Skip to main content

இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 2/3 – மு.இளங்கோவன்



அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017

இரவிச்சந்திரனின்  ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 2/3

  ‘வெட்டிக்காடு’ என்னும் முதல் தலைப்பில் ஊர் அமைவிடம், உழவுத்தொழில் செய்யும் மக்களின் நிலை, ஊரின் காலைக்காட்சி முதலிய தாம் பதினேழு ஆண்டுகள் வாழ்ந்த ஊரின் சிறப்புகளை இரவி பதிவுசெய்துள்ளார். உழுதல், விதைத்தல், பறித்தல், நடுதல், அறுத்தல் என்று ஆறு மாதம் ஊர் அமர்க்களப்படும். இங்கு நடவுப்பாடல் வழியாகவும், தெருக்கூத்துகள் வழியாகவும் இசைத்தமிழ் வளர்ந்ததை இரவிச்சந்திரன் குறிப்பிடுகின்றார். மாடுமேய்த்தலும், ஆடுமேய்த்தலும் சிற்றூர்ப்புறத் தேசியத்தொழிலாகும். கபடி விளையாடுதல், ஓரியடித்தல், கிளிகோடு பாய்தல், பந்தடித்தல், பட்டம் விடுதல்போன்ற சிற்றூர்ப்புறத்து விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
  வெட்டிக்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி பெருந்தலைவர் காமராசரின் கல்விக்கொடையால் கிடைத்தது. இரண்டு ஆசிரியர்களுடன் எழுபத்தைந்து மாணவர்களைக் கொண்டு பீடுநடைபோட்ட பள்ளி அது. இரவிச்சந்திரன் நான்காம் வயதில் அடம்பிடித்துப் பள்ளிக்குச் சென்றது முதல் சுப்பிரமணியன் ஆசிரியரிடம் அகரம் பயின்றது வரையிலான செய்திகளைப் படிக்கும்பொழுது  ஊரகத்து மனிதர்கள் அனைவரும் தங்களின் இளமை வாழ்க்கைக்குக் கட்டாயம் திரும்புவார்கள். ஒன்றாம் வகுப்பில்(1973) சேர்ந்தது தொடங்கி தம் வாழ்க்கைக் குறிப்புகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார் இரவி. வேப்பங்குச்சியில் பல்துலக்கியது, சிற்றூர்ப்புறத்து ஏரிகளில் குளித்தமைபற்றி விளக்கும் இரவிச்சந்திரன், பற்பதை, துலக்கி, வழலை(சோப்பு) நாங்கள் பார்க்காதது என்கின்றார். பழைய சோறும் தயிரும் உணவாக அமைந்த சிற்றூர்ப்புறத்து வாழ்க்கையில் இட்டிலி, தோசை போன்ற உணவுகள் பொங்கல் தீபாவளியில்தான் கிடைக்கும் என்கின்றார். நம் உணவு, பழக்க வழக்கம், பண்பாட்டு மாற்றங்கள் எவ்வாறு மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்பதை எதிர்காலத் தலைமுறைகள் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஒரு சமூக ஆவணம்.
   அக்கா திருமணத்தன்றும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்ததைப் பாராட்டிய சுப்பிரமணியன் ஆசிரியரின் பேருள்ளம் இந்த நூலில் பதிவாகியுள்ளது. பள்ளிக்கு நாள்தோறும் செல்லும் பழக்கத்தை நினைவூட்டும் இரவி, பின்னாளில் இரண்டு முறை விடுப்பெடுக்க நேர்ந்தமைக்கான காரணத்தையும் கூறத் தயங்கவில்லை, பன்னிரண்டு ஆண்டு பள்ளி வாழ்க்கையில் மஞ்சள் காமாலை நோயும், கடுங்காய்ச்சலும் விடுப்பெடுக்க வைத்ததைக் குறிப்பிடுகின்றார் (பக்கம்42). எட்டுப் புதுக்கல்(கிலோ மீட்டர்) தொலைவிலிருந்த மன்னார்குடிப் பள்ளிக்குப் பேருந்தில்  செல்லக் காசு இல்லாத பொழுது, நடந்தே சென்றுள்ளதையும் காலில் செருப்பில்லாமல் நடந்துபோனதால் கரிநெய்(தார்) காலில் படிந்து சுட்ட நிலையையும் படிக்கும்பொழுது இரவியின் வறுமை வாழ்க்கை கண்ணீர்வரச் செய்கின்றது.
 அரசுப்பள்ளிகள் ஆதரிப்பார் இன்றிக் கிடக்கும்பொழுது, இன்றைய ஆங்கிலவழிக் கல்விக்கூடங்கள் மூடுந்துகளிலும் மிதியுந்துகளிலும்(வேன்களிலும் ஆட்டோக்களிலும்) சிற்றூர்ப்புறத்துப் பிள்ளைகளைச் சீருடைகளில் அள்ளிக்கொண்டு போவதைக் காணும்பொழுது தமிழகக் கல்வி வரலாறு இருவேறு துருவங்களில் பயணம் செய்வதை உணரலாம். “எருமை மாடு மேய்க்கிறவனுக்கும் மாட்டுக்கறி திங்கிறவனுக்கும் படிப்பு வராதுஎன்று சுப்பிரமணியன் ஆசிரியர் சொன்னதை நினைத்த இரவி மாடுமேய்க்க மறுத்த நிகழ்வும் பதிவாகியுள்ளது. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இளமை வாழ்க்கையைத் திறந்து காட்டியுள்ள இரவியின் எழுத்துகள் தமிழ்கக் கல்வி வரலாற்றை அறிய விரும்புவர்களுக்குப் பேருதவி புரிவன.
   கிண்டிப் பொறியியல் கல்லூரியில் சேரும் தம் பதினேழாம் வயதுவரை மாடுமேய்த்த வரலாற்றை நினைவுகூர்ந்துள்ளார். படிப்பறிவு இல்லாத அம்மாவுக்கு மாடுமேய்ப்பதைச் செய்யாத மகன்மேல் எப்பொழுதும் கோபம்தான். எழுதிய நோட்டுகளைக் கிழித்தமை, நான்காம் வகுப்பில் தான் ஏபிசிடி படிக்கத் தொடங்கியது, ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெயர் எழுதியது என்று தொடக்க வரலாறு பதிவாகியுள்ளது. ஆங்கிலத்தில் 36 மதிப்பெண் வாங்கியதற்குத் திட்டித் தீர்த்த இந்திரா ஆசிரியர், “முதல்நிலை(first rank) மாணவன் சீனிவாசன் ஆங்கிலத்தில் 98. நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் தகுதி(இலாயக்கு)”(பக்கம் 52) என்று கூறிய கண்டிப்புச் சொற்களும் அவமானச் சொற்களும்தான் இரவியை உயர்ந்த இடத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளன. அதே இந்திரா ஆசிரியர் இரவியின் மாநில முதன்மை மதிப்பெண் பார்த்து, வாழ்த்தியிருப்பது நெகிழ்ச்சி! தம் இளமைக்கல்விக்கு வித்திட்ட சுப்பிரமணியன் ஆசிரியர், முத்துக்கிருட்டிணன் ஆசிரியர் இருவரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
 பள்ளியைத் திறப்பது, கூட்டுவது, மணி அடிப்பது, உணவுக்குரிய பொருள்களை எடுத்துத் தருவது, உணவு சமைப்பது, பரிமாறுவது, ஆசிரியர்களுக்குத் தேநீர் வாங்கிவருவது, ஆசிரியர்களின் வயல்வேலைகளின்பொழுது அதற்குரிய குற்றேவல் செய்வது, ஆசிரியர்கள் வராதபொழுது வகுப்புகளை அமைதியாகப் பார்த்துகொள்வது, பள்ளியைப் பூட்டிச் செல்வது வரையிலான சிற்றூர்ப்புற பள்ளிப் பணிகளை மனந்திறந்து எழுதியுள்ளார். இந்த வாழ்க்கையை இன்றைய மாணவர்கள் கேட்பதற்குக்கூட வாய்ப்பில்லை.
 தேர்வில் பார்த்து எழுதுவது தவறு என்பதை அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்த இரவி தம் கிண்டிப் பொறியியல் கல்லூரி நிகழ்வுகளை நினைவுப்படுத்தி, அங்கும் தான் பார்த்து எழுதாமல் நேர்மையாக எழுதியதைப் பதிவு செய்கின்றார். தவறு செய்வதற்குரிய வாய்ப்பு வந்தாலும் அங்கும் நேர்மையுடன் நடந்துகொள்ளும் உயர்பண்பே இவருக்கு வாழ்க்கையில் முன்னேற்றங்களைத் தந்தது என்கின்றார். வெட்டிக்காடு தொடக்கப்பள்ளியில் பெற்ற படிப்பு, நேரம் தவறாமை, ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைத் முழுமனத்துடன் திறம்படச் செய்தல், நேர்மை போன்ற பண்புகளே முன்னேற்றத்திற்குக் காரணம் என்கின்றார்.
  இந்நூலில் இடம்பெற்றுள்ள ‘உன்னால்முடியும் தம்பி என்ற சிறுகதையில் சண்முகம் என்ற பாத்திரத்தின் வழியாக இரவி தம் இளமைக்கால வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். வெட்டிக்காட்டுக்கு அருகில் உள்ள மூவாநல்லூர் ஊரில் ஏழாம் வகுப்புப் படித்தபொழுது கடலைச்செடிக்குத் தண்ணீர் இறைத்திருக்கிறார். பெற்றோரோ கல்விக்கு ஆதரவு தரவில்லை. இந்நிலையில் ஆசிரியர் இராசகோபால் என்பவர் கொடுத்த ஊக்கமும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்து மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள தடைகளையும் உதவிய ஆசிரியர்களின் செயல்பாடுகளையும் இரவி நினைவுகூர்ந்துள்ளார். வறுமையில் படித்து முன்னேறி, அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியாளராக உயர்வு பெற்றுத் தாம்படித்த பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த நிலையை அழகிய கதையாக்கிக் காட்டியுள்ளார். கவிதை, கதை, உரைநடை என்று பல்வேறு வடிவங்களில் இந்தப் படைப்பை அமைத்துள்ளார்.
  ‘ஐயனார்சாமி‘ என்ற சிறுகதையில் புலவர் சௌந்தரராசன் பகுத்தறிவுக் கொள்கையுடையவர் எனவும், அச்சம் என்பதை அறியாதவர் எனவும் தவறு செய்யும் மாணவர்களைத் தண்டிப்பதில் தயக்கம் காட்டாதவர் எனவும் அறிமுகம் செய்கின்றார். அதே நேரத்தில் ஏழை மாணவர்களுக்குப் புத்தகம், குறிப்புச்சுவடி வாங்கித் தருவதுடன் தம் மன்னார்குடி வீட்டுக்கு விடுமுறை நாளில் வரச்செய்து உணவுகொடுத்துப் படிப்புச்சொல்லித் தருவார் என்றும் அவரின் பொறுப்பார்ந்த ஆசிரியப்பண்புச் சிறப்பையும் நமக்கு அறிமுகம் செய்துள்ளார். புலவர் ஐயா தம் இடுப்பில் கத்தியை எப்பொழுதும் சொருகியிருப்பார் எனவும் ஒருமுறை விடுப்பு தராத தலைமையாசிரியரின்  மேசைமீது கத்தியை எடுத்துக் குத்தி, மிரட்டியதையும் இக்கதையில் இரவி குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் செய்யும் குறும்புகளைக் கவனித்துப் புலவர் கடும் தண்டனை கொடுத்ததால் பல மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போனதையும் குறிப்பிடுகின்றார். கடைசிப் பலகை இராமமூர்த்தி ஐயனார்சாமி போல் அருள் சொன்னதை விளக்கியுள்ள காட்சி இரவியிடம் மிகச்சிறந்த எடுத்துரைப்பு ஆற்றல் உள்ளதை நமக்கு நினைவூட்டுகின்றது.
முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி
(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்