இந்த வாரம் கலாரசிகன்



திங்கள்கிழமை காலையில் ஓர் இன்ப அதிர்ச்சி. கைபேசி ஒலித்தது. எதிர்முனையில் முதல்வர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகச் சொன்னபோது, என்னை நானே கிள்ளிவிட்டுக் கொண்டேன். முதல்வர் அலுவலகத்திலிருந்து எனக்குக் கைபேசி அழைப்பு வருவானேன்?அழைத்தவர் தனது பெயர் பாலசுப்பிரமணியம் என்றும், அவர் முதல்வரின் செயலரின் செயலர் என்றும் தெரிவித்தார். முந்தைய நாள் "தமிழ்மணி' பகுதியில் வந்த "இந்தவாரம்' எழுதியவர் நான்தான் என்பதை உறுதி செய்துகொண்டபின், அவர் விடுத்த வேண்டுகோளைக் கேட்டு நான் அதிர்ந்தேன்.""கிரேக்கக் கவிஞர் டகீஸ் மென்டிரேகஸ் கவிதைகளை மொழிபெயர்த்துப் போட்டிருந்தீர்களே, அதைப் படித்த முதல்வர், அந்த மொழிபெயர்ப்பு, புத்தகமாக வந்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார். அப்படி இல்லையென்றால், ஆங்கில மொழிபெயர்ப்பாவது கிடைக்குமா, அது எங்கே கிடைக்கும் என்கிற விவரங்களைத் தந்துதவுமாறு கேட்கச் சொன்னார்!'' என்று அவர் சொன்னபோது எனக்கு வியர்த்து விட்டது.இந்த மனிதர், இந்த வயதில் தனது நிர்வாகப் பொறுப்புகளுக்கும், அரசியல் வேலைகளுக்கும் நடுவில் பத்திரிகைகளைப் படிப்பதே கஷ்டம். இவரானால் பத்திரிகைகள் படிப்பதுடன் நிற்காமல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் படிக்கிறார் என்றால், அது எப்படி முடிகிறது?ராஜ்ஜாவின் கைபேசி எண்ணைக் கொடுத்துத் தொடர்பு கொள்ளச் செய்துவிட்டு, சில வினாடிகள் கற்சிலையாகச் சமைந்துபோய் இருந்தேன். இவரால் எப்படி முடிகிறது? பரபரப்பான பொது வாழ்க்கைக்கு நடுவில், முதல்வருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதி தன்னை சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் வைத்துக் கொண்டிருக்க முடிகிறதே, அது எதனால்? தமிழ் மீது இவர் கொண்ட காதல்தான் காரணமாக இருக்க முடியும். இது இவரால் மட்டும்தான் முடியும்!அந்த பிரமிப்பிலிருந்து நான் மீளவே இல்லை!*******""சாவில் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும், என்றன் சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்'' என்கிற வரிகளைப் பலரும் பல சந்தர்ப்பங்களில் மேற்கோள் காட்டி எழுதியும் பேசியும் வருகிறார்கள். பரவலாக, இது பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் என்றுதான் எல்லோரையும் போல நானும் சிறிது நாள்கள் முன்புவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.சமீபத்தில், ஒசூர் சென்றிருந்தபோது, நான் சந்திக்க நேர்ந்த "கவிமாமணி' தேனிரா பாண்டியன் "தமிழ் - செம்மொழி ஏன், எப்படி?' என்கிற புத்தகத்தின் பிரதியை என்னிடம் தந்தார். அதைப் படித்தபோதுதான் தெரிந்தது "ஈழக்கவிஞர்' முனைவர் .சச்சிதானந்தன் எழுதிய கவிதை வரிகள்தான் இவை என்பது.யாழ்ப்பாணம் மாவட்ட பருத்தித் துறையில் பிறந்த கவிஞர் சச்சிதானந்தன், மகாவித்வான் நவநீத கிருஷ்ண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உடையவர். 1954-இல் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான "ஆனந்தத் தேன்' வெளிவந்திருக்கிறது. கவிதைகள் மட்டுமன்றி "அன்னபூரணி' என்ற புதினத்தையும், பழைய அரசியல் தலைவர் வன்னியச் சிங்கத்தின் வரலாறையும் எழுதியுள்ளார். இவருடைய "யாழ்ப்பாணக் காவியம்' போன்ற பல கவிதைகள் அச்சேறாமல் இருக்கின்றன என்கிற தகவலைத் தருகிறார் "கவிமாமணி' தேனிரா.கவிஞர் சச்சிதானந்தன் பற்றிய இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி, இவர் மனநிலை திரிந்து வவுனியா பகுதியில் அலைந்து கொண்டிருப்பதை சில ஆண்டுகளுக்கு முன்னால் பலரும் பார்த்துப் பரிதாபப் பட்டார்களாம்.அவரது கவிதையிலிருந்து ஒரு சில வரிகள்,
கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா
கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்
செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்கு
சென்று கசிந்தழுது நொந்து விழுவேன்
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா
கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப்பசியும் ஆறிடவேண்டும்.
தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் - என்ர்றான்
சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்.

******நண்பர்கள் வீட்டுக்குப் போனால் எனது கண்கள் தன்னைப்போல புத்தக அலமாரி எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்க்கத் தொடங்கி விடுகின்றன. சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் "இசை விழுது' என்று தலைப்பிட்டு .தமிழ்ச்செல்வன் தொகுத்திருந்த "ஒரே ஒரு ஊர்ல...' புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது. எழுத்தாள நண்பர் தேனுகா வீட்டுத் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு இந்தப் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப் பட்டிருக்கிறது.சமீபத்தில் "அருட்செல்வர்' பொள்ளாச்சி என்.மகாலிங்கம் வீட்டுத் திருமணத்திலும் "சித்ர பாலன்' என்கிற புத்தகத்தை மணவிழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கு அளித்து மகிழ்ந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் இருந்து சில காட்சிகளைச் சித்திரங்களாகத் தீட்டி, பாடல்களுடன் வடிவமைத்திருக்கும் அழகே அழகு.இப்படி பல திருமணங்களில் புத்தகங்களை விருந்தினர்களுக்கு அன்பளிப்பாகத் தரும் வழக்கம் பரவ வேண்டும். இதன் மூலம் இல்லம் தோறும் நூலகம் ஏற்படும் என்பது மட்டுமன்றி, நமது இளைய தலைமுறையினருக்குப் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படவும், தொடரவும் வாய்ப்பாகக் கிடைக்கிறது.சோப்பு, சீப்பு, கண்ணாடி, ரவிக்கைத் துண்டு, பிளாஸ்டிக் பொருள்கள் தருவதற்குப் பதிலாக, புத்தகங்களை அன்பளிப்பாகத் தருவது என்கிற நல்ல வழக்கத்துக்கு வித்திடுபவர்களுக்கு, தமிழின் சார்பில் எனது நன்றி உரித்தாகுக!
கருத்துகள்
கலைஞரிடம் மிகுதியாகக் குறை காண்பவர்கள் கூட ஒத்துக்கொண்டு பாராட்டும் செய்திகள் அவரது கடுமையான உழைப்பும் இலக்கிய ஈடுபாடும். இதனை இவ்வாரக் கலைச் சுவைஞனின் செய்தி மெய்ப்பிக்கினறது. எல்லாம் படித்தறிந்து எலலாம் வல்லராய்த் திகழும் கலைஞர் தமிழ் ஈழ மக்களின் துன்பங்களை உணர்ந்து அவலங்களை நீக்கவும் முயல்வாராக! கலைஞரைக் குறிப்பிட்டதாலோ என்னவோ கவிஞர் சச்சிதானந்தத்தின் அருமையான கவிதையை இடம் பெறச் செய்துவிட்டார். மேலும், சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்று சொன்ன கவிஞர் பாவேந்தர் அல்லர் என அறிந்தவர்களில் பலரும் கூடக் கவிஞர் சச்சிதானந்தன்தான் என்று அறியாமல் யாரோ இலங்கைக் கவிஞர் சொன்னார் என்ற அளவில் நினைவில் வைத்திருப்பர். அனைவரும் அறிய அருமைக கவிஞர் சச்சிதானந்தத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய கலைச்சுவைஞருக்குப் பாராட்டுகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/19/2009 4:54:00 AM

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்