செஞ்சீனா சென்றுவந்தேன் 13 –பொறி.க.அருணபாரதி
13. சியான் நகரத்துச் சுடுமண் வீரர்கள்
சியான் நகரின் முதன்மைக் கடைகளிலும்,
உணவகங்களிலும் வாயிலில் ஒரு சுடுமண்படிம(terracotta or Terra-cotta) வீரர்
நிற்பதை நாம் இன்றைக்கும் காண முடியும். சியான் நகருக்குப் பெருமை
சேர்க்கும் ஓர் இன்றியமையாத இடம் சுடுமண்படிம வீரர்கள் அமைந்துள்ள
பகுதிதான். ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, இவ்விடத்தை
8ஆம் உலக விந்தை என அறிவித்துள்ளது என்பதால், உலகெங்கிலுமிருந்து
பார்வையாளர்கள் அங்கு வருகிறார்கள். அப்படி என்ன விந்தைம் இங்கு
இருக்கிறதென்று கேட்கிறீர்களா?
சற்றொப்ப 2000 ஆண்டுகளுக்கு முன்னர்
கி.மு. 209-210 காலக்கட்டத்தில், சியான் நகரம் சீனாவின் பண்டையத் தலைநகரமாக
விளங்கிக் கொண்டிருந்த போது, குவின் சி ஃகுவாங்கு(Qin Shi Huang) என்னும்
பேரரசன், தான் இறந்தவுடன் தனது உடலுடன், தன்னுடைய படையினரின் உருவம் கொண்ட
வீரர்களின் சிலைகளும் புதைக்கப்பட வேண்டுமென விரும்பினார். அதற்காக,
ஒவ்வொரு படை வீரர் சிலையும், ஒவ்வொரு முக அமைப்புடன் கலை நயத்துடன்
படைக்கப்பட்டன.
1974 ஆம் ஆண்டு இவ்விடத்தை வயலொன்றில்
கிணறு தோண்டும்போது தற்செயலாகப் படை வீர்ர்களின் சிலைகள் சிலவற்றைக்
கண்டுபிடித்த சீனர்கள், அதை முழுவதுமாக தோண்டியெடுத்தபோது அதன்
பிரம்மாண்டத்தைப் பார்த்து அதிர்ந்தனர். சற்றொப்ப 8000 படை வீரர்கள், 520
குதிரைகளைக் கொண்ட 130 தேர் வண்டிகள், 150 குதிரைப்படை வீரர்கள் என மிகப்
பிரம்மாண்டமான அகழ்வுப்பணியாக அது அமைந்தது.
சற்றொப்ப 7 இலட்சம் பேரைக் கொண்டு, அந்த
அரசர் இவ்விடத்தைக் கட்டினார் எனச் சில வரலாற்றுக் குறிப்புகள்
வழிகாட்டுகின்றன. அத்துடன் சீன வரலாற்றைப் பற்றிய பல அரிய தகவல்களையும்
இந்தக் கல்லறை தன்னகத்தே வைத்திருந்தது. சில இடங்களை மட்டும்தான் அனைத்துப்
பார்வையாளர்களுக்கும் இங்கு திறந்துவிட்டுள்ளனர். சில இடங்கள் இன்றுவரை
குறிப்பிட்ட சிலரை மட்டுமே பார்வையாளராகக் கொண்டுள்ளன. இங்கிலாந்து இராணி
எலிசபத் போன்ற வெகுசிலரே அந்த இடத்திற்குச் செல்ல இசைவளிக்கப்பட்டுள்ளனர்.
அகழ்வுப்பணிகள் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
எனவேதான், இவ்விடத்தை உலகெங்கிலுமிருந்து
வந்த பார்வையாளர்கள் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர். இவ்வீரர்கள்
தங்களுடைய சீன ஃகன்(huan) தேசிய இன மரபில் வந்தவர்கள் என்பதால்,
வீடுகளிலும், கடைகளிலும் வாயிலில் இந்த வீரர்களின் சிலைகளை இன்றைக்கும்
சியான் நகர சீன மக்கள் நிறுத்தி வைக்கின்றனர். கடவுள் மீது நம்பிக்கை
இல்லாத சீன மக்கள், தம்முடைய முன்னோர்களை மதிப்பதன் மூலம் ‘ நற்காலம்’
பெறலாம் என்ற “மூட“ நம்பிக்கையும் இதனுடன் இணைந்தே இருக்கிறது.
Comments
Post a Comment