Skip to main content

பொங்கி வாடா! – காசி ஆனந்தன்





பொங்கி வாடா!

தீயெழுந்து அடுப்பினிலே பாலைச் சுட்டால்
சினந்தெழுந்து பால்பொங்கித் தீயணைக்கும்!
நீ உவந்து செய்கின்ற பொங்கல் வெற்று
நிகழ்வன்று!  வீரத்தின் பாடம் கண்டாய்!
தாயிழந்த சேயர்போல் தமிழர் ஈழம்
தனையிழந்து சினங்கொண்டு பொங்குகின்றார்!
பாய்! சிவந்து களமாடு! பொங்கி வாடா!
பகைநொறுக்கித் தமிழீழ மண்ணை மீட்போம்!
திரைப்படத்தின் மார்புகளைத் தின்னும் கண்ணால்
தீந்தமிழ்த்தாய் ஈழத்தில் சாவின் வாயில்
இரைப்படப்போய் விழும்புலிகள் களத்தின் புண்கள்
இருந்த மலை மார்புகளைப் பார்ப்பாய்! ஆங்கே
நிரைப்பட நாளும் களத்தை நிறைத்தார் வீரர்!
நீ என்னடா இங்கே கிழித்தாய்? வீழ்ந்து
தரைப்பட நீ கிடக்கின்றாய்! பொங்கி வாடா!
தமிழீழம் மலர உடன் ஆணை ஏற்போம்!
நேற்றுவரை உனக்குதவி நின்ற மாட்டை
நேர்நின்று மோதுகிறாய்!  தமிழீழத்தில்
நாற்றிசையும் குண்டுகளால் உன்இனத்தை
நாளும் அழிக்கின்றார்!  நீ மோதினாயா?
போற்று தமிழ் இனமானம்! தமிழனாய் நீ
பொங்கல் செய்! விழித்தெழுவாய்! வீறுகொண்டு
காற்றெழுந்தால் புயலாகும்! பொங்கி வாடா!
களம் காண்போம்! தமிழீழம் காப்போம்! காப்போம்!

  • உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்