அகல் விளக்கு – மு.வரதராசனார்: 14
(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 13. தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 6
பெருங்காஞ்சி என் உள்ளத்திற்குப் பிடித்த ஊராக இருந்தது. கண்ணிற்கு இனிய காட்சிகள் பல அங்கே இருந்தன. முதலாவது, வண்டிகளும் பஸ்களும் செல்லும் சாலையாக நீண்ட ஏரிக்கரை அகலமாக அமைந்திருந்த காட்சியும் கரை நெடுக மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்த காட்சியும் அழகாக இருந்தன. இடக்கைப் பக்கம் ஏரியும் வலக்கைப் பக்கம் வயல்களும் எதிரே கரிமலையும் சோழ சிங்கபுர மலையும் கண்டேன். அதுபோன்ற காட்சி எனக்கு – நகரத்தில் சில தெருக்களையே திரும்பத் திரும்பக் கண்டு வந்த எனக்கு – இன்பமாக இருந்தது. என் சொந்த அத்தையின் ஊராகிய வேலூர்க்குப்போய் அங்கே ஏரியையும் வயல்களையும் கண்டிருக்கிறேன். ஆனாலும் அந்த ஊர்க் காட்சி என் மனத்துக்கு அவ்வளவு இன்பமாக இருந்ததில்லை. பெருங்காஞ்சியில் சந்திரனும் கற்பகமும் வாழ்ந்ததே ஒரு வகையில் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
“இப்போது ஏரியில் தண்ணீர் வற்றிவிட்டது. மழை பெய்து வெள்ளம் வந்து நீர் நிறைந்திருக்கும்போது எங்கள் ஊர் ஏரியை வந்து பார்க்கணும். அப்போதுதான் இதன் உண்மையான அழகு தெரியும்” என்றான் சந்திரன்.
“எந்த மாதத்தில்?”
“அதாவது” என்று சந்திரன் தயங்கினான்.
“புரட்டாசி ஐப்பசியில்” என்றார் அத்தை.
“புரட்டாசி ஐப்பசி என்றால் என்ன மாதம்” என்று நான் கேட்டேன்.
“செப்டெம்பர் அக்டோபர்” என்று சந்திரன் சொன்னான்.
“அப்படியானால் ஒரு முறை அப்போதே வருவேன். கால் தேர்வு முடிந்து செப்டெம்பரில் பதினைந்து நாள் விடுமுறை விடுவார்களே, அப்போது வருவேன்” என்றேன்.
ஏரிக்கரையைக் கடந்து ஊர்க்குள் சென்றோம். ஊர் சின்ன ஊர்தான். சில ஓட்டு வீடுகளும் பல மஞ்சம்புல் வீடுகளும் காணப்பட்டன. அந்த ஊரிலேயே சந்திரனுடைய வீடுதான் எடுப்பாகவும் பெரியதாகவும் இருந்தது. வீட்டின் எதிரே தென்னங்கன்றுகள் ஆறு வரிசையாக வளர்ந்து வந்தன. எதிரே ஒரு மாந்தோப்பும் தென்னந்தோப்பும் காணப்பட்டன. என் பார்வையைக் கண்ட சந்திரன், “இரண்டும் எங்கள் தோப்புகள் தான்” என்றான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் சந்திரனுடைய தாய் எங்களை – சிறப்பாக என்னை – வரவேற்றார். கற்பகம் இல்லாதது கண்டு காரணம் தெரியாமல் நின்றேன். எங்கோ போயிருந்த அவள் சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து, எதிர்பாராமல் என்னைக் கண்டதும், பல்லெல்லாம் தெரிய முகம் மலர்ந்து நின்றாள். சந்திரனுடைய தாய், அவளைப் பார்த்து, “கற்பகம்! கைகால் அலம்பத் தண்ணீர் மொண்டு கொடு” என்று சொல்லிக்கொண்டே எனக்காக ஒரு பாய் எடுத்து விரித்தார்.
கற்பகத்தின் கையில் இருந்து செம்பை வாங்கி முகம் அலம்பினேன். சந்திரன் அலம்பிக் கொண்டதும் கூடத்துக் கட்டிலில் போய் உட்கார்ந்தோம். நான் பாயில் உட்காரச் சென்றேன். “வேலு! அது யாராவது பெரியவர்களுக்கு, நமக்கு இதோ கட்டில்” என்று அழைத்தான்.
சந்திரனுடைய தாய், பழங்காலத்து வெண்கலச்செம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்து என் கையில் கொடுத்து, “மோர் கொண்டு வரட்டுமா?” என்றார்.
“அம்மா அம்மா! வேண்டாம்’மா என்றான் சந்திரன். “மோரும் இதுவும் அதுவும் கொடுத்து இவனுடைய உடம்பைக் கெடுத்துவிடாதே. இந்த உடம்பு தொட்டாற் சுருங்கி போல. இவனுடைய அம்மா என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்லியனுப்பினார். அப்புறம் ஏதாவது வந்தால் நான்தான் பழிக்கு ஆளாவேன்” என்றான்.
எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பேசாமல் இருந்தேன்.
“தண்ணீரா? வெந்நீரா?” என்று சந்திரன் தன் தாயைக் கேட்டுவிட்டு, என் கையில் இருந்த செம்பை தொட்டுப் பார்த்தான். உடனே அதை வாங்கிக்கொண்டு, “இவனுக்கு இப்படித் தண்ணீர் கொடுக்கவே வேண்டா” என்று எழுந்து போனான். சிறிது நேரத்தில் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்து, “எங்கள் ஊரில் இருக்கிற வரைக்கும் உடம்புக்கு ஒன்றும் வராமல் காப்பாற்ற வேண்டுமே” என்றான்.
தெற்குப் பார்த்த வீடு அது. நான்கு பக்கமும் தாழ்வாரம் இறக்கி, வடக்குப் பக்கத்தில் பெரிய கூடம் அமைத்திருந்தார்கள். பெரிய பெரிய அறைகளும் அவற்றை அடுத்தாற்போல் களஞ்சியங்களும் இருந்தன. ஒரே வேளையில் நூறு பேர் உட்கார்ந்து உண்ணக்கூடிய அவ்வளவு இடப்பரப்பு இருந்தது. நான் இருந்த அந்தப் பக்கத்து அறையில் எட்டிப் பார்த்தேன். தேங்காய்கள் ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தன. இன்னொரு மூலையில் அரிசி கொட்டி வைத்திருந்தார்கள். பக்கத்தில் சில மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார்கள். எண்ணெய் டின்கள் ஒரு பக்கம் வரிசையாக இருந்தன.
சந்திரனுடைய தந்தை வந்தவுடன் என்னைப் பார்த்து வியப்பு அடைந்தார். “நீயும் வந்தது மிகவும் நல்லது. நான் எதிர்பார்த்தேன். தேர்வு எல்லாம் எப்படி எழுதியிருக்கிறீர்கள்? சந்திரன் தேர்ச்சி பெற்று விடுவானா?” என்று கேட்டார். என்னுடைய விடைகள் அவருக்கு மகிழ்ச்சி அளித்தன.
கற்பகமும் அவளுடைய தாயும் சில தட்டுகளைக் கொண்டுவந்து எங்கள் முன் வைத்தார்கள். மிளகுப் பொங்கலும் முறுக்கும் இருந்தன. சந்திரனும் நானும் தின்றோம். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அவனுடைய தாய் வற்புறுத்தினார். “வற்புறுத்த வேண்டா அம்மா. உடம்பு கெட்டுவிடும். தேவையானால் என்னைப் போல் கேட்டுச் சாப்பிடட்டும்” என்றான் சந்திரன்.
“சந்திரா! இது என்ன இது? உடம்பு கெட்டுப்போகும், உடம்பு கெட்டுப்போகும் என்று பல்லவி பாடுகிறாய், போதும் போதும்” என்றேன்.
“உங்கள் அம்மா எவ்வளவு கவலைப்பட்டுச் சொல்லியிருக்கிறார்.”
“உன்னால் உடம்பைப் பற்றிய கவலையே போய், ஒரு துணிச்சலே வந்து விடும்போல் இருக்கிறதே.”
“வரட்டும்; மிக மிக நல்லது.”
ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்தது. அதைக் கண்டதும் எனக்கு அச்சமாக இருந்தது. அது சந்திரனிடம் நெருங்கி வாலைக் குழைத்துக் குழைத்து அவனுடைய கையை நக்கியது. என்னை நெருங்கியது. நான் கால்களை மேலே எடுத்துச் சுவர் ஓரமாக நகர்ந்தேன். “பயப்படாதே; ஒன்றும் செய்யாது; பயந்தால் அதற்குச் சந்தேகம் ஏற்படும். நல்ல நாய். காவலுக்காக வளர்க்கிறோம். சும்மா இரு. அசையாதே” என்றான் சந்திரன். நாய் என்னை உற்றுப் பார்த்தது. அதனுடைய பார்வை கடுமையாக இருந்தது. பிறகு, என் எதிரிலேயே படுத்தது. பார்வை மட்டும் என் மேலேயே இருந்தது. “நீ நெருங்கிவா. அது உன்னை முகர்ந்து பார்த்துப் பழகி விட்டால்தான் நல்லது. அதுவரையில் உன்னை அந்நியன் என்றே பார்த்துக் கொண்டிருக்கும்” என்றான் சந்திரன். என் கையைப் பிடித்து இழுத்து அதனிடம் கொண்டு சென்றான். அது வாலைக் குழைத்தபடியே என்னை முகர்ந்து பார்த்துவிட்டுத் தலைவைத்துப் படுத்தது.
தெருப்பக்கம் போய் ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தோம். இருபது வயது உள்ளவள் ஒருத்தி சந்திரனைப் பார்த்து, “எப்போ மாமா வந்தே? எங்கள் பெரியம்மாவும் வந்திருக்கிறாங்களா?” என்றாள். அவளுடைய ஆடையும் தோற்றமும் பார்த்தால் வேலைக்காரிபோல் தோன்றினாள். “இப்பத்தான் வந்தேன். அத்தையும் வந்திருக்கிறார்” என்றான் சந்திரன்.
“யார் சந்திரா? உங்கள் சின்ன அத்தை மகளா?” என்றேன்.
“சின்ன அத்தையா? அப்படி யாரும் இல்லையே! இந்த அம்மா அதோ அந்த வீட்டு மருமகள்” என்று நாலைந்து வீட்டுக்கு அப்பால் இருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டினான்.
“உனக்கு உறவா?”
“உறவும் இல்லை, ஒன்றும் இல்லை.”
“மாமா என்று அழைத்தாளே!”
“எங்கள் ஊரில் அப்படி முறையிட்டு அழைக்கும் வழக்கம் உண்டு. எந்தச் சாதியாக இருந்தாலும் அப்படித்தான். மாமா, மச்சான், அத்தை, பெரியம்மா, அண்ணன், சிற்றப்பா என்று யாரும் ஒருவரை ஒருவர் முறையிட்டுத் தான் பேசுவார்கள், வேடிக்கையாகவும் பேசுவார்கள். இதில் சாதி வேறுபாடு ஒன்றுமே இல்லை.”
எனக்கு இது வியப்பாக இருந்தது.
Comments
Post a Comment