண்ணுதலும் கலையியலுக்கு எழுதுதலும் முதன்மையாக உள்ளனவாதலின் தமிழகப் பெரியோர் அறிவியலை எண் என்றும் கலையியலை எழுத்தென்றும் அழைத்து வந்துள்ளனர்.  ‘என்ப’ என்று கூறுவதிலிருந்து இக் குறியீடுகள் திருவள்ளுவர் காலத்துக்கு முன்பே வழக்கில் இருந்துள்ளன என்று தெளியலாகும்.  ‘ஒருவர்க்கு இவை இரண்டும் உயிர் போன்று இன்றியமையாதென’ என்று கூறியுள்ளதன் நயம் பாராட்டத்தக்கது.

அறிவியல் அறிவுக்குரியது; கலையியல் உள்ளவியல்பாம் பண்புக்குரியது.  அறிவு முதிர்ச்சியும் பண்பு முதிர்ச்சியும் ஒருசேர வாய்க்கப் பெற்றால்தான் கற்றோர் என்பவர் மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுவர்.  இன்றேல், கூர்த்த அறிவியலறிவால் அழிவுச் செயல்களும், முதிர்ந்த கலையியல் அறிவால் களி இன்பச் செயல்களும் மிகுந்து உலகம் கேடுறும். ஆகவே, இன்றைய பல்கலைக் கழகப் பாடத் திட்டம் இவ்விரண்டு பகுதிகளிலும் ஒருவர் புலமை பெறுவதற்குரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.  இதனை நம் முன்னோர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே அறிந்து மேற்கொண்டு ஒழுகினர் என்பது அறிந்து வியத்தற்குரியதன்றோ?

                அக்காலக் கல்வித் திட்டம் பொதுக் கல்வி, சிறப்புக் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என மூவகை நிலைகளைப் பெற்றுள்ளது.  பொதுக் கல்வி ஏழாண்டுகளும் சிறப்புக் கல்வி மூன்றாண்டுகளும் கற்ற பின்னர் ஆராய்ச்சிக் கல்விக் (ஞடிளவ பசயனரயவந) கென வெளியிடங்களுக்குச் சென்றுள்ளனர்.  சிறப்புக் கல்வியென்பது தாம் விரும்பும் தொழில் அல்லது கலைபற்றிப் பயில்வதாகும்.  இன்று பல்கலைக்கல்வி பயிலும் நாள்கள் ஏறக்குறைய ஆறு திங்களேயாகும்.  பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பெற ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் செலவழிக்கவேண்டியுள்ளது.  ஆண்டில் பாதிநாள்கள் விடுமுறை கொண்டுள்ள இன்றைய ஆறு ஆண்டுகளும் விடுமுறையில்லா அன்றைய மூன்று ஆண்டுகளுக்குச் சமமேயன்றோ?

அன்று தொழிற்கல்விக்குரியனவா யிருந்தன மருத்துவம், வாணிகம், கட்டடக் கலை, வானநூல், நெய்தல் கலை, உழவுத்தொழில், படைக்கலம் பயிறல், ஆட்சியியல், மனையியல்,  ஓவியக்கலை, படிமக்கலை (சிற்பம்), ஆசிரியரியல், புலவரியல் முதலியன என்று தமிழிலக்கியக் குறிப்புகளைக் கொண்டு அறிதல் இயலுகின்றது. தமிழ்நாட்டு அறிவியல் கலைஇயல் அறிஞர்கட்கும் வெளிநாட்டு அறிவியல்கலை இயல் அறிஞர்கட்கும் நெருங்கிய தொடர்பு இருந்துளது.  இருசாராரும் இங்கும் அங்கும் கலந்து உறவாடிப் பழகியுள்ளனர்.

கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் எவ்வாறு இயங்கின என்று கூறுவதற்குரிய குறிப்புகளில் ஒன்றும் இன்று கிடைக்கப்பெறவில்லை யென்றாலும் அவை இருந்தில என்று முடிவுகட்ட முடியாது. ஒவ்வொரு துறையிலும் கற்றுத் துறைபோகிய பேராசிரியர்கள் இருந்துள்ளனர்.  அவர்கள்        “ பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர்” என்று அழைக்கப்பட்டனர்.  நாட்டில் தொடர்ந்து வந்த மரபுமுறையில் கற்றுச் சிறந்தமையானே “ தொல்லாணை” எனும் அடையொடு சிறப்பிக்கப்பட்டனர்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அடையாளக்கொடி உண்டு.  ஒவ்வொருவருடைய வீடும் ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு கல்லூரியாக விளங்கியது.

                நல்லொழுக்கமுடைய சான்றோராக வாழும் நெறியறிவதற்கே அன்று கற்றனர்.  கசடறக் கற்றுக் கற்றவாறு ஒழுகலே கல்வியின் பயன் என்று கருதப்பட்டது.  பட்டத்திற்காகவோ பதவிக்காகவோ கற்கும் முறை அன்று இன்று.  ஆனால், கற்றுப் புலமை பெற்றுச் சிறந்தோரைப் பட்டமும் பதவியும் தேடிவந்தன.  இன்று பட்டத்திற்கும் பதவிக்கும் விருப்பங்கொண்டு கல்வி பெறுவதனால் கற்ற கல்விக்கும் வாழ்வுக்கும் தொடர்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

                கற்பதற்குரிய காலம் இளமைப் பருவமே ஏற்றது என்று கருதினர்.  ஆயினும், இளமைப் பருவத்தில் கல்வி பெறும் வாய்ப்பிலாதவர், முதுமைப் பருவத்தில் வாய்ப்பு நேரும் போதெல்லாம் கற்றல் வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டனர் என்பது,

“ யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

  சாந்துணையும் கல்லாத வாறு ”             (குறள்-397)

என்று கூறும் திருக்குறளால் தெளியலாம்.  வாழ்வில் நன்கு வெற்றி பெறவும், எல்லாரும் கூடி, உறவாடி இன்புற்று வாழவும், மன்பதையில் மேலோராக மதிக்கப்படவும், செல்வத்தை ஈட்டவும், ஈட்டிய செல்வத்தை நன்கு துய்க்கவும், தாம் இயல்பாகப் பெற்றுள்ள ஒட்பமும் அழகும் சிறப்புறவும், ஆட்சி முறையில் பங்குகொண்டு பணியாற்றவும், வாலறிவன் நற்றாள் தொழவும் கல்வியே பெருந்துணையாவது என்று கருதி, எல்லாரும் “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்.” அவ்விதம் கல்லாதாரைக் ‘ கடையர் ’ என்று இகழ்ந்தனர்.

அக்காலத்தில் புத்தகங்களைப் பலவாகப் பெருக்கி வெளியிடுவதற்குப் பெருந்துணை புரியும் அச்சுக்கூடம் தோன்றப் பெறவில்லை.  எழுத்தாணியால் பனை ஓலை ஏட்டில்தான் எழுதிப்படித்தனர்.  அவ்வாறு ஒவ்வொருவரும் எழுதிப்படித்தல் என்பது எல்லார்க்கும் எளியதன்று.  ஆதலின், கற்றலினும் கற்றோர்வாய்க்  கேட்டல் எளிதும் இனிதும் என்று கருதினர்.  கற்றாரும் கல்லாரும் கேள்விச் செல்வத்தைப் பெரிதென மதித்தனர்.    

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை”             (குறள்-411)

என்று போற்றினர்.  கேள்விச் செல்வம் உணவினும் பெரிதாகவும் உயர்பண்பின் விளைநிலமாகவும் கருதப்பட்டது.  இத்தகைய சீரிய செவிச்செல்வம் பெறாதார் செவிகள் செவிடெனவே கருதப்பட்டன. 

‘சினங்கொள்ளுதல் தீது’ என்று அறிவுறுத்தும் திருவள்ளுவர்கூடச் சினங்கொண்டு “செவிச்செல்வம் பெறாதார் வாழ்ந்தாலென்ன செத்தாலென்ன” என்று செப்புகின்றார்.

ஆதலின், அக்காலத்தில் கற்று வல்ல பெரியார்கள் தாம் கற்றவற்றை மக்களுக்கு அவ்வப்போது எடுத்துரைத்தனர் என்றும், மக்களும் அவ் வுரைகளைக் கேட்டுப் பயன் எய்தினர் என்றும் அறியலாகும்.

அக்கால மக்கள் கற்றலாலும் கேட்டலாலும் புலமை பெற்று நல்வாழ்வு எய்தினர்;  நாடு நாடாகவே இருந்தது.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்

 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்