oct25
வெடிக்கின்ற எரிமலையைப் பாய்ந்து சீறி
விரிக்கின்ற நெடுநதியை நாளும் ஓயா(து)
அடிக்கின்ற கடலையை மேகத் துள்ளே
அலறுகின்ற இடியொலிகள் அனைத்தும் பேச்சில்
வடிக்கின்ற ஆற்றலர்யார்? கருத்தை யள்ளி
வழங்குகொடை வள்ளல் யார்? கொடுமை கண்டு
துடிக்கின்ற உளத்தர்யார்? புரட்சியாளர்
தொடருக்கே ஒளி விளக்காம் அண்ணா வன்றோ!
குற்றால அருவியதின் குளிரும்; நல்ல
குலைக்கனியின் சார்தந்த சுவையும்; நஞ்சை
வற்றாத தஞ்சையதின் வளமும்; சேர
வளநாட்டின் இயற்கையதின் செழிப்பும்; என்றும்
முற்றாத செந்தமிழின் இளமையெல்லாம்
முழுவடிவாய்ப் பேச்சாலும் செயலால் அன்பால்
உற்றாரப் பெருக்கெடுக்கத் தேக்கும் தோன்றல்!
ஒப்பில்லா அவர் தாம் யார்? அண்ணாவன்றோ!
தென்னாட்டுக் காந்தியராம் பெர்னாட் சாவாம்
தேர் கல்விச் சீர்மிக்க இங்கர் சாலாம்
பொன்னாட்டுத் தளை நீக்கும் ஆப்ர காமாம்
புன்மையினைப் போக்க வந்த கமால் பாட் சாவாம்
கண்ணோடும் இமைக் குறிப்பில் விரல சைப்பில்
காளையரை ஈர்த்திழுக்கும் சாக்ர டீ சாம்
முன்னோட்ட மதியூறாக அறிரு ரேறும்
முழுக்குடமாம் அவர் தாம் யார்? அண்ணாவன்றோ!
அடக்கு முறை எடுக்கு முறை சிறைக் கூடங்கள்
அச்சுறுத்தும் போர்ப்பரணி ஆர்ப்பாட்டங்கள்
இடக்கு முறை வீண் பேத்தல் எதிர்ப்புக் காய்ப்பு
இழிமொழிகள் பழிவழிகள் மிரட்டல் எல்லாம்
கிடக்கட்டும் ஓர் புறத்தில் என்பதைப் போல்
கிஞ்சிற்றும் அஞ்சாத உறுதியோடு
படிக் கட்டி மேலேறும் புரட்சி செய்த
பகுத்தறிவின் முன்னோடி அண்ணா வன்றோ!
மாண்டதுவோ முன்பிருந்த வீரம் எல்லாம்
மடிந்ததுவோ புறம் கண்ட மறச்செய் கைகள்
தீண்டவரும் கொடுநாக இந்தி என்றால்
தீர்த்துவிடு ஏன் தயக்கம் எடுநீ வாளை
பூண்டறுத்து எருவாக்கித் தமிழ்நன் செய்யில்
பூக்கவிடு புதுச் சரிதை தொடுநீ போரே!
ஆண்டவின வழி வந்த அரிமா வே நீ
ஆர்த்தெழுவாய் என்றவர் யார்? அண்ணா வன்றோ!
புறந்தாங்கி அகந்தாங்கும் இலக்கியத்தை
புதுமை நிறப் பாகாக்கிச் சுவைக்கத் தந்து
அறந் தாங்கி நெறி தாங்கி கொள்கை தன்னால்
அவனிக்கே பயன் சேர்த்து மக்கள் தன்னை
திறந்தாங்கி உரந்தாங்கி உறுதியோடு
தேன் தமிழை வாழ்வித்து இந்தி மாய்க
மறந்தாங்கி சேர்ந்தெழுவீர்! மானம் காப்பீர்!
மாத்தமிழீர் என்றதுயார்? அண்ணாவன்றோ!
தீண்டாமை ஒழிந்துபட அடிமை நீங்க
தீமைகளும் தீய்ந்துபட நன்மை தேங்க
வேண்டாவாம் இந்தியெனும் வேட்கை ஓங்க
வெள்ளம்போல் தமிழ் காக்கும் உணர்வு பொங்க
தூண்டாமல் அறப் புரட்சி தூண்டும் மேலோர்
தூயவுள மாமணியாம் அவர் தாம் யாரோ!
ஆண்டகவை ஐம்பத்து ஆறு கொண்ட
அறிஞர் தாம் அண்ணாதான் புரட்சியாளர்!
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/02/kuralneri02-250x75.jpg 
குறள்நெறி(மலர்1 இதழ்17): ஆவணி 31, 1995/15.09.1964