தனிப்பாடல்களில் கலை-பண்பாடு













பண்டைத் தமிழகத்தில் சிறந்து விளங்கிய கூத்து என்னும் கலை, பழமையான பாரம்பரியம் உடையது. பலவகையான கூத்துகளில் "கழைக்கூத்து' என்பதும் ஒன்று. வலிமையும் உயரமும் வாய்ந்த இரண்டு மூங்கில்களை நட்டு, அவற்றினுக் கிடையே உறுதியான கயிற்றை இணைத்துக் கட்டி, ஆடவரும் பெண்டிரும் அதன்மேல் நின்று அந்தரத்தில் ஆடிச் சாகசங்கள் செய்வதே கழைக்கூத்து ஆகும். அந்தக் கூத்தில் வல்ல கலைஞர்கள் "கழைக் கூத்தாடிகள்' என்று அழைக்கப்பட்டனர். கழைக் கூத்தினுள்ளும் "விச்சுளிப் பாய்ச்சல்' என்னும் விந்தை மிக்கதோர் ஆடற்பிரிவு இருந்ததாகத் தனிப்பாடல் ஒன்றின் வாயிலாக அறிய முடிகிறது. விச்சுளிப் பாய்ச்சல் வித்தை மரண அபாயம் மிக்கது. உயிரைப் பெரிதாக மதிக்காதவரால் மட்டுமே நிகழ்த்தப்படக் கூடியது. அதைச் செய்வோர் கழையின் கயிற்றில் ஏறி நின்று, யோகப் பயிற்சியால் மூச்சை அடக்கித் தம் உடலின் பளுவைக் காற்றின் பளுவுக்குச் சமன் செய்துகொண்டு வர வேண்டும். பின்னர் கயிற்றினின்றும் மேலே தாவி, பறவையாய்ச் சிறகு விரித்து, முப்பதே இமைப் பொழுதுகள் அந்தரத்தில் நிலைத்துக் காட்டிய பின்னர், கணப்பொழுதும் தாமதிக்காமல் கயிற்றினுக்கு வந்து விட வேண்டும். "இத்தகைய அபாய வித்தையை எந்தக் காரணம் கொண்டும் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் செய்யவே கூடாது! மீறிச் செய்தால் மரணம் சம்பவிக்கும்' என்பது இவ்வித்தையைப் பயிற்றுவிக்கும் ஆசான்களின் அரிச்சுவடி எச்சரிக்கையாக இருக்குமாம். இந்த எச்சரிக்கையையும் மீறி, மங்கை ஒருத்தி, மன்னனின் ஆணையால் இரண்டாவது முறையாக அந்த வித்தையை நிகழ்த்தி, உயிர்த்தியாகம் புரியும் வீர வரலாற்றை விளம்புவதே இங்கு நாம் காணும் தனிப்பாடல். பண்டையத் தொண்டை நன்னாட்டின் இருபத்திநான்கு கோட்டங்களில் புழல் கோட்டமும் ஒன்று. அந்தக் கோட்டத்தை அயன்றைச் சடையன் என்னும் சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் தனது நல்லாட்சியின் காரணமாக நாட்டு மக்களது நன்மதிப்பைப் பெற்றவனாக இருந்திருக்க வேண்டும். கலைகளைப் போற்றிக் கலைஞர்களை ஆதரிக்கும் கலைஞனாகவும் விளங்கியதால்தான் அவனுக்காகக் கலைஞர்கள் உயிர்த்தியாகம் புரிவதற்கும் உந்தப் பட்டனர் போலும்! அன்றையக் கழைக் கூத்தினை மக்களோடு மக்களாக மன்னனும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான். கூத்தின் இறுதிக் கட்டமாக விச்சுளிப் பாய்ச்சல் வித்தை. அதில் வித்தகியான இளம்பெண் ஒருத்தி லாவகமாக மூங்கிலில் ஏறிக் கயிற்றில் நின்றாள். அந்த நிகழ்ச்சியை அரசனும் காணவிருந்ததால், அவள் மனம் ஆனந்தக் கடலில் மிதந்தது. கயிற்றில் நின்ற அந்தக் கன்னி மயில், காவலன் அமர்ந்திருந்த திக்கினை நோட்டம் விட்டாள். அடுத்த கணம் அவள் நெஞ்சில் ஏமாற்றம்! காரணம், அபூர்வமான கூத்து தொடங்கப்போகும் அந்த நேரத்தில், அரசன் சடையனின் கவனம் அவனுக்கு எதிரே வீற்றிருக்கும் ஒரு கட்டழகியின் மேலல்லவா படர்ந்து கிடக்கிறது? விண்ட மனத்தைத் தேற்றியவள், வித்தையை ஆடி முடித்து விட்டு மண்ணுக்கு வந்தாள். மக்களின் மகிழ்ச்சி ஆரவாரம் அவள் மனத்தைத் தொடவில்லை. பார்த்துக் களிக்க வேண்டிய வேந்தன் பாராமுகமாக இருந்து விட்டதை எண்ணிப் புலம்பித் தவித்தாள். அதே வேளை அரசனின் ஆணையைத் தாங்கிய ஓலையொன்று அவளிடம் தரப்பட்டது. "சற்று முன்னர் நீ நிகழ்த்திய விச்சுளிப் பாய்ச்சல் வித்தையைக் காணத் தவறிவிட்டதால், மீண்டும் ஆடிக் காட்டவும்!' செய்தி அறிந்தவளின் சிந்தையில் கொந்தளிப்பு. இரண்டாம் முறை செய்து காட்டினால் உயிருக்கு இறுதியென்னும் ஆசானின் எச்சரிக்கை மற்றொரு புறம் அச்சுறுத்தியது. அவள் மனதுக்குள் உணர்வுகளின் போராட்டம் ஓய்ந்த பாடில்லை. ஆட, மறுப்பது அரசாணையை அவமதிக்கும் குற்றம் மட்டுமல்ல; கலைநேயன் ஒருவனது ஆவலை நிராகரிப்பது, ஆடல் கலைஞருக்கு அறமல்ல என்ற கோணத்தில் சிந்திக்கலானாள். அரசனிடம் அவள் வைத்திருந்த ராஜ விசுவாசம், உயிருக்கு இறுதி என்னும் உண்மையை உரைக்க விடாமல் தடுத்தது. ஆடும் முடிவுடன் கழையைத் தொற்றிக் கயிற்றை அடைந்தாள். தான் ஆடி முடித்து ஆவியை விட்ட பின்னராவது அந்த வித்தையின் அருமையை அரசன் அறிய வேண்டும் என்று அவள் நினைத்தாள் போலும். மன்னன் சடையனால் தனக்கு நேர்ந்த இந்த நிலை, இனியொரு கலைஞனுக்கு ஏற்படலாகாது என்று முடிவு செய்தாள். அரசனுக்குத் தனது மனக்கருத்தினை அறிவிக்கும் மார்க்கத்தினை அவள் சிந்தித்தாள். அப்போது வானில் தன்னருகே பறந்து செல்லும் பறவைகளைப் பார்த்துப் பின்வருமாறு பேசலானாள். ""பறவைகளே, நீங்கள் புழற்கோட்டம் வழியாகப் போவீரானால், அதன் அரசன் அயன்றைச் சடையனிடம் சொல்ல வேண்டிய செய்தி ஒன்றுண்டு என்று ஆரம்பித்து, நடந்தவைகளைக் கூறி, அவனது ஆணையால் நான் உயிரிழக்கப் போகிறேன். உடலை விட்டு நீங்கும் எனது உயிர், அவனது பாதங்களைப் பணிந்து வணங்கும் என்பதை அவனிடம் மறவாமல் சொல்லுங்கள்'' என்றாள். வேந்தனுக்குத் தன் மனக்கருத்தினை வினயமாக வெளியிடும் அந்தக் கூத்தரசியின் "புள் விடு தூது' என்னும் துறைசார்ந்த பின்வரும் இரண்டு தனிப்பாடல்கள் (1,2) நமக்குக் கிடைக்கின்றன. ""மாகுன் றனையபொன் தோளான் வழுதிமன் வான்க ரும்பின் பாகொன்று சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன் பையப் பையப் போகின்ற புள்ளினங் காள்புழல் கோட்டம் புகுவ துண்டேல் சாகின்ற னள்என்று சொல்லீர் அயன்றைச் சடைய னுக்கே'' ""விண்தொடு கழைமீ மிசையோர் விச்சுளிப் பாயும் வித்தை கண்கொடு காணான் வேற்றுக் கணிகைபால் கருத்தைப் போக்கி எண்கெட இருகால் ஈண்டே இயற்றுமோர் ஏவல் ஏற்றுப் பெண்விடும் ஆவி அன்னோன் பெருங்கழல் வாழ்த்திற் றென்னீர்'' இப்பாடல்களைக் கண்ணுறுவோர், "காவலன் ஒருவனின் மனநிறைவுக்காகக் கலைமங்கை ஒருத்தியின் உயிர்த்தியாகம்' என்னும் கருவினை வைத்துத் தீட்டப்பட்ட ஒரு கற்பனைச் சித்திரம் என்ற முடிவினுக்கு வரலாம். ஆயினும் இப்பாடல்களால் புலனாகும் கலை மற்றும் பண்பாடு குறித்த குறிப்புகளை வெறும் புனைவு என்று புறக்கணிக்க இயலாது.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்