அகல் விளக்கு – மு.வரதராசனார்: 17
26 July 2021 No Comment
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 16. தொடர்ச்சி)
அகல் விளக்கு
பள்ளிக்கூடம் திறந்தவுடன் நானும் சந்திரனும் மேல் வகுப்பில் உட்கார்ந்தோம். அங்கே தலைமையாசிரியர் வந்து, ‘சந்திரன்!’ என்று பெயரைக் கூப்பிட்டு, அவனிடம் வந்து முதுகைத் தட்டிக்கொடுத்தார். “எல்லாப் பாடத்திலும் இவன்தான் முதன்மையான எண்கள் வாங்கியிருக்கிறான். இவன் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவான். நம் பள்ளிக்கூடத்துக்கும் இவனால் நல்ல பெயர் கிடைக்கும்.
இப்படியே படித்து வந்தால், அடுத்த ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பில்(எசு.எசு.எல்.சி.யில்) மாநிலத்திலேயே முதல்வனாகத் தேறமுடியும். மற்ற மாணவர்கள் இவனைப் போல் பாடுபட்டுக் கற்கவேண்டும்” என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பாராட்டில் பாதி எனக்குக் கிடைத்ததுபோல் நானும் மகிழ்ந்தேன். சந்திரன் என் பக்கத்தில் உட்காருவது பற்றியும், என் தெருவில் குடியிருப்பது பற்றியும், என் நண்பனாக இருப்பது பற்றியும் பெருமை கொண்டேன்.
அந்த வகுப்பில் வரலாறு, விஞ்ஞானம், கணக்கு ஆகிய மூன்றில் ஒரு பாடத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் அதை முடிவு செய்ய வேண்டும் என்றும் தலைமையாசிரியர் கூறிவிட்டுச் சென்றார்.
வீட்டுக்குச் செல்லும் வழியில் எதைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொள்வது என்று எண்ணிக்கொண்டும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டும் சென்றோம். எங்களால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. எங்கள் இரண்டு குடும்பங்களிலும் அதற்கு வழிகாட்டக் கூடியவர்கள் யாரும் இல்லை.
பாக்கிய அம்மையாரின் தம்பி பத்தாவது வரையில் படித்தவர். ஆகையால் அவரைக் கேட்டால் தெரியும் என்று அம்மா சொன்னார். உடனே நானும் சந்திரனும் பாக்கியத்தின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே அவர் இல்லை. “தம்பி வரும் நேரம் ஆயிற்று. வந்ததும் கேட்டு வைத்துச் சொல்’றேன்” என்றார் அந்த அம்மா. சந்திரனைப் பார்த்து, “தலையைச் சரியாக வாரக் கூடாதா? கலைந்து போயிருக்கிறதே” என்றார்.
பிறகு சந்திரனுடைய தாயைப் பற்றியும் தங்கையைப் பற்றியும் தங்கையின் படிப்பைப் பற்றியும் விரிவாகக் கேட்டுக் கொண்டிருந்தார். என்னைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. இவ்வாறு பேசிக்கொண்டே இருந்தபோது, சிறிது நேரத்தில் அவருடைய தம்பி வந்துவிட்டார். “இந்தப் பிள்ளைகள் என்னவோ கேட்கிறார்கள். சிறப்புப் பாடமாம். எதை எடுத்துக் கொள்ளலாம் என்று உன்னைக் கேட்க வந்திருக்கிறார்கள்” என்றார்.
அந்தத் தம்பியின் குரலிலிருந்து ‘ஆ’ என்ற ஒலி வந்ததே தவிர, புன்சிரிப்போ முகமலர்ச்சியோ ஒன்றும் காணப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, “போன தேர்வில் எந்தப் பாடத்தில் நல்ல மதிப்பெண் வந்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அதோடு பேச்சை முடித்துவிட்டார். யாருக்கு எதில் மிகுதியான மதிப்பெண் என்றும் கேட்கவில்லை.
“எனக்குக் கணக்கில் மிகுதியான மதிப்பெண்; நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து” என்றான் சந்திரன்.
“அதை எடுத்துக்கொள்” என்றார் அவர்.
“இவனுக்கு வரலாற்றில் நாற்பத்தைந்து மதிப்பெண். மற்றப் பாடங்களில் அதைவிடக் குறைவு” என்று சந்திரனே என்னைப் பற்றியும் கூறினான்.
“அப்படியானால் வரலாறுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார் அவர்.
இதைத் தெரிந்து கொள்வதற்காகவா இந்த ஊமையிடம் வந்தோம் என்று வெறுப்போடு திரும்பினோம். குறைவான என் எண்களைப் பற்றிப் பாக்கிய அம்மையார் தெரிந்து கொள்ளும்படியாகச் சந்திரன் சொன்னது எனக்கு வருத்தமாகவும் இருந்தது.
நாங்கள் அது பற்றி ஒரு முடிவுக்கும் வரவில்லை. மறு நாள் வகுப்பில் ஆசிரியர் கேட்டபோது சந்திரன் கணக்குப் பாடம் எடுத்துக் கொள்வதாகச் சொன்னான். என்னைக் கேட்டபோது நானும் அதுவே சொன்னேன். உடனே ஆசிரியர் என்னை நோக்கி, “கணக்கில் உனக்கு எத்தனை எண்கள்?” என்றார்.
“முப்பத்தாறு” என்றேன்.
“அப்படியானால் உனக்கு எப்படிக் கணக்குக் கிடைக்கும்?” என்றார்
எனக்குப் பெரிய மனக்குறை ஆகிவிட்டது. அடுத்த வகுப்பில் மற்றோர் ஆசிரியர் வந்து அவ்வாறே கூறினார். சந்திரன் எடுக்கும் பாடமே நானும் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு வழி என்ன என்று கலங்கினேன். சந்திரனும் எனக்காக வருந்தினான். “உனக்காக நான் வரலாறு எடுத்துக் கொள்ளட்டுமா?” என்றான்.
அவனுடைய அன்புணர்ச்சியை எண்ணி உருகினேன். “வேண்டா, கணக்கு ஆசிரியரிடம் நாம் இருவரும் நேரே போய்க் கேட்டுப் பார்ப்போம்” என்றேன்.
மறுநாள் கணக்கு ஆசிரியரிடம் போகவில்லை. ஏதோ ஒருவகை அச்சம் எங்களைத் தடுத்தது. கணக்கு ஆசிரியர் அப்படிப்பட்டவர். ஒருவரையும் அடிக்கமாட்டார்; வைய மாட்டார்; வகுப்பில் ஏதாவது தவறு செய்துவிட்டால் பார்வை பார்த்து அமைதியாக இருப்பார்; கணக்கில் ஏதாவது தவறு செய்தால், பக்கத்தில் வந்து நின்று காதைப் பிடித்துக் கொள்வார்; திருகமாட்டார்; தம் கையில் உள்ள சாக்குத் துண்டினால் கன்னத்தில் குத்துவார்; இவ்வளவுதான்.
மற்ற ஆசிரியர்களோடும் பேசமாட்டார்; பழகமாட்டார்; வகுப்பு இல்லாத நேரத்தில் தம் அறையில் ஒரு மூலையில் சன்னல் ஓரமாக உட்கார்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பார். அவருடைய உயரமான வடிவமும், நீண்ட கறுப்பு அல்பாக்கா சட்டையும், ஒரே நிலையான அமைதியான முகத்தோற்றமும் அப்படி எங்கள் மனத்தில் ஒருவகை அச்சத்தை ஏற்படுத்தின.
மற்ற ஆசிரியர்களுக்கெல்லாம் வழக்கம் போல் ஒவ்வொரு குறும்புப் பெயர் வைத்திருப்போம். கணக்கு ஆசிரியர்க்கு மட்டும் அப்படி ஒரு பெயர் வைத்ததில்லை. எங்களுக்கு முன் தலைமுறையைச் சார்ந்தவர்களும் அப்படி ஒரு பெயர் வைத்ததில்லை. வைத்திருந்தால், அந்தப் பெயர் வழிவழியாக மாணவர்களிடையே வழங்கியிருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஆசிரியரிடம் எப்படி அணுகிக் கேட்பது என்று இரண்டு நாள் தயங்கினோம். மூன்றாம் நாள் சந்திரன் துணிந்தான். என்னை அழைத்துக்கொண்டு அவர் இருந்த அறைக்குள் நுழைந்தான், எங்களைக் கண்ட கணக்கு ஆசிரியர் வாய் திறக்காமல் தலையை மெல்ல அசைத்தார். வரலாம் என்பது அதற்குப் பொருள். அணுகி நின்றோம். கண்ணால் ஒரு வகையாகப் பார்த்து மறுபடியும் தலை அசைத்தார். “என்ன காரணமாக வந்தீர்கள்?” என்பது அதற்குப் பொருள்.
சந்திரன் வாய் திறந்து, “நான் சிறப்புப் பாடமாகக் கணக்கைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்” என்றான்.
ஆசிரியர் வாய் திறந்து, “சரி” என்றார். மறுபடியும் சந்திரன், “இவனும் கணக்கு வேண்டும் என்கிறான்” என்றான்.
“மதிப்பெண்”
“முப்பத்தாறு”
ஆசிரியர் உதட்டைப் பிதுக்கினார். பயன் இல்லை என்பது அதற்குப் பொருள்.
“நாங்கள் இருவரும் ஒரே தெருவில் பக்கத்துப் பக்கத்தில் இருந்து படிக்கிறோம். அதனால் ஒரே பாடமாக இருந்தால். . . ” இவ்வாறு சந்திரனே பேசினான்.
நான் வணக்கமாக வேண்டிக்கொள்ளும் முறையில் நின்றேன்.
“நீ சொல்லித் தருவாயோ?” என்றார் ஆசிரியர்.
“சொல்லித் தருவேன்” என்றான் சந்திரன்.
“சரி, போ” என்று சொல்லிவிட்டு ஆசிரியர் என்னைப் பார்த்துக் கண்களை ஒருமுறை மூடித்திறந்து தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து அசைத்தார்.
நான் வாயைத் திறக்காமலே கைகூப்பி வணக்கம் செலுத்திவிட்டுச் சந்திரனைத் தொடர்ந்து வெளியே வந்தேன்.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு
Comments
Post a Comment