தலைத்தலைமை – அரும்பு
நாமேடை தமிழ் நாடாக்கும் நடைமேடை; சிந்தனையோ
பூமேடை; கருஞ்சிவப்பாய்ப் பூத்தவிழி இந்திக்குத்
தீமேடை; புகழுக்குத் தெருவெல்லாம் மணிமேடை;
கோமேடைப் பழங்காஞ்சிக் கொற்றவன்தான் குணமேடை.
முக்கோணத் தமிழகத்தின் முழுக் கோணல் நீக்குகிற
தெக்காணப் புதுச்சிற்பி; திருக்குறள்போற் சிறுவடிவம்;
எக்கோண மும்நோக்கும் இயல்பறிவு; தூக்கியதோர்
கைக்கோணத் துள்இளைஞர் கடற்கோணப் பெருந்தேக்கம்.
ஒருமைப்பா டென்று தமிழ் ஒழிக்கவரு வார்க்கெதிரே
ஒருமெய்ப்பா டில்லாமல் உலவுகிற தமிழரிடை,
பெருமைப்பா டொழியாத பெருகுதமிழ் மறத்திற்கு
வறுமைப்பா டில்லையென வாழுகிற அகச்சான்று.
‘நாடெ’ன்பான், ‘நமதெ’ன்பான்; நறுந்தமிழ்க் கிடும்பையெனில்
‘வாடெ’ன்பான், ‘தூக்கிடுபோர் வா‘ ளென்பான்; மொழிகாத்தல்
‘பீடெ’ன்பான், தமிழ் மானப் பிழிவென்பான்; வரலாற்றின்
ஏடென்ப துள்ளவரை இறப்பினையே வென்றிருப்பான்.
இளந்தமிழர்க் கொருதலைமை; இளம்பரிதிக் கோருவமை;
தளர்ந்தவருக் குணர்வூட்டித் தனித்தினவுக் குணவூட்டும்
களத்தலைமை; தமிழ்ப் புலவர் கவித் தலைமை; நம்மடிமைத்
தளைவிலக்க வருமறிஞன் அண்ணாவே தலைத் தலைமை!
குறள்நெறி(மலர்1 இதழ்17): ஆவணி 31, 1995/15.09.1964
சிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்