வழிகாட்டும் ஒளி வேந்தன் – புலவர் இரா.வடிவேலன்

வழிகாட்டும் ஒளி வேந்தன் – புலவர் இரா.வடிவேலன்

periyar04
செந்தமிழர் வாழ்வென்னும் மலர்பூக்கும் கதிராய்ச்
சீரேற்றும் சொற் கூட்ட வெள்ளத்தில் மழையாய்
வந்தவரின் வாழ்விற்கு வன்கொடிய நெருப்பாய்
வடமொழியின் வால்பற்று குழுவிற்குப் படையாய்ச்
சொந்தமெனும் நம்மவரின் தோளுக்குத் துணையாய்த்
தொல்லைக்கு நகை கூட்டி வாவென்னும் மலையாய்த்
தந்தையாய்த் தமிழர்க்கு வெண்தாடி அலையாய்ச்
சாய்ந்தாடத் தென்றலிலே சிங்கமென வந்தோன்!
எண்ணத்தின் சொற்பேழை! எழுச்சிக்கு முரசம்
ஏமாந்த நாட்டிற்குச் சீர்மேவ வந்தோன்!
கண்ணான மண்ணிற்குக் கதியின்மை கண்டு
காலத்தில் தன்மான இயக்கத்தைக் கண்டேன்!
‘விண்ணாட்டுத் தேவரிவர், வணங்குங்கள்’’ என்ற
வேதத்தின் தரகற்கு விலங்கேற்ற வந்தோன்
பண்ணூடு தமிழுக்குத் தமிழர்க்கு நாட்டில்
பாய்ந்தோடும் புரட்சிவிதை நெஞ்சமெலா மிட்டோன்!
பார்ப்பனரின் சூழ்ச்சிகளை உளம் பதைக்கக் கண்டான்
பைந்தமிழர் அறியாமை மூடத்தைக் கண்டான்
ஆர்க்கின்ற சாதிகளின் ஆட்டத்தைக் கண்டான்
அநியாயக் காரர்களின் கொட்டத்தைக் கண்டான்
ஊர்தோறும் நகர்தோறும் உறக்கத்தைக் கண்டான்
உலகோங்கி வாழ்ந்ததமிழ் அலமரலைக் கண்டான்
வேர்க்கின்ற நெஞ்சோடு வெதும் பலினைக் கொண்டான்
மெற்றிபெறச் செய்வ ணென வஞ்சினத்தைக் கொண்டான்!
நீரோட்டம் போலருமைச் சொற் பருக்கை பாய்ச்சி
நினைவோடு மறவாத அன்பறிவு தந்தான்!
ஊரோட்டம் இவன் பின்னால், உலகோட்டம் காண்போம்!
உயிர்த் தொண்டு முன்தோன்றி இவன் பேரை நாட்டும்!
நாரோட்ட மாகிச் செந் தமிழர்களைச் சேர்த்து
நலமோங்க வைத்துள்ள அறிவாள ஏந்தல்!
ஈரோட்டு வேந்தனிவன் பேர்கூட்ட வந்தோன்
இணையில்லா விடுதலையின் பெருந்தானைத் தலைவன்!
திருநாட்டின் பெருமைக்கே அறிவுத் தொண்டாற்றித்
தில்லிக்கு வல்லூறாய் எதிர் நின்று தாக்கும்!
மருஆடும் நெஞ்செல்லாம் அன்பே மலர்ந்து
மருண்டாடும் வாழ்விற்(கு) அருளேசு ரக்கும்!
கருவாகி உருவாகி வருகுழவிச் சேனை
களித்தாடும் வெண்தாடிப் பாட்டனையே கண்டு!
பெருந்தமிழர் தானைக்கு வழிகாட்டும் ஒளிக்கோ!
பேராளன் சீரெல்லாம் உளந்தூக்க முடி(யு)மோ?
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/02/kuralneri02-250x75.jpg
குறள்நெறி(மலர்1 இதழ்17):ஆவணி 31, 1995/ 15.09.1964




Comments

  1. தங்களின் தொடர் பாராட்டுகளுக்கும் கருத்திடுகைகளுக்கும் நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue