திருக்குறள் அறுசொல் உரை
 1. காமத்துப் பால்
15.கற்பு இயல்  
 1. படர் மெலிந்து இரங்கல்
தலைவனது பிரிவுத் துயரால்,
தலைவி மெலிந்து வருந்துதல்.
(01-10 தலைவி சொல்லியவை)
 1. மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை, இறைப்பவர்க்(கு),
      ஊற்றுநீர் போல மிகும்.
பிரிவுத் துயரத்தை மறைத்தாலும்,
இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல் மிகுமே!
 1. கரத்தலும் ஆற்றேன், இந் நோயை; நோய் செய்தார்க்(கு)
      உரைத்தலும், நாணுத் தரும்.
மறைக்கவும், முடிய வில்லை;
நோய்செய்தாரிடம் கூறவும், வெட்கம்.
 1. காமமும், நாணும், உயிர்காவாத் தூங்கும்,என்
      நோனா உடம்பின் அகத்து.
தாங்காத உடலுள், உயிர்க்காவடியில்,
காமமும், வெட்கமும் தொங்கும்.
 1. காமக் கடல்,மன்னும் உண்டே! அதுநீந்தும்
      ஏமப் புணை,மன்னும் இல்.
காதல் பெரும்கடல் இருக்கிறது;
கடக்கப் படகுதான், இல்லை.
 1. துப்பின் எவன்ஆவர் மன்கொல்? துயர்வரவு
      நட்பினுள் ஆற்று பவர்.
காதலிக்குத் தரும்துயரே, இவ்வளவா?
பகைவர் என்றால், எவ்வளவோ?

 1. இன்பம் கடல், மற்றுக் காமம் அஃ(து)அடும்கால்,
      துன்பம், அதனின் பெரிது.
காதல் இன்பம் கடல்போல்;
பிரிவுத்துயரோ, அதனினும் பெரிது.
 1. காமக் கடும்புனல் நீந்திக், கரைகாணேன்;
      யாமத்தும், யானே உளேன்.
காம வெள்ளத்தை, நீந்திக்
கரைகாணேன்;  நள்ளிரவிலும், விழிப்புதான்.
 1. மன்உயிர் எல்லாம் துயிற்றி, அளித்(து)இரா;
      என்அல்ல(து), இல்லை துணை.
என்னைத்தவிர, எல்லா உயிர்களையும்,
இரவு உறங்கச் செய்யும்.
 1. கொடியார் கொடுமையின் தாம்கொடிய, இந்நாள்
      நெடிய கழியும் இரா.
பிரிந்தாரின் பிரிவுக் கொடுமையினும்,
கொடியது, நீளும் இரவு.
 1. உள்ளம்போன்(று) உள்வழி செல்கிற்பின், வெள்ளநீர்
      நீந்தல மன்னோஎன் கண்?
உள்ளம்போல், விரைந்து செல்லுமானால்,
கண்களும் துயர்வெள்ளத்தில் நீந்தா.
பேரா.வெ.அரங்கராசன்