தேனி மாவட்டம் – வரலாற்றுப்பார்வை : வைகை அனீசு
தேனி மாவட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கால்
பதித்து நடந்து வந்த பகுதி கம்பம் பள்ளத்தாக்கு ஆகும். சேர மன்னன்
எழுப்பிய மங்கள தேவி கண்ணகி கோயில், முல்லைப்பெரியாறு அணை கட்டிய
பென்னிகுக்கு கால்பதித்த இடம், மாவீரர் கான்சாஃகிப்பு சாலை அமைத்த கம்பம்
சாலை, கான்சாஃகிப்பு இறப்பிற்குப் பின்னர் பெரியகுளம் பகுதியில் அவரது ஒரு
கால் அடக்கம் செய்யப்பட்ட நவாபு பள்ளிவாசல் எனப் பல உண்டு.(கான்சாஃகிப்பு
உடல் எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எட்டு இடங்களில் அடக்கம்
செய்யப்பட்டது.)
சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், மதுரை
சுல்தான்கள், நாயக்க மன்னர்கள், ஆர்க்காடு நவாபு, தடம் பதித்த பகுதியும்
மாலிக்கபூர் கடைசியாகப் போரிட்டு வென்ற பகுதியும் கம்பம் பகுதியே. இவை தவிர
வருசநாட்டு நிலக்கிழார் அரண்மனை, கோம்பை அரண்மனை, பெரியகுளம் அரண்மனை,
எரசக்கநாயக்கனூர் அரண்மனை எனப் பல அரண்மனைகள் இன்றும் வரலாற்றோடு வரலாறாக
உள்ளன. பல போர்கள் நடந்ததாக வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.
கம்பம் பள்ளத்தாக்கும்-முசுலீம்களும்
பந்தல இராசாவின் அறிவாசான்(ஞானகுரு),
வாவேர் என்னும் இசுலாமியஅறிவாசான் (சூபி) ஆவார். அவர் கம்பம் பள்ளத்தாக்கு
பகுதியில்தான் இசுலாமியப் பரப்புரை செய்து வந்தார். கம்பத்தில் இவர்
பெயரில் வாவேர் பள்ளிவாசல் என்ற பள்ளிவாசல் உள்ளது. கி.பி.1885 ஆம் ஆண்டு
கோயம்புத்தூரில் இருந்த மண்டல ஆவண அலுவலகத்தில் உள்ள பழைய ஆவணங்களின்
அடிப்படையில் பந்தல இராசாவால் வாழங்கப்பட்ட 7 காணி(ஏக்கர்) நிலம் வாவேர்
பள்ளிக்கு நல்கைக் கொடையாக (இனாம் மானியமாக)ப் பட்டயம் வழங்கப்பட்டுள்ளது.
பந்தல இராசாவின் ஞானகுருவான வாவேர் மெய்ஞ்ஞானி(சூபி) பெயரை நினைவூட்டும்
வகையில் வாவேர் இராவுத்தர், வாவேர் அம்மா, வாவேர் மீரான் என்று பல பெயர்கள்
சூட்டப்படுகின்றன.
18-ஆம் நூற்றாண்டில் பாட்டினால்
இறைநெறியைப் போதித்து இசுலாமியப் பரப்புரை செய்த இடங்களில் சிறிய
பள்ளிவாசல் எழுப்பி விடுவது வழக்கம். உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள
தேவாரத்தில் பீர் முகமது அப்பா தங்கி இசுலாமியப் பரப்புரை செய்த இடத்தில்
பள்ளிவாசல் ஒன்று உள்ளது. தேனி மாவட்டத்தின் பழமையான பள்ளிவாசல் கம்பம்
வாவேர் பள்ளிவாசலும், பழமையான தேவாலயம் இராயப்பன்பட்டியிலும், பழமையான
கோயில் சின்னமனூரிலும் உள்ளன. சின்னமனூர் செப்பேடுகள் புகழ்பெற்ற ஆவணம்
ஆகும்.
கி.பி.1311 ஆம் ஆண்டு மாலிக்கபூர்
தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுத்த கடைசி பகுதி கம்பம் ஆகும். மாலிக்கபூரின்
படைத்தலைவர்கள் முகமது மீரான், சஞ்சய்கான் இருவரும் கம்பத்தில் பதினைந்து
ஆண்டுகள் கோட்டை கட்டி ஆண்டனர். இவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் சஞ்சய்கான்
கிணறும், கெஞ்சினன் குளம் என்று தற்போது அழைக்கப்படும் சஞ்சய்கான் குளமும்,
முகமது மீரான் கட்டிய மொட்டை வீரன் கிணறுகள் பதின்மூன்றும் கம்பத்தில்
கோட்டைக்குள் கண்காணிப்புக் கோபுரமும் (வாட்ச் டவர்) தற்போது மொட்டை வீர்ன்
கோயில் என்ற பெயரில் இன்றும் காட்சிப்பொருளாக, வரலாற்றுச்சான்றாக உள்ளன.
சிவன்கோயில், கம்பராயப்பெருமாள் கோயிலுக்கு வெளியே இருக்கும் கோட்டைத்
திடல்(மைதானம்) இன்றும் முசுலிம் மன்னர்கள் ஆண்ட கோட்டையை
நினைவுபடுத்துகிறது.
கி.பி.1311 ஆம் ஆண்டு மாலிக்கபூர்
தமிழ்நாட்டின் மீது படையெடுத்துக் கம்பம் பகுதிக்கு வந்தபோது படையினருடன்
அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு இமாம சமாஅத்தாக இருந்து
தொழவைப்பதற்கும் இசுலாமியப் பரப்புரை ஆற்றவும் பல சமயஅறிஞர்கள்(ஞானிகள்,
சூபிகள்) உடன் வந்தனர். அவர்களில் பலர் யுனானி மருத்துவமும் செய்து
வந்தனர். கம்பம் வாவேர் பள்ளியின் பின்புறம் பன்னீர் மரத்தடியில் இரண்டை
கல்லறைகள் இன்றும் ஞானக்காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கல்லறை(தருக்காக்களின்) தாக்கம்
கம்பம் பகுதியில் ஏற்பட்ட போரில் படுகாயம்
அடைந்த முசுலிம் படையினரில் தோற்ற பல பெரியோர்களும் சூபிகளும் அடங்குவர்.
போரில் ஏற்பட்ட காயங்களினால் வழியில் ஆங்காங்கே பலர் இறந்தனர். மரணமடைந்த
அவர்களுக்கு மாலிக்கபூரின் படையினர் ஆங்காங்கே கல்லறைகளை
எழுப்பிச்சென்றனர். இவ்வாறு தேவதானப்பட்டி அரிசிக்கடைப்பகுதியில் உள்ள
கல்லறை (தருக்கா), தேவதானப்பட்டி காந்தித்திடலில் உள்ள கல்லறை,
பதினெட்டாம்படி கோயில் அருகே உள்ள மட்டமலை கல்லறை, துலுக்கப்பட்டி என்ற
பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள கல்லறை, தேவதானப்பட்டி-பெரியகுளம் சாலையில்
உள்ள நாலாங்கல் கல்லறை, அன்னஞ்சியில் உள்ள கல்லறை, சின்னமனூர்-உத்தமபாளையம்
செல்லும் வழியில் உள்ள கல்லறை(சாலை விரிவாக்கத்தின்போது இக்கல்லறை
அழிக்கப்பட்டது), அனுமந்தன்பட்டிக்கு வடதுபுறம் மேற்கு பகுதியில் உள்ள
கல்லறை, கம்பம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு எதிர்ப்புறம் உள்ள
கல்லறை, கூடலூர் நுழைவு வாயிலில் உள்ள கல்லறை, எனப் பல கல்லறைகள் உள்ளன.
இவை எல்லாம் மாலிக்கபூரின் கம்பம் படையெடுப்பில் மரணமடைந்த போர்த்
தளபதிகள்,தலைவர்(இமாம்)களின் அடக்கத்தலம் ஆகும்.
சமணமும்-இசுலாமும்
கி.பி.8 ஆம் நூற்றாண்டில் சமணர்கள் அதிக
அளவில் இங்கு இருந்துள்ளனர். மேலூர், யானைமலை ஒத்தக்கடை, இப்பொழுது மதுரை
காமராசர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதி அருகே ஏராளமான சமணப் படுகைகள்
உள்ளன. உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரிக்கு மேற்கே சாயபுமலை
எனப்படும் சமணமலை இன்றும் உள்ளது. சமணர்களின் கற்படுகைகள், நீர்நிலைகள்,
குகைகள், மருந்துகள் தயாரித்த கற்கள் எனப் பல உள்ளன. கி.பி. 8-9 ஆம்
நூற்றாண்டில் சமண-சைவ மதப்போரில் சமணர்கள் 8000 பேர்கள் கழுமரத்தில்
ஏற்றிக்கொல்லப்பட்டனர்.
சமணர்கள் மொட்டை அடித்து இருப்பார்கள்.
முசுலிம்களாகி மாறிய பின் மொட்டைத் தலை அடையாள மாற்றத்திற்கு
உதவியது.இரா.பி.சேதுபிள்ளை, எ.கே.ரிபாயி போன்றவர்கள் ஆய்வுக்கட்டுயில்
இசுலாமியர்களுக்கிடைய சமண சொற்கள் பல இருப்பதை இதற்கு ஆதாரமாகக்
காட்டுகின்றனர்.
இவை தவிர கூன் பாண்டிய மன்னரின் அதிதீவிர
சைவமத ஈடுபாட்டிற்குப் பயந்து பல சமணர்கள் முசுலிம்களாக மாறிவிட்டதாலும்
உத்தமபாளையம், கம்பம், கோம்பை பகுதிகளில் அதிக அளவில் முசுலீம்கள் இருக்க
காரணம் என வரலாறு கூறுகிறது.
ஆவணம்:
தமிழகத்தில் இதுவரை 50 இடங்களுக்குமேல்
பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல்
துறையினரின் முயற்சியால் முதன்முறையாக மல்லப்பாடி என்று இடத்தில்தான்
தமிழகத்தின் முதல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில்
முத்துப்பட்டி என்ற இடத்தில் சிறிய மலையில் சில குகைகள் அமைந்துள்ளன.
அவற்றில் ஒன்று சமணக்குகையாகும். சமணர்களின் படுக்கைகள் இங்கு
அமைக்கப்பட்டுள்ளன. இக்குகையில் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே
அமைந்துள்ள ஊர் அணைப்பட்டியாகும். இவ்வூரின் அருகே அமைந்த மலை சித்தர் மலை
ஆகும். இங்கு சமணக் குகை ஒன்று உள்ளது. இக்குகையின் கிழக்குப் பக்கத்தில்
ஓர் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. குதிரையைச் செலுத்துவது போன்று
செந்நிறத்தில் வரையப்பட்டுள்ளது. குதிரைமீது ஒரு மனிதன் அமர்ந்திருக்க
குதிரையானது செல்வது போன்று காணப்படுகிறது. (தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம்
72- முனைவர் இராசு. பவுன்துரை)
காமயக்கவுண்டன்பட்டி
பல குகை ஓவியங்களில் படகு வடிவம் இடம்
பெறுகின்றது. இது கட்டுமரம் போன்ற வடிவமைப்பைக் கொண்டு திகழ்கின்றது.
அவற்றுள் துடுப்புடன் பயணம் செய்யும் காட்சி சிறப்புடைய ஒன்று.
காமயகவுண்டன்பட்டியில் படகின் வடிவங்கள் இடம் பெற்றுள்ளன.(தமிழகப் பாறை
ஓவியங்கள்-பக்கம் 234- முனைவர் இராசு.பவுன்துரை). குறிஞ்சிப்பகுதியில்
நெய்தல் நிலத்தின் பங்களிப்பை இந்தக் குகை ஓவியங்கள் நமக்கு
உணர்த்துகின்றன. இவை தவிர சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, வைகை அணை,
சுருளிஅருவி, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி என நீர்வளங்களும் நிறைந்தது
தேனி மாவட்டம்.
தொகுப்பு : வைகை அனிசு
9715-795795
Comments
Post a Comment