செஞ்சீனா சென்றுவந்தேன் 11 – பொறி.க.அருணபாரதி

செஞ்சீனா சென்றுவந்தேன் 11 – பொறி.க.அருணபாரதி

11. சியான் – தமிழ்நாடு – வரலாற்று உறவு


  சங்கக் காலம் தொட்டே, சீனாவிற்கும் தமிழகத்திற்கும் உறவுகள் உண்டு. சீனாவிலிருந்து வந்த பயணிகள் சிலர் தமிழகத்தில் தங்கியிருந்து, தமிழகத்தின் பண்பாடு – வரலாறு ஆகியவற்றைத் தங்களுடைய சீன மொழியில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.
  அவ்வாறு, தமிழகம் வந்த முதலாவது சீனப்பயணி பாகி யான் என்பவர், சீனாவின் நான் சிங் பகுதியிலிருந்து வந்தவர். இரண்டாவது வந்த சீனப்பயணி யுவான் சுவாங்கு, சியான் நகரத்திலிருந்து வந்தவர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங்கு என்ற சீனப்பயணி தமிழகம் வந்தார் என நாம் பாடப் புத்தகத்தில் பயின்றிருப்போம்.
  யுவான் சுவாங்கிற்கு சில இடங்களில் கோயில் கூட அமைக்கப்பட்டுள்ளன என கேள்விப்பட்டேன். அதற்கான பயணத்தில் இறங்கினேன்.
 ‘Great Wild Goose Pagoda’ என்ற ஆங்கிலத்தில் அவ்விடத்திற்குப் பெயர் வைத்துள்ளனர். அவ்விடத்திற்கு வந்ததும், அங்கு பெரும் அளவில் யுவான் சுவாங்கின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சீனாவின் பல பகுதிகளிலிருந்தும் இப்பகுதிக்கு சீனர்கள் சற்றுலா வருகின்றனர். வெளிநாட்டுப் பயணகளும் கணிசமாக இருந்தனர்.
   ஒவ்வோர் இடத்திலும், சீனர்கள் கலை நுட்பமிக்க பல கட்டுமானங்களை ஏற்படுத்தியிருந்தது வியப்பைத் தந்தது. குப்பைத்தொட்டியைக்கூட அவர்கள் கலை நுணுக்கத்துடன் உருவாக்கியிருந்தனர். குப்பைத்தொட்டியில்தான் குப்பைகளைப் போட வேண்டும் எனச் சிறுகுழந்தைகளுக்கும் தெரிந்திருந்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தது. பெரியவர்கள் எவ்வழியில் நடக்கிறார்களோ, அதே வழியில் தான் சிறியவர்களும் கற்றுக் கொள்வார்கள் என்பதற்கு நடைமுறை எடுத்துக்காட்டு இஃது எனத் தோன்றியது.
   யுவான் சுவாங்கு சிலைக்குப் பின்னணியில் தெரியும் கோபுரம், (இ)டங்கு மன்னராட்சிக் காலத்தில் எழுப்பிய கோபுரமாகும். சீனாவின் குறிப்பிடத்தகுந்த அரண்மனைகள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஆகியவற்றைப் பார்க்க வேண்டுமெனில் சீன அரசிற்கு நாம் பணம் கொடுத்தே பார்க்க வேண்டும். இந்தக் கோபுரத்தைப் பார்க்க 60 யுவான் கேட்டார்கள். அஃதாவது தமிழக மதிப்பில், 600 ரூபாய்! வெளிநாட்டினரும், வெளி மாகாணங்களிலிருந்து வரும் சீனர்களும் மட்டுமே இவ்வாறு நிதியளித்துவிட்டுப் பார்க்கிறார்கள். இதன் மூலம், அரசுக்கு வருமானமும் வருகின்றது, பல முக்கிய இடங்களில் அதிகளவில் நெரிசல் ஏற்படாமலும் இருக்கிறது. ஆனால், அந்த நிதி கொஞ்சம் அதிகம் தான்!
   தமிழக மன்னர்களின் உண்மையான தோற்றத்தை இலக்கியக் குறிப்புகளிலிருந்து தேடிப்பிடித்து, அதை ஓவியமாக்கி ‘வாளோர் ஆடும் அமலை’ என்ற ஓவிய நூலை படைத்தார், ஓவியர் மருது. அந்த நூலில், மன்னர்கள் என்றாலே, பெரும் மணிமுடிகளையும்(கிரீடங்களையும்) அணிகலன்களையும் சுமந்து கொண்டிருந்தனர் என்ற கருத்து இருந்தது என்றும் ஆனால் உண்மை அதுவல்ல என உணர்ந்தே அதை இவ் ஓவியத் தொகுப்பில் காட்சியாக்கியுள்ளேன் என ஓவியர் மருது விளக்கியிருந்தார். அதற்கு யுவான் சுவாங்கின் பயணக்குறிப்புகளும் உதவியாய் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் மதுரை வீதிகளில், யுவான் சுவாங்கு நடந்து வந்த போது, மக்கள் அனைவரும் ‘பாண்டிய மன்னர் வருகிறார். பாண்டிய மன்னர் வருகிறார்’ எனப் பரபரப்பாக ஒதுங்கி வணக்கம் செலுத்தி வழிவிடுகின்றனர். இதைக் கண்ட, யுவான் சுவாங்கு யார் மன்னன் என்று தேடியதையும், பாண்டிய மன்னனும் மக்களைப் போலவே சாதாரணமாக இருக்கிறார் என்பதையும் எந்த ஆடை, ஆபரண வேறுபாடும் இல்லை என்பதையும் தமது பயணக் குறிப்பிலே எழுதிவைத்திருந்தார். இக்குறிப்பைப் பயன்படுத்தியே ‘வாளோர் ஆடும் அமலை’ ஓவியத் தொகுப்பில், ஓவியர் மருது புகழ்மிக்க பாண்டிய மன்னர் ஓவியத்தை வரைந்திருந்தார்.
   புத்தமதம் குறித்து அறிந்து கொள்ளும் நோக்குடன் இந்தியத் துணைக்கண்டமெங்கும் பயணம் மேற்கொண்டிருந்த அவர், சீனாவிற்கு திரும்ப வந்து சேர்ந்தவுடன் பாட்னாவில் நாலந்தா பல்கலைக்கழகத்திலிருந்து கொண்டு வந்திருந்த புத்தர் குறித்த பல்வேறு நூல்களையும், தமது பயணத்தின் போது சேகரித்த அரிய பொருட்களையும் சியான் நகருக்குத்தான் கொண்டு வந்தார்.
   அப்போது அரசாண்டு கொண்டிருந்த டாங் பேரரசர், கி.பி. 652இல், யுவான் சுவான் கொண்டுவந்திருந்த பொருட்களைக் கொண்டு புத்த கோயில் ஒன்றை எழுப்பினார். 64கோல்(மீட்டர்) உயரத்தில் அமைக்கப்பட்ட அந்தக் கோயில் இன்றைக்கு ‘Giant Wild Goose Pagoda’ என்றழைக்கப்பட்டு வருகிறது. அங்கு இன்றைக்கும் யுவான் சுவான் கொண்டுவந்திருந்த பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
   (இ)டாங்கு மன்னராட்சிக்கும் தமிழகத்திற்கும் அக்காலத்திலிருந்தே பல இன்றியமையாத் தொடர்புகள் உண்டு. சோழர்கள், (இ)டாங்குஅரசர்களுடன்தான் வணிகத் தொடர்புகளைப் பேணி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
   கி.பி. 1225-ஆம் ஆண்டில், தமிழகம் வந்திருந்த மற்றொரு சீன புவியியலாளர் சா யூ-குவா என்பவர், பிற்காலச் சோழர்களின் படைகளைப் பற்றி பின்வருமாறு எழுதினார்:
   “இந்நாடு மேற்கிலுள்ள நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர்”.
   கி.பி. 960 முதல் 1279 ஆம் ஆண்டு வரை சீனாவை சாங் பேரரசு(Song Dynasty) ஆட்சி செய்தது. அப்போது, தமிழகத்தில் பிற்காலச் சோழர்களின் ஆட்சி இருந்தது. அதன்போதும், தமிழகத்திற்கும் சீனாவிற்குமான வணிக உறவுகள் இருந்தன. அக்காலத்தில், சோழத் தூதர்கள், கி.பி. 1016, 1033, 1077 ஆகிய ஆண்டுகளில் சீனாவிற்குத் தமிழகத்திலிருந்து பயணம் மேற்கொண்டதாகக் குறிப்புகள் உள்ளன. கி.பி. 1077ஆம் ஆண்டு சோழர்கள் சிறிவிசயாவை வென்றவதற்குப் பிறகு, முதலாம் குலோத்துங்கச் சோழன் சாங்(கு) பேரரசின் சென்சாங்(கு)அரசருக்கு தமது வணிகத் தொடர்புகளை அனுப்பி வைத்தார்.
   குலோத்துங்கச் சோழனை அப்பகுதியில் தி- அவு-கியா-லோ (Ti-hau-kia-Lo) என அழைத்தனர். தன் இயோக் சியோங்கு (Tan Yeok Seong) என்ற ஆய்வாளர், சிறீவிசயா நாட்டில் பாழடைந்து கிடந்த தாவோயிசக் கோயில்களைச் சீரமைக்க குலோத்துங்க சோழன் பெருமளவில் நிதியுதவி செய்ததற்கு அந்நாட்டில் இன்றைக்கும் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார்.

ஆசிரியர் குறிப்பு :

‘Great Wild Goose Pagoda’ அல்லது ‘Big Wild Goose Pagoda’ என ஆங்கிலத்தில் அறிந்தோ அறியாமலோ அல்லது நேர் பொருளாகத் தவறாகக் குறிக்கப்பட்டிருக்கலாம். மற்றொரு சிறிய கோபுரம் ஒன்று உள்ளமையால் இது பெரியதாக அழைக்கப்படுவதில் தவறில்லை. எனினும் ஒருவேளை இக்கோபுரம் பாழ்பட்டு நின்றபின்னர், இப்பெயரைச் சூட்டினார்களா என்று தெரியவில்லை. எனினும் இன்றும் காணத்தகுந்ததகா உள்ளது என்பது தொடர்புடைய படங்களையும் சுற்றுலா வருவோர் எண்ணிக்கையையும் பார்த்தால் தெரிகிறது. Dàyàn Tǎ ( 大雁塔) எனச் சீனத்தில் குறிக்கப்பெறும் இதனை நாம் ‘அறிவர் பெருங்கோபுரம்’ எனலாம்.
இதேபோல், Ti-hau-kia-Lo என்பது ‘கொடையாளருள் மாணிக்கம்’ என்பதை ஒத்த பொருளில் வழங்கப்பட்டிருக்கலாம். எனவே, நாம் அவ்வாறே குறிக்கலாம். சீனம், தமிழ் அறிந்தவர்கள் சொற்பொருள் ஆராய்ந்து தெரிவிப்பின் நன்று.
 

Comments

  1. சீனப்பயணம் பற்றி சிறப்பான குறிபுகள். படங்கள் அருமை.பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  2. சீனப்பயணம் பற்றி சிறப்பான குறிபுகள். படங்கள் அருமை.பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  3. தங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி அம்மா. தொடர்ந்து படியுங்கள். அகரமுதல இதழையும் www.akaramuthala.in
    படியுங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue