Skip to main content

அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 4/5

அகரமுதல 




சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 4/5

பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

புறச்சான்று – 7:

சேராத இடந்தன்னில் சேர வேண்டா;

சேர்ந்து பலதுயரோடு வாழ வேண்டா:

            செல்வர் நல்லகத்தான் தம் மகன் திருச்செல்வனைச்  செல்லமாக வளர்த்துவந்தார். அவனும் எந்த வகைக் கவலையும் இல்லாமல், கண்டவர்களோடு பழகினான். கண்டபடி ஊர் சுற்றி வந்தான். மகன் கெட்டுப் போய்விடுவானோ என்ற அச்சம் செல்வருக்கு வந்தது. தீய நண்பர்களோடு அவன் பழகாமல் இருக்க  என்ன செய்யலாம் என இரவு, பகல் தூங்காமல் சிந்தித்து வந்தார். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

            ஒரு நாள் மகனிடம் ஆரஞ்சுப் பழங்களை வாங்கி வரச் சொன்னார். அவனும் வாங்கி வந்தான். அதில் ஒரு பழம் மென்மையாக அழுகி இருந்தது. மகன் அந்தப் பழத்தைத் தூக்கி எறியப் போனான்.

செல்வர் நல்லகத்தான் அவனைத் தடுத்துவிட்டார், “நல்ல பழங்களுடன் அந்தப் பழத்தையும் சேர்த்துவை.” என்றார். 4 நாள்கள் சென்றன. தமது மகனிடம் பழங்களை எடுத்துவரச் சொன்னார். எல்லாப் பழங்களும் அழுகியிருந்தன.

            மகன் திருச்செல்வன் சினத்துடன் கேட்டான் “அந்த அழுகின பழத்தை முதலிலேயே தூக்கி எறிந்திருந்தால், எல்லாப் பழங்களும் கெட்டுப் போயிருக்காதே! அப்பா.”

            “நீ சொல்வது மிகச் சரியானது. கெட்டவன் ஒருவன் உனக்கு நண்பனாக இருந்தால் போதும், முழுக்க நீயும் கெட்டுப் போவாய். நீ கெட்டுப்போவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நீ கெடாமல் இருக்க வேண்டும். எனவே,  கெட்ட நண்பர்களை விட்டு, உடனே விலகி வந்துவிடு” என்றார்.

            உண்மையை அன்பு மகன் உணர்ந்தான்;

            புன்மையான நண்பர்கள் நட்பை விட்டான்.

புறச்சான்று – 8: குறுங்கதைச் சான்று:

சிற்றினத்தைக் கண்டால் தூர விலகு; 

பற்றிக்கொள் ளாமல் விலகுதல் அழகு:  

மனைவி இன்சொல்லிக்கும் கணவன் அருளரசனுக்கும் எலிக்கும் பூனைக்கும் உள்ள வலிய உறவுதான். இருவரும் உயர் கல்வி கற்றவர்கள். தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்றார்கள். கை நிறைய ஊதியம் பெறுகின்றார்கள். 

மிகச் சிறிய – புன்மையான காரணங்களுக்காககூடச் சண்டை இடுவார்கள். சினப்பார்கள்; சீறுவார்கள்; கடுமையாகவும் கொடுமையாகவும்  மோதிக்கொள்வார்கள்.

அப்போது எல்லாம் சொற்போர் நிகழும். அந்தச் சீற்றப் போரின் போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என அவர்களுக்கே தெரியாது. அகரமுதலியில் இல்லாத சொற்களை எல்லாம் அங்குக் கேட்கலாம். கேட்பவர் காதுகளிலிருந்து குருதி வடியும்.   

சொற்சேற்றை ஒருவர்மீது ஒருவர் சும்மா அள்ளி அள்ளி வீசுவார்கள். வீடெல்லாம் நாறும். பக்கத்து வீட்டார்கள் எல்லாரும் கேட்டுக் கேட்டுச் சிரித்து மகிழ்வார்கள்; கேலி செய்வார்கள்.

இதில் என்ன கொடுமை என்றால்,  அவர்களது ஒரே மகன் கனிமொழியன் திருதிருவென விழித்துக்கொண்டு, கேட்டுக் கொண்டிருப்பான். அவனுக்கு ஒன்றுமே புரியாது. ஆனாலும். அவனது மனத்தில் அவர்கள் அள்ளி வீசும் சொற்சேறுகள் எல்லாம் ஆழமாகப் பதிந்துவிடும்.

நல்லவை எல்லாம் அவ்வளவு

எளிதில் மனத்தில் பதியாது;

அல்லவை எல்லாம் விரைவில்

 ஆழமாக எளிதில் பதியும்.

இருவரும் களைத்துப்போன பின்னர்தான் சொற்போருக்கு ஓய்வு கிடைக்கும். சொற்களே சோர்ந்து போகும் என்றால், பார்த்துக்கொள்ளுங்களேன்! அவற்றிற்கும் ஓய்வு தேவை அல்லவா?

இரவில் கனிமொழியனைப் படிக்கச் சொல்லி இன் சொல்லி கட்டாயப்படுத்துவாள். அது அவனுக்குப் பிடிக்காது. கணவன்மீது உள்ள சீற்றம் குழந்தையின் முதுகில் ஏற்றுமதியாகும்.  அவன் கற்றுக்கொண்டுவந்த சொற்சேற்றை அம்மாமீது பூசுவான். அவள் திடுக்கிடுவாள். உடனே பேச்சை மாற்றுவாள். “சரி! சரி! பிறகு படி.” எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவாள்.  

மாலையில் அன்பரசன் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடுவான். அப்போது எவனாவது அவனுக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்தால். வீட்டில் கற்றுக்கொண்ட சொற்சேற்றை அவன்மீது அள்ளி அள்ளி வீசுவான்.

மற்ற குழந்தைகளும் அவற்றைக் கற்றுக்கொள்வார்கள்.  இதற்கு ஆசிரியர்கள் தேவை இல்லை. அவர்கள் இல்லாமலேயே அழகாகக் கற்றுக்கொள்வார்கள்.

கற்றுக்கொண்ட அக்குழந்தைகள் வீடுகளில் இருக்கும்போது அவர்களுக்குச் சினம் வந்தால், அந்த ஒப்பற்ற சொற்சேற்றை அப்பாக்கள்மீதும், அம்மாக்கள்மீதும் அப்புவார்கள்.

அவர்கள் அதிர்ந்துபோவார்கள். அன்றிலிருந்து அவர்கள் வீடுகளில் சிறைவைக்கப்படுவார்கள். “படி! படி!” எனப் படிப்பைத் திணிப்பார்கள்.

இவ்வாறு கெட்டுப்போன குழந்தைகள் அப்படியே வளர்வார்கள். அதனால், பெருங்கேடுகளையும் பெருந்துன்பங்களையும் அடைவார்கள்; மனநலம், மனஅமைதி மறையும். மனஉளைச்சல்  மனத்தில் நிறையும். வாழ்க்கையே வெறுமையாகும்; வாழ்க்கையே வீழ்ந்துபோகும்; வெறுப்பில் வாழ்க்கை ஆழ்ந்துபோகும்.  வாழ்க்கையே பாழாகும்; குடும்ப வாழ்க்கை கொடுமையிலும்  கடுமையிலும் ஆழ்ந்துபோகும்.   

புறச்சான்று – 9: ஒரு விளக்கம்:

சந்தனத்தோயு கலந்த தண்ணீர்:


சந்தனக் குழம்பில் தண்ணீரை ஊற்றிக் கலக்கின்றோம். சந்தனத்தோடு கலந்த தண்ணீரும் சந்தன மணத்தைப் பெறும். சந்தனமும் நல்லியல்பு உடையது. தண்ணீரும் நல்லியல்பு உடையது. இரண்டும் கலந்தால், தத்தம் நல்லியல்பிலிருந்து திரியாவாம்.

அதுபோலவே,

நல்லியல்பு உடையவர் நல்லியல்பு உடையவரிடம் நட்பால் கலந்தால், இருவரது நல்லியல்புகளும் மாறாவாம். பண்பாளர்களிடம் சேர்ந்த எளியர்களும் நாள்கள் செல்லச் செல்லப் பண்பாளர்களாக மாறுவார்கள்.


புறச்சான்று — 10: இலக்கியச் சான்று:

சான்றோரது சிறப்பார்ந்த சேர்க்கை,

ஊன்றுமாம் எஞ்ஞான்றும் பேரின்பம்:

 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே; – நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ[டு]

இணங்கி இருப்பதுவும் நன்றே.

                                 –ஔவையார், மூதுரை– 8

பொருள் உரை:

           ஒழுக்கம், அன்பு, அருள், இரக்கம், கல்வி, கேள்வி, நுண்ணறிவு போன்றவற்றால் சிறந்து, உயர்ந்து நிற்கின்ற சான்றோரைக் காண்பதும் நல்லது. அத்தகு சான்றோர்களது நலமும் பயனும் நல்கும் சொற்களைக் கேட்பதும் நல்லது. அவர்களது பண் பியல்புகளைப் பேசுவதும் நல்லது. அவர்களோடு இணக்கமாகக் கூடியிருப்பதும் நல்லது.

(தொடரும்

கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்