தமிழியக்கம் ஓய்ந்ததே! – மறைமலை இலக்குவனார்
தமிழியக்கம் ஓய்ந்ததே!
இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யாம் வாழும் நாளே!
நில்லா உலகில் நிலைத்த புலமையும்
எல்லாத் துறையிலும் நிறைந்த அறிவும்
பல்லாயிரம் நூல் படைத்த திறமும்
ஓருருவாக ஒளிமிளிர்ந்தனரே!
கூர்த்த நுட்பமும் சீர்த்த மதியும்
ஆர்த்த சொல்வன்மையும் வாய்த்த இவரை
அனைத்துத் தமிழரும் உச்சிமேற் போற்றினர்;
காழ்த்த சிந்தை கடனெனக் கொண்டு
பாழ்த்த கூற்றுவன் உயிர்பறித்தனனே!
மாணவர் தமக்கெலாம் மாசறு விளக்காய்
புலவர்க்கெல்லாம் பொலிவுறு தலைவராய்
இலக்கிய ஆர்வலர் கலக்கம் போக்கித்
துலங்கிடும் கலங்கரை விளக்கமாகவே
வாழ்நாளெல்லாம் வயங்கிய மாமணி;
தமிழ்ப்பகை களைந்திடும் கொள்கை வைரம்;
ஆசான் இளங்குமரன் யாண்டுளர் கொல்லோ?
மாசிலாத் திங்களாய்த் திகழொளி முகமும்
ஆசிலாச் சுடராய் வழிகாட்டும் அறிவும்
உய்விலாத் தமிழனை உயர்த்திடும் இயக்கமும்
எங்கே மறைந்தன? உரைப்பீர் எமக்கே!
பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்
Comments
Post a Comment