நடிப்புத்தலைவர்கள் – பேராசிரியர் அறிவரசன்

Arivarasan01

துள்ளி எழுக தோழர்களே!

பாங்குடன் தமிழை வளர்ப்பதற்குப்
பலவும் செய்வோம் என்பார்கள்;
ஆங்கில மொழியை வளர்ப்பதற்கே
அனைத்தும் செய்து முடிப்பார்கள்!
வடமொழி யதனை வழிபாட்டில்
வாழ்க்கைத் துணைநல மணவீட்டில்
இடம்பெறச் செய்தபின் வடமொழியை
எதிர்க்கிறோம் என்றும் சொல்வார்கள்!
சாதியை மதத்தை மேடைகளில்
சாடித் தமிழர்நாம் என்பார்கள்;
வீதியில் வீட்டில் சாதிமத
வேற்றுமை பேணி வளர்ப்பார்கள்!
ஈழத் தமிழர் எமக்கென்றும்
இசைந்த தொப்புள் உறவென்பார்;
வாழத் துடிக்கும் உறவுகளை
மறந்து மினுக்கித் திரிவார்கள்!
ஈழமண் விடுதலை பெறவேண்டும்
என்றே எகிறிக் குதிப்பார்கள்;
பாழும் அடிமைத் தமிழ்நாட்டில்
பம்மிப் பதுங்கிக் கிடப்பார்கள்!
உடைமை தருவோம் என்பார்கள்;
உயிரையும் தருவோம் என்பார்கள்;
கடமை மறந்து ஒருநாளில்
கரவாய் ஒதுங்கிக் கொள்வார்கள்!
பகைமேல் புலிபோல பாய்ந்திடுவோம்
பாரீர் நாளை என்பார்கள்;
வகையாய் வளைக்குள் எலிபோலே
மறைவார் எல்லாம் வாய்ப்பேச்சே!
மலையைச் சாய்ப்போம் எனமுழங்கி
மயிரைச் சாய்த்து நிற்பார்கள்;
தலைவர் பதவியைத் தக்க வைக்கத்
தகிடுதத்தம் செய்வார்கள்!
இனநலம் பேசி இளையோரே
எம்முடன் வருக என்பார்கள்;
பணமும் பதவியும் பெறுவதற்கே
பலவாறாக நடிப்பார்கள்!
நடிப்புத் தலைவர்கள் எவர்என்றே
நற்றமிழ் இளையரே அறிந்திடுக;
துடிப்புடன் உரிமை மீட்பதற்கே
துள்ளி எழுக தோழர்களே!
leaders01
தரவு : அருட்செல்வன்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்