Skip to main content

அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5

 அகரமுதல



சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5

பேராசிரியர் வெ.அரங்கராசன்

புறச்சான்று – 2

ஒப்பு நோக்குப் பகுதி – இலக்கியச் சான்று:

யாயும் ஞாயும் யார்ஆ கியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

                                             -செம்புலப் பெயல்நீரார்குறுந்தொகை, 40.

பொருள் உரை:

என் தாயும் நின் தாயும் ஒருவருக்கு ஒருவர் எத்தகைய உறவின் முறையினராவர்?

எத்தகைய உறவின் முறையினரும் அல்லர்.

என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்?

எத்தகைய உறவின் முறையினரும் அல்லர்.

இப்பொழுது பிரிவு இன்றி இருக்கும் யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்?

முன்பு அறிந்தோம் அல்லேம். 

இம்மூன்றும் இல்லை.

எனினும்  செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர், அம்மண்ணோடு இரண்டறக் கலந்துவிடும். கலந்து, அம்மண்ணின் தன்மையை அடையும். அதுபோலத்தான் என்றும் மாறாத அன்பு கெழுமிய நம் நெஞ்சங்களும் தாமாகவே ஒன்றுபட்டு, இரண்டறக்  கலந்துவிட்டன.

விளக்க உரை:

            இந்தக் குறுந்தொகைப் பாடலின் “செம்புலப் பெயல்நீர் போல” எனும் அடி, 452ஆவது குறளின்  “நிலத்[து]இயல்பால் நீர்திரிந்[து] அற்[று]” எனும் அடிக்குச் சாலச்சிறந்த சான்றாம்.

            குறுந்தொகைப் பாடலின் முதல் மூன்று அடிகள், பழந்தமிழர்கள், சாதி, மதம், இனம், நிறம், நிலம், நாடு போன்ற எல்லைகளைக் கடந்து நின்றனர் என்பதைக் காட்டுகின்றன. விழுமிய – மிக உயர்ந்த – பண்பட்ட களவு [காதல்] ஒழுக்கத்தை – வாழ்க்கையைக் கொண்டிருந்தனர் என்பதும் விளங்கும்.

ஒப்பு நோக்குக:

            பிறப்[பு]ஒக்கும் எல்லா உயிர்க்கும்                   [குறள்.972]

என்னும் குறட் தொடரிலும் குறளாசான் கூறியுள்ள, மிக உயரிய பிறப்பியல் சமன்மைக் கோட்பாடு சிறப்புற்றிருக்கின்றது என்பதை உணர்க; உள்ளுள் மகிழ்ந்து உவந்திடுக.

            அஃதாவது, பிறப்பால் எவருக்கும் உயர்வும் அமையாது;  தாழ்வும்  அமையாது; எல்லாரும் சமன்மைத் தன்மையர்களே.      

இந்தக் கோட்பாடு அனைத்து உலகத்தார்க்கும் பொருந்தும் என்பதும் இங்கு எண்ணிப் பார்க்கத் தக்கது.

புறச்சான்று – 3: திரைப் படப் பாடல்:

ஒப்பு நோக்குப் பகுதி:

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ?
காணும் வரை நீ எங்கே நான் எங்கே?
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே?

          –வண்ணத் தமிழ்க் கவிஞன் கண்ணதாசன்

புறச்சான்று –  4: திரைப் படப் பாடல்:

சிற்றினத்தோடு வைக்கும் கூட்டு;   

பற்றிக்கொள்ளும் துன்பப் பாட்டு:

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா!
கருணா! வருவதை எதிர்கொள்ளடா!
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா!
கருணா! வருவதை எதிர்கொள்ளடா!

தாய்க்கு நீ மகனில்லை!
தம்பிக்கு அண்ணனில்லை!
தாய்க்கு நீ மகனில்லை!
தம்பிக்கு அண்ணனில்லை!
ஊர்ப்பழி ஏற்றாயடா!

நானும் உன்பழி கொண்டேனடா!
நானும் உன்பழி கொண்டேனடா!
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா!
கருணா! வருவதை எதிர்கொள்ளடா..!

மன்னவர் பணிஏற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கருணா!
மன்னித்து அருள்வாயடா!
கருணா! மன்னித்து அருள்வாயடா!
செஞ்சோற்றுக் கடன்தீர்க்கச்

சேராத இடம்சேர்ந்து,
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா! கருணா!
வஞ்சகன் கண்ணனடா!
கருணா! வஞ்சகன் கண்ணனடா!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா!
கருணா! வருவதை எதிர்கொள்ளடா!

          –வண்ணத் தமிழ்க் கவிஞன் கண்ணதாசன்

இந்தப் பாடலில் அமைந்துள்ள

சேராத இடம்சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா! கருணா!

என்னும் ஈரடிகள்

மாந்தர்க்[கு]

இனத்[து]இயல்[பு] ஆகும் அறிவு

என்னும் 452ஆவது குறளின் இரண்டாம் பகுதியை நன்கு மெய்ப்பிக்கின்றது. சிற்றினம் சேராது, பேரினம்  சேர வேண்டியதன் இன்றியமையாமையைப் பெரிதும் வலியுறுத்துகின்றது.

 இந்தப் பாடல் சிற்றினம் சேர்ந்தால், உறவுகள் அறும்; பழி வரும்; எதிர்மறை வினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பனவற்றையும் எடுத்துக்காட்டுகின்றது.

(தொடரும்) 

கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன் 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue