Skip to main content

பார்புகழ் அறிஞர் பல்லாண்டு வாழ்க – பேராசிரியர் சி.இலக்குவனார்

பார்புகழ் அறிஞர் பல்லாண்டு வாழ்க – பேராசிரியர் சி.இலக்குவனார்

anna_and_ilakkuvanar02
அறிஞர் அண்ணா அவர்கள் இன்று தமிழ்க் காக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கி வருகின்றார்கள். இந்தியப் பெருந் தலைவராக உலகப் பெருந் தலைவராக விளங்கப் போகும் காலம் விரைவில் வந்து கொண்டிருக்கின்றது.
மக்கள் உளங்களை வன்மையாகப் பிணித்துத் தன்பால் ஈர்க்கும் தனிப்பெரும் தலைவர் அறிஞர் அண்ணா.
‘‘விரைந்து தொழில்கேட்கும் ஞானம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்’’ எனும் திருவள்ளுவர் செம்மொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் அறிஞர் அண்ணா அவர்களே!
நம் அன்னைத் தமிழ், தொன்மையும், வன்மையும் தூய்மையும் இனிமையும் பொருந்தியதுதான். ஆயினும் தமிழ் மக்களே தமிழின் இத்தகைய பெருமைகளை உணராது இருந்தனர். ‘தமிழ்’ என்பது தமிழ்ப் புலவர்கட்கு மட்டும் உரிய தனி உடைமை எனக் கருதப்பட்டு வந்தது. அந்நிலையை மாற்றித் ‘தமிழ்’ யாவர்க்கும் உரியது என ஆக்கி, இனிய தமிழில் பேசுதலையும் எழுதுதலையும் நாகரிகப் பெரு வழக்கமாக நாட்டில் நிலைநாட்டிய பெருமை அறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.
இன்குரல் பெற்றுள்ள இசை மகள் ஒருத்தி இனிய தமிழில் பாடுங்கால் கேட்டு மெய் மறந்திருப்பது போல், தமிழ்ச் சொற்பொழிவைக் கேட்டுச் செயல் மறந்து நிற்கும் நிலையை உண்டாக்கிய சீர்த்தி அறிஞர் அண்ணாவுக்கே உரியது.
அறிஞர் அண்ணா அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும்நாவிறுபடைத்துள்ள பெருநாவலர். செஞ்சொற்கொண்டல்; எவரையும் தம்போக்குக்கு ஆட்படுத்தும் பேனா மன்னர்; பிறவி நடிகர்; ஆராய்ச்சி அறிஞர்; அமைதிப் பெரியார்; அன்புக்குரிசில்; மக்களாட்சியின் மாண்புறு காவலர்.
இன்று பாரதப் பெருங் கண்டத்தில் ஒருமைப்பாட்டின் பேரால் அஞ்சத்தக்க சூழ்நிலை ஒன்று உருவாகி வருகின்றது. ‘‘ஒற்றுமைக்கு வழி ஒரே நாடு; ஒரே மொழி’’ என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பரத கண்டத்தில் உள்ளோர் அனைவரும் இந்தி மொழி ஒன்றையே தேசீய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டமிட்டு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இந்தி மொழியை ஏனைய மொழியாளர் மீது சுமத்தி வரும் செயல் விரைந்து நடைபெற்று வருகின்றது. இன்னும் சில ஆண்டுகளுக்குள் இந்தி மொழியே எல்லாத் துறைகளிலும் ஆட்சி பெற்றுவிடும்.
இதனோடு அமையாது ‘‘எல்லா மொழிகட்கும் ஒரே எழுத்து’ என்ற பெயரால் இந்தி மொழி எழுத்தாம் தேவநாகரியை இங்கு வழங்கும் அனைத்து மொழிகட்கும் உரித்தாக்கவும் திட்டமிட்டுச் செயல்புரிந்து வருகின்றனர்.
ஆகவே ஒரு கால்நூற்றாண்டுக்குள் இந்தி மொழி தவிர்த்த ஏனைய மொழிகள் உருவிழந்து மறைந்தொழிவது உறுதி. மொழியையிழந்த பின்னர் விழியை இழந்தவர்களாவோம்; விழியிழந்த பின்னர் வாழ்வேது?
இக்கொடு வினையினின்று தப்புவதற்கு வளர்ந்தோங்கி வரும் இந்தி முதன்மையைத் தடுத்தாக வேண்டும். இம்மாபெரும் தடுப்புப் பணியில் அறிஞர் அண்ணா அவர்கள் முனைந்து நிற்கின்றார்கள். அவர் தலைமையில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் அமைதியான அறப்போரில் ஈடுபட்டு தாய்மொழிக்காக அல்லல்பட்டு வருகின்றனர். இந்தி முதன்மைத் தடுப்பு இந்தி ஒழிந்த எல்லா மாநிலத்திற்கும் உரியது; எல்லா மக்களும் தம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடல் வேண்டும்.
மறைந்த மாமணி நேருவைப் போல் தென்னரசு மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஒரே தலைவராக விளங்குபவர் அறிஞர் அண்ணா அவர்களே. ஏனைய மாநிலத்தவரும் அறிஞர் அண்ணாவின் தலைமையில் அணிவகுத்து நிற்கும் காலம் வரப்போகின்றது. இந்தி மொழித் தனியாட்சி அப்பொழுதுதான் தன் இரும்புப் பிடியைத் தளர்த்தி தன்னிடத்திற்குச் செல்லும்.
எல்லா மொழிகளும் இடையூறின்றி வளரவும், எல்லா மாநிலத்தவரும் உரிமையோடு ஒற்றுமையுடன் வாழவும் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற பெருமித உணர்வு தோன்றவும் இந்திமொழி முதன்மை அகற்றப்பட வேண்டும். இப்பணியில் ஈடுபட்டுள்ள அறிஞர் அண்ணா அவர்கள் பல்லாண்டு வாழ்வார்களாக. பரத கண்டப் பெருந்தலைவராக, உலகப் பெரியாராக, மக்கள் அனைவராலும் போற்றப்படும் நிலையை விரைவில் பெறுவாராக, இன்னும் பலப்பல ஆண்டுகள் இனிதே வாழ்க.
வாழ்க அண்ணா! வளர்க தமிழ்
இந்தி முதன்மை எளிதே நீங்கி
எல்லா மொழிகளிலும் இனிதே வாழ்க!
அடிமை நீங்கி மிடிமை ஒழிந்து
ஒன்றுபடுவோம் உள்ளத்தால்
நன்றே வாழ்வோம் நலம்பல பெற்றே!
குறள்நெறி(மலர்1 இதழ்17):ஆவணி 31, 1995/ 15.09.1964
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/02/kuralneri02-250x75.jpg





Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்