பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 17– ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 17
அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம் : குருவிக்கூடு
நிலைமை :
(தேர்தல் பற்றிய கருத்துரையைப் பேடைக்கு
நேர்பட சிட்டு உரைக்கின்றது!)
ஆண் : சின்னப்பேடே!
சிரிப்பென்ன?
என்ன! கொஞ்சம் சொல்லிவிடேன்
பெண் : தேர்தல் தேர்தல் எனப் பலரோ
வேர்வை வடியப் படித்திட்டார்!
சோர்வே எதுவும் இல்லாது
கூர்மையாய் சுவரில் எழுதிட்டார்!
தேர்தல் என்றால் ஊர்வம்பு!
பேரோ தேர்தல் சிரித்திட்டேன்!
ஆண் : சிரித்ததுசரியே சிறுபேடே!
விரித்துப் பார்த்தால் சிரிப்புதான்!
பெண் : நாட்டில் பிறந்த அனைவருக்கும்
வாக்கு உரிமை உண்டாமே!
ஆண் : வயது வந்த அனைவருமே
பயமே இன்றி வாக்கிடலாம்!
பெண் : பயமென்ன வாக்கு போட்டுவிட!
குயவன் பானையா உடைந்துவிட?
ஆண் : குயவன் பானையே வாக்கென்பேன்!
சுயமாய்ச் சிந்தித்துப் போடாமல்
எவர்க்கோ எதற்கோ கட்டுப்பட்டு
தவறாய் வாக்குபோட்டாலே
எவரோ வெற்றிப் பெறுவாரே! கை
தவறிய பானையாய் ஆகாதோ! பின்
பானையில் எப்படி நீர் பிடிப்பாய் – மக்கள்
ஆணையாய் அவர்தான் ஏற்பாரா?
பெண் : புரியலே எனக்கு நீயே! கொஞ்சம்
விரிவாய் எடுத்துச்சொல்லேன்!
ஆண் : நிற்பவர் என்ன சாதியென
உற்றே பார்த்துப் போடுகின்றார்!
தகுதி திறமை அறிவையே
மிகுதியாய் எண்ணிப் பார்க்காது
இனத்தானா? வாக்கு போடுகின்றார்!
பணத்தானா? வாக்கு போடுகின்றார்!
கட்சியும் இதனை எண்ணியே!
பட்டியல் போட்டு நிறுத்துவதாய்!
அறிவு கொண்ட சிலரிங்கு
செறிவாய் எடுத்து உரைக்கின்றார்!
அரசு அமைக்கும் கட்சியும்
திறமாய் அமைச்சர் பதவிகளை
சாதிக்கொன்றாய் பிரித்தளித்து
சாதித்த பெருமையைச் செப்பிடுதாம்!
மாநகராட்சித் தலைமையிலும்
மாநிலம் முழுவதும் இனம்தானாம்!
பெண் : என்ன இதனால் பெரும்
நட்டம்?
சொன்னால் கொஞ்சம் புரிந்துவிடும்!
ஆண் : முறையற்ற ஆட்சி அமைகிறது
நிலையற்றோர் வெற்றி பெறுவதனால்!
கறையுள்ள கரங்கள் நீள்வதனால்! மக்கள்
சிறையுள்ள வாழ்வாய் வாழ்கின்றார்!
பெண் : அனைவருக்கும் வாக்கு உண்டென்ற
கனிவான சட்டம் உண்டாச்சே!
ஆண் : கனிவான சட்டமே! அறிகின்றேன்!
நினைத்து வெட்கப்படுகின்றேன்!
எண்பது வயது கிழவியை
நன்றாகத் தோளில் தூக்கியே
கொண்டு போய் வாக்குச் சாவடிக்கு
உண்டு உனக்கு வாக்கென்றே
வாக்கு போட வைத்ததாய்
நாட்டில் செய்தி வருகின்றது!
எண்ணிப் பாரேன்! நீ கொஞ்சம்
கண்ணும் இல்லா அக்கிழவி
படிப்பும் இல்லா அக்கிழவி
முடிவு எப்படி எடுத்திடுவாள்!
எவரோ சொல்ல அதன்படியே
கவனமாய் வாக்கு போட்டிடுவாள்!
இதனால் வாக்கின் பயனென்ன?
இதமாய்க் கொஞ்சம் சிந்தியேன்!
முதியவள் வாக்குஅளிப்பதிலே
புதுமை ஏதும் இதில் உண்டா?
தன்னையே அறியா அக்கிழவி
என்ன? ஏதென! அறிவாளா?
இந்திய நாட்டின் வளர்ச்சிதனை
சிந்தித்துப்போடும் வாக்கிதுவா?
பாரத நாட்டின் தலை எழுத்தாய்
தூரத்து நாடுகள் உரைக்கின்றதே!
பெண் : முடிவாய் என்ன! உரைக்கின்றாய்!
எடுக்கிறேன்! நானும் என்முடிவை!
ஆண் : பள்ளி இறுதி வகுப்பாயினும்
முடித்தவர் எவரோ அவருக்குத்தான்
புள்ளிவைக்க உரிமையயன
தேர்தலில் நிற்கத் தகுதியென
சட்டம் ஒன்று வந்தால்தான் – போடும்
திட்டமும் நன்றே நிறைவேறும்!
தரமான அரசும் இங்கமையும் – அரசியல்
திறமானக் கட்சியும் உருவாகும்!
ஆடுமாடாய் மக்களையே – மடமை
கூடுகட்டலும் இங்கொழியும்!
பெண் : பள்ளிசென்று பயிலாமல் அனுபவக்
கல்வி கற்றோர் இங்குண்டே!
ஆண் : தனித்தோர் தேர்வு அவருக்கென
துணிந்தே இங்கு வைத்திடலாம்!
அரசியல் அறிவை நிருணயித்து
தரலாம் வாக்கு உரிமையினை
எல்லோர்க்கும் வாக்கு உரிமையினி
செல்லாது என்றே சொல்லிடலாம்
தேர்தலில் நிற்கும் வேட்பருக்கும்
தேர்வு ஒன்று நடத்திடலாம்!
பெண் : முடிவு என்னவோ நல்ல முடிவே!
எடுத்தால் இங்கு நிலைக்குமோ?
ஆண் : படுசுட்டிப்பேடே! என்முடிவா?
படித்தவர் சிலரது பேச்சன்றோ?
பெண் : இப்போது நிறையப் பேசுகின்றாய்!
தப்பும் அதிலே வரவில்லை!
சரிசரி! இப்போது இது போதும்!
திரையோ விலகுது! நாம் பார்ப்போம்!
(காட்சி முடிவு)
(பாடும்)
Comments
Post a Comment