அரங்கனின் குறள் ஒளி:5 : பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 3/3
(பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 2/3 தொடர்ச்சி)
பண்பில்லான் செல்வம் கெட்டழியும் 3/3
பேராசிரியர் வெ.அரங்கராசன்
மறுபக்கக் குறட் பா:
ஒப்பு நோக்குப் பகுதி:
அன்புகாட்டித், தன்செற்[று], அறம்நோக்கி, ஈட்டுகின்ற
ஒண்பொருள் நிற்கும் நிலைத்து.
–பேராசிரியர் வெ.அரங்கராசன்
புறச்சான்று – 2
பட்டை நாமம் போட்ட முட்டைக் கடையாளர்;
செயலரசன் என்பவன் ஒரு முட்டைக் கடையில் வேலை செய்துவந்தான். ஒவ்வொரு நாளும் அவன் 200 முட்டைகளை மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்படுவான். ஒவ்வொரு கடையாகப் போவான்; அவர்கள் கேட்கும் முட்டைகளைக் கொடுப்பான்.
மாலையில் அக்கடைகளுக்குச் செல்வான்; முட்டைகளுக்கு உரிய தொகைகளைப் பெற்றுக்கொள்வான். பெற்ற தொகைகளைக் கடையாளரிடம் ஒப்படைப்பான். எல்லா வேலைகளும் முடிந்தவுடன் வீட்டுக்குப் போய்விடுவான்.
ஒரு நாள் காலையில் வழக்கம்போல் 200 முட்டைகளை மிதி வண்டியில் ஏற்றிக்கொண்டான்; மகிழ்ச்சியாகப் புறப்பட்டான்.
“உழைக்கும் கைகளே..! உருவாக்கும் கைகளே..!
உண்டாக்கும் கைகளே..! என்னருமைக் கைகளே..!”
என வாய்க்கு வந்தபடி உரத்த குரலில் பாடிக் கொண்டே சென்று கொண்டிருந்தான்.
அப்போது எதிரே ஒரு துள்ளுந்து தாறுமாறாக வந்து கொண்டிருந்தது. ஓட்டிவந்தவன் அதிகமாகக் குடித்திருந்தான். அஃது இவன்மேல் மோதுவதுபோல் வந்தது. இவனும் கொஞ்சம் அங்கும் இங்குமாகத் தடுமாறினான்.
தடுமாறியவன் கீழே விழுந்தான்; முட்டைகள் எல்லாம் சாலையில் விழுந்தன. எல்லாம் உடைந்து சிதறின. தலையில் கை வைத்துக்கொண்டு அழுதான் செயலரசன். “முதலாளிக்கு என்ன சொல்வது..?” எனக் கத்தினான்; கதறினான்
அப்போது அங்கு வந்த மதிஒளி என்பவர் அவனது நிலை கண்டார்; மிக வருந்தினார். உடனே அவர், கவலைப்படாதே..! உனக்கு ஏற்பட்ட இழப்பில் நானும் பங்கு பெறுகின்றேன். இந்தா இந்த 100 உரூ. வைத்துக்கொள்.” எனக் கூறிக் கொண்டே 100 உரூ. கொடுத்தார்.
மதிஒளி கூட்டத்தாரைப் பார்த்து,
“நான் 100 உரூ.கொடுத்ததுபோல் நீங்களும் முடிந்த தொகைகளைக் கொடுத்து, அவனது இழப்பில் பங்கு கொள்ளுங்கள்.” எனக் கேட்டுக்கொண்டார்.
உடனே அங்கு இருந்தவர்களும் ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தார்கள்.
உதவச் சொன்னவர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். இறுதியில் மொத்தம் 1250 உரூ.சேர்ந்தது. செயலரசன், “ உங்கள் எல்லா ருக்கும் நன்றி.” எனக் கையெடுத்துக் கும்பிட்டான். முட்டைகளின் விலையோ 1000 உரூ.தான். இப்போது 250ரூ. அதிகமாகவே சேர்ந்துவிட்டது.
அதில் ஒருவர், “எங்களுக்கு நன்றி சொல்வதைவிட உன் இழப்பில் பங்கு கொண்டு, எல்லாரும் முடிந்த அளவு தொகை களைக் கொடுங்கள் என எங்களுக்கு நல்லதொரு வழிகாட்டி னாரே அவருக்குத்தான் முதலில் நீ நன்றி சொல வேண்டும்.” என அறிவுறுத்தினார்..
செயலரசன், “அவருக்கு நான் நன்றி சொல்லத் தேவை இல்லை.” என்றான்.
“அவருக்கு ஏன் நன்றி சொல்லத் தேவை இல்லை..?”
“அவர்தான் என் முதலாளி.”
கூட்டத்தார்???!!!!!. இஃது எப்படி இருக்கு..?
பொருள் ஈட்டல் பற்றிச் சில சிந்தனைகள்:
பொருள் ஈட்டல் பற்றிச் சில சிந்தனைகளை இங்குக் காண்பது பொருத்தம் எனக் கருதுகின்றேன். அதற்காகச் சில குறட் பாக்களை மட்டும் இங்கு அகச்சான்றுகளாக இயம்புதும்.
எல்லாரும் பொருள் ஈட்ட வேண்டும்;
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் பாடாத பொய்யா மொழி யார் திருவள்ளுவர் பொருள் ஈட்டலின் இன்றியமையாமையைக் கீழ்க்காணும் குறட் தொடரில் கூறுகின்றார்.
செய்க பொருளை [குறள்.759]
சாதி, இனம், மதம், நிறம், மொழி, கட்சி, நாடு, ஆண், பெண் போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்து உலகத்தார் அனை வருக்கும் பொருள் ஈட்டும் உரிமை உண்டு என மேற்காணும் ஈரடிக் குறட் தொடர் இயம்புகின்றது.
எப்படிப் பொருள் ஈட்ட வேண்டும்?
திறன்அறிந்[து]
தீ[து]இன்றி வந்த பொருள் [குறள்.754]
பொருள் உரை:
பொருட் செல்வத்தைத் திரட்டும் வழிமுறைகளை ஆழ்ந்து, ஆராய்ந்து அறிய வேண்டும். ஆராய்ந்து, அறிந்து கண்ட பின்னர் அவ்வழிமுறைகள்வழி அறமுறையைக் கடைப்பிடித்துப் பொ ருட் செல்வத்தைத் திரட்ட வேண்டும்.
எப்படிப் பொருள் ஈட்டக் கூடாது?
அருளையும் அன்பையும் பொருந்தாமல்
பொருள் ஈட்டக் கூடாது.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
புல்லார்; புரள விடல் [குறள்.755]
பொருள் உரை:
எவர்மீதும் எந்த உயிர்மீதும் அருளையும் பொழியாமல் அன்பையும் காட்டாமல் வருகின்ற பொருள் ஆக்கத்தைப் பொ ருந்தக் கூடாது. அது தீமை பொருந்தியது என எண்ண வேண்டும். அதைப் பொருந்தாது, உடனே கைவிட்டுவிட வேண்டும்.
வஞ்சக உணர்வோடு பொருள் ஈட்ட கூடாது.
சலத்தால் பொருள்செய்[து]ஏ மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்[து]இரீஇ அற்று [குறள்.660]
பொருள் உரை:
வஞ்சக உணர்வோடு பொருள் செய்து, அதைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தல், எதனைப் போன்றது என்றால்,
சுடப்படாத பச்சை மண் கலத்தில் நீர் ஊற்றிவைத்து, அந்த நீரைக் காப்பற்றுதல் போன்றதாம்.
புறச்சான்று – 3, ஒரு கவிதை: நேர்வழி ஈட்டம் ஓட்டும் துன்பத்தை
ஈட்டும் பொருள்கள் நேர்வழியில்
வருதல் வேண்டும்;
கூட்டும் இன்பத்தை அவைதான்;
ஓட்டும் துன்பத்தை;
பாட்டும் புகழ்ந்திடும்; சூட்டும்
மகுடத்தைச் சமுதாயம்;
நாட்டும் மகிழ்வை; ஊட்டும்
மதிப்பை மாநிலமே.
Comments
Post a Comment