அகல் விளக்கு – மு.வரதராசனார்: 16
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 15. தொடர்ச்சி)
அகல் விளக்கு
“இன்றைக்கு வேண்டா, சொக்கான். நாளைக்குப் பார்க்கலாம்” என்றான் சந்திரன் கிணற்றினுள்ளிருந்தே.
காவலாள் சொக்கானும், “சரி, சாமி! நாளைக்குக் காலையில் வந்துவிடு. ஒரு புருடை கொண்டு வந்து வைத்திருப்பேன்” என்றான்.
“புருடை என்றால் என்ன?”
“சுரைக்காய் முற்றி உலர்ந்து போகுமே அது“
“அதை என்ன செய்வது?”
“அதை இடுப்பில் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினால், மேலேயே மிதக்கலாம், கையால் அடித்து நீந்தலாம்.”
இதைக் கேட்டதும் என் மனம் குதித்தது. கிணற்றினுள் நீந்தி வருவது போல் கற்பனை செய்து களித்தேன்.
வீட்டுக்குத் திரும்பியபோது, அத்தை கவலையோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். “வேலு! நீயுமா கிணற்றில் இறங்கினாய்?” என்று அத்தை கேட்டார்.
“இல்லை, சந்திரன் மட்டும் குளித்தான்.”
“வேண்டாம்’பா; உடம்புக்கு ஆகாது. உனக்கு நீந்தவும் தெரியாது.”
“எனக்கு ….” என்று நான் வாய் திறந்து நாளைய முயற்சியைச் சொல்வதற்குள் சந்திரன் கண்ணாலேயே என்னைத் தடுத்தான்.
“உனக்கு வெந்நீர் வைத்திருக்கிறேன். வா. குளித்து விடு” என்றார் அத்தை.
சந்திரன் இப்படி அத்தைக்குத் தெரியாமல் மறைத்தது எனக்குத் தவறாகத் தோன்றியது. இருந்தாலும், நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் அந்தத் தவற்றிற்கு உடந்தையாக இருந்தேன். யாருக்கும் சொல்லாமல் மனத்திற்குள் வைத்திருந்தேன்.
சிற்றுண்டி முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் வேலையாள் மாசன் ஒரு கூடை நிறைய எதையோ சுமந்துகொண்டு வந்து எங்கள் எதிரே இறக்கினான். எல்லாம் நுங்காக இருந்தன.
“யார் வெட்டியது?” என்றேன்.
“அவனே வெட்டிக்கொண்டு வந்திருப்பான்” என்றான் சந்திரன்.
“ஆமாம். நான் ஏறாத மரமே இல்லை இந்த ஊரில்” என்றான் மாசன்.
உடனே நுங்கு தின்னத் தொடங்கினோம்.
பகலுணவுக்குப் பிறகு சிறிது படுத்திருந்தோம். மாசன் எங்கள் அருகே வந்து பார்த்து, “தூங்குகிறீர்களோ என்று பார்த்தேன்” என்றான்.
“என்ன செய்தி?” என்று கேட்டேன்.
“இளநீர் தள்ளிக் கொண்டு வரும்படி அப்பா சொன்னார் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான்.
“எவ்வளவு? காலையில் கொண்டு வந்தது போல் இதுவும் ஒரு கூடை கொண்டு வந்திருக்கிறாயோ?”
இது கூடையில் கொண்டுவர முடியுமா? ஒரு கோணியில் போட்டு வந்திருக்கிறேன்.
சந்திரனைப் பார்த்துச் சிரித்தேன். “சந்திரா! சரிதான் கூடை கூடையாய், மூட்டை மூட்டையாய்த் தின்பதற்கு யாரால் முடியும்,” என்றேன்.
“இப்படித்தான், உன் பெயரைச் சொல்லி, நான், மாசன், அம்மா, கற்பகம் எல்லோரும் சாப்பிடுவோம்” என்றான்.
அன்று இரவு உறங்குவதற்கு முன் நாளைக் காலையில் பெரிய வித்தையைக் கற்றுக் கொள்ளபோகிறோம் என்ற குதுகுதுப்பான மனத்தோடு கண்மூடினேன்.
வழக்கமாக விழித்துக் கொள்ளும் நேரத்துக்கு முன்பே விழித்து எழுந்தேன். சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தான். அத்தை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். “வேலு! இந்த ஊர் பிடிக்குதா?” என்று கேட்டார்.
“ஆமாம். நல்ல ஊர்தான்” என்றேன்.
“உன் அம்மா அப்பாவுக்கு உன்னைப் பற்றியே கவலையாக இருக்கும்.”
“இருக்காது அத்தை”
“இருக்கும் வேலு! சந்திரன் அப்பா சாமண்ணா சின்னக் குழந்தையாக இருந்தபோது எங்கள் அம்மா செத்து விட்டாள். நான்தான் அவனைப் பாலூட்டிச் சோறூட்டி வளர்த்தேன். அந்தப் பாசம் பொல்லாதது. சாமண்ணா சின்னப் பையனாக இருந்தபோது, இப்படி யாராவது எங்காவது வெளியூர்க்கு அழைத்துக் கொண்டு போனால் தம்பியைப் பற்றியே எனக்குக் கவலையாக இருக்கும்.
“சந்திரன் அப்பாவை நீங்கள் தான் வளர்த்தீர்களா?”
“ஆமாம்’பா.”
“அதனால்தான் அவரை நீங்கள் குழந்தை குழந்தை என்று கூப்பிடுகிறீர்களா?”
“ஆமாம் வேலு.”
அப்போது சந்திரன் காலை நீட்டி என்மேல் கைகளை வைத்து அழுத்தித் திமிர்விட்டான். “யார்? அத்தையா? ஏன் அத்தை! வெந்நீர் வைத்துவிட்டேன் என்று சொல்கிறாயா? தோப்புக்குப் போய்வந்து அப்புறம் குளிப்பான்” என்றான்.
“இன்றைக்கு” என்று நான் வாயெடுப்பதற்குள், “வேலு! அத்தை சொன்னபடி கேள்; சும்மா இரு” என்று என்னைக் கண்ணாலே உருத்துப் பார்த்தான்.
அவன் கருத்தைத் தெரிந்து கொண்டு நான் பேசாமல் இருந்தேன்.
தோப்புக் காவலாள் சுரைப்புருடை வைத்துக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்தான். பல்லை அவசர அவசரமாகத் துலக்கிவிட்டு கிணற்றினுள் இறங்கினேன். காவலாள் எனக்கு முன் இறங்கி அந்தச் சுரையை என் இடுப்பில் கட்டினான். “தயங்காமல் இறங்குங்கள். இறங்கிப் பாருங்கள்” என்றான். மெல்ல மெல்ல முழங்காலளவு நீரிலிருந்து இடுப்பளவிற்கு இறங்கினேன். சுரை என்னைத் தூக்குவதை உணர்ந்தேன். ஒருவகைப் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் பிறந்தன. காவலாளும் சந்திரனும் எனக்கு முன் நீரில் சென்றார்கள். துணிந்து வரச் சொன்னார்கள். எனக்குத் துணிவு வரவில்லை.
கை கொடு என்று காவலாள் சொக்கான் என் கையைப் பிடித்தான். நீரில் மிதந்தேன். கைகால்களை அடிக்கச் சொன்னார்கள். சிறிது தூரம் சென்று திரும்பி வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாகத் துணிவு வந்தது. பெற முடியாத ஒரு பேற்றைப் பெற்று விட்டவன் போல் கரை ஏறினேன். திரும்பியபோது சந்திரன் என்னைப் பார்த்து, “அத்தை வெந்நீர் வைத்திருப்பார்கள். பேசாமல் குளித்துவிடு. இல்லையானால் ஒவ்வொரு சொம்பாக மொண்டு கீழே கொட்டிவிட்டு வெளியே வந்துவிடு” என்றான்.
எனக்கு அவனுடைய போக்குப் புதுமையாக இருந்தது. “சந்திரா! நீ பொல்லாதவனாக இருக்கிறாயே” என்றேன்.
“என்ன பொல்லாதவன்! யாரையாவது அடித்தேனா? எங்காவது திருடினேனா?”
“தப்பு இல்லையா? பொய் இல்லையா?”
“அதனால் யாருக்கு என்ன தீங்கு?”
அன்றுதான் அழகான சந்திரனுடைய பண்பில் ஏதோ களங்கம் இருப்பது போல் உணர்ந்தேன். “இருந்தாலும் எனக்குப் பிடிக்கவில்லை. தப்புத்தான்” என்றேன்.
“இருந்து போகட்டுமே” என்று கவலை இல்லாமல் சொன்னான் சந்திரன். அவன் சொன்ன முறையில் களங்கம் மிகுதியாகப் புலப்பட்டது.
“நான் ஒரு நாளும் இப்படிச் செய்யமாட்டேன்.”
“அதனால்தான் நான் வேறு, நீ வேறாக இருக்கிறோம். என் பெயர் சந்திரன். உன் பெயர் வேலு!”
வீட்டை நெருங்கிவிட்டோம். சந்திரன் சொன்னபடி செய்தேன். வேறு வழி இல்லை. செய்த பிறகு, குற்றவாளி போன்ற உணர்ச்சியோடு வெளியே வந்தேன். குற்ற உணர்ச்சி மாறுபடுவதற்கு நெடுநேரம் ஆயிற்று.
முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி அன்று ஒரு வண்டி பூட்டிவரச் சொல்லி, எலுமிச்சம் புளிச்சோறும் வாழைப்பூ வடையும் செய்துகொண்டு சந்திரனும் நானும் வேலத்து மலையடிவாரத்தில் இருந்த தாழை ஓடைக்குப் புறப்பட்டோம். மாசன் எங்களுக்கு துணையாக வந்தான். கற்பகமும் வருவதாகத் தன் தாயையும் அத்தையையும் கேட்டுப் பார்த்தாள்; வற்புறுத்திப் பார்த்தாள். “அறியாத பெண். நீ அங்கெல்லாம் போகக்கூடாது. ஏதாவது காற்று இது அது இருக்கும் இடம். அவர்கள் ஆண்பிள்ளைகள் போய் வரலாம். நீ போகக் கூடாது” என்று சொல்லி அவளைத் தடுத்து விட்டார்கள். என் மனம் கற்பகத்திற்காக இரக்கம் கொண்ட போதிலும், அவர்கள் சொன்ன காரணத்தை எண்ணிப் பேசாமல் இருந்தேன்.
ஆனால் அங்கே போன இடத்தில் கற்பகத்தின் வயது உள்ள பெண்கள் இருவர் ஆடு மேய்த்துக்கொண்டு திரிவதைக் கண்டேன். அவர்கள் அஞ்சாமல் உலவும் இடத்தில் கற்பகம் வந்தால் தீங்கு என்ன என்று எண்ணினேன் அதைச் சந்திரனிடம் சொல்லவில்லை.
தாழை மரங்கள் நல்ல நிழல் தந்து அடர்த்தியாக இருந்தன. அங்கங்கே சில பூக்கள் காணப்பட்டன. அவற்றை ஒருவன் துறடு கொண்டு பறித்துக் கொண்டிருந்தான். மலர்ந்த பூக்களின் மணம் இன்பமாக இருந்தது. இலையெல்லாம் மடலெல்லாம் முள்ளாக உள்ள மரம்; ஒழுங்கும் அழகும் இல்லாமல் வளரும் மரம், இவ்வளவு மணமுள்ள பூக்களைத் தருகிறதே என்று வியந்தேன்.
ஓடையில் தண்ணீர் மிகுதியாக இல்லை. சலசல என்று மெல்லிய ஒலியோடு நீர் ஓடிச் சென்று கொண்டிருந்தது. ஒரு பாறையின் மேல் பரவலாக ஓடியது, அங்கெல்லாம் பாசி மிகுதியாக இருந்தபடியால் கால்வைத்து ஏறுவதற்குத் தயங்கினேன். மாசன் அஞ்சாமல் பாசி இல்லாத இடமாகக் கால்வைத்து அழைத்துச் சென்றான். ஒரு சின்னக் கோயில் காணப்பட்டது. கன்னிக்கோயில் என்று சொன்னான். தேங்காய் நார் அங்கங்கே இருந்தபடியால், யாரோ வந்து பூசை செய்துவிட்டுப் போகிறார்கள் என்று தெரிந்தது. ஒரு பாறை மேல் உட்கார்ந்து மேலே பார்த்தோம். அந்த இரண்டு பெண்களும் அடுத்த பெரிய பாறைமேல் மடமட என்று ஏறிக் கொண்டிருந்தார்கள்.
“நாமும் அங்கே போவோம். அங்கேயிருந்து கூவினால், எதிரே இருக்கும் மலை அப்படியே கூவும்” என்றான்.
சரி என்று சந்திரனும் நானும் எழுந்தோம். ஏறிச் சென்றோம். அவன் சொன்ன இடத்தில் நின்றோம். அங்கிருந்து ஓ என்று கூவினான். எதிரே இருந்த மலைப் பகுதியிலிருந்து ஓ என்ற ஒலி திரும்பக் கேட்டது. சா-மீ என்று கூவினான். அதுவும் அப்படியே எதிரொலியாக கேட்டது. “இங்கே வா” என்று நான் உரக்கக் கூவினேன்.
எதிரொலியும் அவ்வாறே கேட்டது. உடனே, “வரமாட்டோம்” என்ற குரலும், அதன் எதிரொலியும் கேட்டது. யாருடைய குரல் என்று திரும்பிப் பார்த்தோம். மற்றொரு பாறையில் அந்த இரு சிறுமிகளும் நின்று கொண்டு அப்படிக் கத்தியிருக்க வேண்டும் என்று உணர்ந்தோம். “ஏ பசங்களே!” என்று சந்திரன் கூவினான். எதிரொலியும் கேட்டது. “ஏ அய்யா” என்று அந்தப் பெண்களின் குரலும் அதை அடுத்து எதிரொலியும் கேட்டது.
சிறிது நேரம் அங்கே இருந்தபிறகு, கீழே இறங்கினோம். அந்தப் பெண்களும் இறங்கி வந்தார்கள். அவர்கள் நெருங்கி வந்தபோது சந்திரன் அவர்களைப் பார்த்து, “இங்கே வாங்க” என்றான். கரவு அறியாத அந்தப் பெண்களும் அவ்வாறே வந்தார்கள். “ஏற்றப்பாட்டு, கும்மிப்பாட்டு ஏதாவது பாடுங்கள்” என்றான்.
“ஆடு எங்காவது போய்விடும். நாங்கள் போகணும்” என்றாள் ஒருத்தி. “எங்களுக்கு பாட்டுத் தெரியாது” என்றாள் மற்றவள்.
“அன்றைக்குப் பாடினீர்களே, தெரியும். பாடுங்கள்” என்றான் சந்திரன்.
அவர்கள் மறுத்தார்கள்.
“நான் யார் தெரியுமா? பெருங்காஞ்சி – பெரிய வீட்டு மகன் தெரியுமா?” என்றான் சந்திரன்.
“தெரியும்; இப்போது பாடமாட்டோம்” என்றாள் ஒருத்தி. மற்றொருத்தி, “வாடி போகலாம்” என்று நடந்தாள்.
“பாடாவிட்டால் விடமாட்டோம். இதோ பார், ஆளுக்கு ஓர் அணா தருகிறேன். பாடுங்கள்” என்று சட்டைப்பையிலிருந்து இரண்டு அணா எடுத்து நீட்டினான்.
“பாடுங்கள் சும்மா. வெற்றிலைக்குக் காசு கிடைக்குது” என்றான் மாசன்.
அந்தப் பெண்களும் நாணத்தோடு ஒருத்தி முகத்தை மற்றொருத்தி பார்த்துக்கொண்டு தயங்கித் தயங்கிப் பாடினார்கள். ஒரு பாட்டு முடிந்ததும். இன்னொரு பாட்டு என்று கேட்டான். முதல் பாட்டை விட இரண்டாம் பாட்டை நன்றாகவே பாடினார்கள். ஆனால் நாணம் அவர்களைத் தடுத்தது. சந்திரனிடமிருந்து காசு வாங்கிக் கொண்டு போய் மாசன் அவர்களிடம் கொடுத்தான்.
சந்திரன் நடந்துகொண்ட முறையும், காசு கொடுத்துப் பாடச் செய்ததும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்ன குற்றம் என்றும் சொல்லத் தெரியவில்லை. ஒன்று மட்டும் உணர்ந்தேன். கற்பகத்தையோ மணிமேகலையையோ இப்படி யாரேனும் வழிமறித்துக் காசு காட்டிப் பாட வைத்திருந்தால், சந்திரனும் பொறுக்கமாட்டான்; நானும் பொறுக்கமாட்டேன். இதை நான் உணர்ந்தேன்; சந்திரனுக்கு எப்படி உணர்த்துவது என்று தெரியவில்லை.
கொண்டுபோயிருந்த சோற்றையும் வடையையும் தின்று முடித்தபின், சிறிது நேரம் படுத்திருந்து, எழுந்து வண்டி பூட்டினோம். பொழுதோடு வந்து சேர்ந்தோம். வீட்டில் கற்பகத்தை கண்டபோது அவள் முகத்தில் ஒரு வகை ஏமாற்றம் இருக்க கண்டேன்.
மறுநாள் காலையில் எழுந்ததும் தோப்பை நோக்கி ஆர்வத்தோடு நடந்தேன். முன்போலவே அவசரமாகப் பல் துலக்கிவிட்டு, சுரையைக் கட்டிக் கொண்டு நீரில் இறங்கிச் சுற்றிவந்தேன். சுரையின் கயிறு வயிற்றை இறுக்கினாற்போல் தெரிந்தது. அதை அவிழ்த்து நெகிழ்த்திக் கட்டுமாறு காவாலாளுக்குச் சொன்னேன். அவன் சுரையை அவிழ்த்த சமயம் பார்த்து, சந்திரன் என்னை நீரில் தள்ளிவிட்டான். நான் பயந்து முழுகி இரண்டு விழுங்குத் தண்ணீரும் குடித்து விட்டுக் கரை சேர முடியாமல் தடுமாறினேன். காவலாள் சொக்கன் உடனே பாய்ந்து என்னைத் தாங்கிக் கொண்டான். கரையில் வந்தவுடன், சந்திரனைப் பார்த்து, “என்னைக் கொன்றுவிடப் பார்த்தாயே” என்றேன்.
“பக்கத்திலேயே நானும் சொக்கானும் இருக்கும்போது நீ முழுகிப் போகும்படி விடுவோமா?” என்றான்.
“ஏன் அப்படித் தள்ளினாய்?”
“அப்போதுதான் பயம் போகும்; நீந்த முடியும்.”
“அய்யோ! இனிமேல் அப்படிச் செய்யாதே.”
“சே! இப்படிப் பயந்தால் எப்போதுதான் நீந்தக் கற்றுக் கொள்ளப் போகிறாய்” என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் பிடித்துத் தள்ளிவிட்டான்.
இந்த முறையும் முழுகித் தண்ணீர் குடித்து எழுந்தேன். சொக்கான் பாய்ந்து தாங்கிக் கொண்டான்.
“உள்ளே போய் மேலே வந்தாய் அல்லவா? கையை அடித்துக்கொண்டாய்; மேலே வந்துவிட்டாய். அதுதான் நீந்துவதற்கு முதல் பாடம்” என்றான்.
அவன் சொன்னது போல் பயம் ஒருவகையாய்த் தெளிந்தது. ஆனாலும் சுரை கட்டும்படியாக மன்றாடினேன். முந்திய நாளைவிட நன்றாக நீந்தினேன்.
அடுத்தநாள் சுரை இல்லாமலே இறங்கவேண்டும் என்ற ஆசை எனக்கே ஏற்பட்டது. அவ்வாறே செய்தேன். சொக்கானை முன்னே போய் நீரில் நீந்தும்படியாகச் செய்து விட்டுப் பின்னே நான் நீந்தினேன். பயம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. தண்ணீரும் தரைபோல் ஆயிற்று. அரிய வித்தை ஒன்றைக் கற்றுக்கொண்ட பெருமிதத்தோடு வீட்டுக்குத் திரும்பினேன்.
அன்று அத்தையைப் பார்த்தவுடன் சந்திரன், “அத்தை! வெந்நீர் வேண்டா, கிணற்றிலேயே குளித்துவிட்டான். நீந்தவும் கற்றுக் கொண்டான்” என்றான்.
அத்தை மோவாய்மேல் வைத்த கையை எடுக்காமல் மரம் போல் நின்றார். “அவனுடைய அம்மா அப்பாவுக்குத் தெரிந்தால்” என்றார்.
“மகன் நீந்தக் கற்றுக் கொண்டதற்காக ஆனந்தப்படுவார்கள்” என்றான் சந்திரன்.
அத்தை என்னுடைய தலையைத் தொட்டுப்பார்த்து, “இன்னும் ஈரம் போகவில்லையே” என்று தன் முந்தானையால் துவட்டினார்.
மேலும் இரண்டு நாள் இருந்துவிட்டு ஊர்க்குப் புறப்பட்டேன். சிலவகைத் தின்பண்டங்கள் செய்து ஒரு புட்டியில் வைத்து, பதிவு நிலையத்துக்கு வருவோர் சிலருடன் சேர்த்து என்னை அனுப்பி வைத்தார்கள்.
புறப்பட்டபோதே, கற்பகம் என்னைப் பார்த்து “இன்னொரு முறை வரும்போது மணிமேகலையை அழைத்துக் கொண்டு வரணும்” என்றாள்.
Comments
Post a Comment