செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு! – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்
செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு!
முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த மொழி
முப்பெரு வேந்தர் வளர்த்த மொழி
மூப்பே இல்லா இளமை மொழி
காப்பியமைந்து கொண்ட மொழி – தொல்
காப்பியம் கண்ட தொன்மை மொழி
பரணி பாடிய பண்டை மொழி
தரணி போற்றும் தண்மொழி
அகநானூறு தந்த அருமொழி
புறநானூறு தந்த புனித மொழி
வள்ளுவன் கம்பன் வளர்த்த மொழி
உள்ளம் கவர்ந்த உயர்ந்த மொழி
வல்லினம் ,மெல்லினம் இடையினமும்
இயல், இசை, நாடக முத்தமிழும்
முதல், இடை, கடை என முச்சங்கம்
உயிரெழுத்து , மெய்யெழுத்து , உயிர்மெய்யென
உயிரோட்டமான மூவெழுத்துகள்
சேரர் , சோழர் , பாண்டியரென
தமிழ் வளர்த்த மூவேந்தர்கள்
குறள் எனும் மூன்றெழுத்து வேதத்தில்
அறம், பொருள், இன்பம் முப்பால்கள்
அறம், மறம், காதல் மூவுணர்வுகள்
கற்பு, மானம், விருந்தோம்பல் எனும் முப்பண்புகள்
மூன்றுக்கும் தமிழுக்கும் தொடர்புண்டு.
தரணி என்னும் மூன்றெழுத்தில்
புகழ் என்னும் மூன்றெழுத்து நிறைந்த
தமிழ் என்னும் மூன்றெழுத்து மொழி
வாழ்க எனும் மூன்றேழுத்தால் வாழ்த்துகிறேன் .
கற்றவர் போற்றும் கவின் மொழி
கம்பன், இளங்கோ, வள்ளுவரும்,
ஔவை, அகத்தியர், நக்கீரர்
இன்னும் புலவர்கள் பற்பலரும்
இவர்களை வளர்த்த புரவலரும்
பாரதி, பாரதிதாசன் எனும்
பார்புகழ் பெற்ற கவிஞர்களும் ,
வளர்ந்தார் தமிழால் வானளவு
வளர்த்தார் தமிழை பாரளவு .
எம்மொழிக்குமில்லாத் தனிச்சிறப்பு
என் மொழிக்குண்டு அறிவீரே
செம்மொழிஎன்னும் சிறப்புள்ள
இம்மொழிக்கிங்கே இணையில்லை.
சுந்தரத்தமிழே என் பேச்சு
செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு!
வாழ்க தமிழ்
- சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்
Comments
Post a Comment