Last Updated :
இதோ இன்னொரு விடியல், இன்னொரு காலைப்பொழுது, என் வாழ்க்கையின் குத்தகை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இஹழ்ல்ங்க்ண்ங்ம் என்பார்கள் லத்தீன் மொழியில். இதன் பொருளாவது, இன்றைய தினத்தைக் கெட்டியாக (உடும்புப் பிடியாக) பிடித்துக்கொள் என்பதாகும். ""உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு'' என்றார் வள்ளுவர். அப்படித்தான் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறக்கிறோம். இதில் வருடம் ஒருமுறை பிறந்தநாள் கொண்டாட என்ன இருக்கிறது? இன்னும் அடுத்த சில நிமிடங்களில் நம் வாழ்க்கையில் என்ன நிகழப்போகிறது என்பதைக் கூட நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாத நிலை. ""என் ஆயுள் காலம் எவ்வளவு எஞ்சியுள்ளது எனத் தெரியாத நிலையில் இன்று நான் உயிருடன் இருப்பதே மாபெரும் பரிசு. பணமோ, புகழோ வேண்டாம். இவை எல்லாமும் மற்றும் எதுவுமே உயிர்க்கு சமமில்லை'' என்கிறார் வள்ளலார் பெருமான். இதையெல்லாம் ஏன் இங்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். இன்றைக்கு பலர் பல லட்சங்களையும் கோடிகளையும் வாரி இறைத்து தங்களுக்குத் தாங்களே புகழ் தேடிக்கொள்கின்றனர். அப்படித் தேடிக்கொள்ளும் புகழில் ஒன்றுதான் வருடத்துக்கு ஒரு முறை கொண்டாடும் "பிறந்தநாள்' விழா. மேல்தட்டு மக்கள் கோடிகளையும் லட்சங்களையும் "பிறந்தநாள்' என்ற பெயரில் விரயம் செய்கிறார்கள் என்றால், நடுத்தர மக்கள் ஆயிரங்களை விரயம் செய்கின்றனர். ஆனால் கிராமப் புறங்களில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் வர்க்கத்தினரிடம் சென்று, ""உங்கள் பிறந்த தினம் எப்போது?'' என்று கேட்டால், ""யாருக்குத் தெரியும்? என்னோட ஆத்தா அதைச் சொல்லாமலேயே போயிட்டா'' என்று அப்பாவித்தனமாகச் சொல்வதை இன்றும் கேட்க முடிகிறது. இப்படி தன்னுடைய பிறந்த நாள், நட்சத்திரம், மாதம், வருடம் கூடத் தெரியாமல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் அவர்களை விட நாம் "பிறந்தநாள்' கொண்டாடி, எந்த விதத்தில் உயர்ந்து விட்டோம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர், வள்ளுவர், புத்தர், கம்பர், பாரதி இப்படிப் பல மேதைகளும் ஞானிகளும் அறிஞர்களும் தங்களது பிறந்தநாளைக் கொண்டாடியா புகழ் பெற்றார்கள்? அவர்கள் பெற்ற புகழ் இறவாப் புகழல்லவா? தம்முடைய பிறந்தநாளை பிறர் கொண்டாட வாழ்ந்தவரே, வாழ்பவரே உண்மையில் இறவாப் புகழின் உச்சியில் வைத்து எண்ணப்படுபவர். தனக்குத் தானே பிறந்தநாள் கொண்டாடும் அவலம் மேலை நாடுகளைப் போல இப்போது தமிழரின் பண்பாடு, கலாசாரம், மரபு கூறும் தமிழகத்திலும் தலைவிரித்து ஆடுகிறது. இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், தீபத்தை ஏற்றி வைத்து, வாயால் ஊதி அணைத்து, ஒளிமயமான பிறந்த தினத்தை இருள்மயமாக்கி சூன்யமாக்குவது. பிறந்த நாளன்று சிலர் கோயிலுக்குச் சென்று தங்களது பெயரில் அர்ச்சனை செய்கின்றனர், சிலர் ரத்த தானம் செய்கின்றனர், வேறு சிலர் அன்னதானம் செய்கின்றனர். இவைகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், பிறந்தநாள் கொண்டாடுவதுதான் நாகரிகம் என்பதுபோல, தங்களது இல்லங்களில் கேக் வைத்து தீபத்தை ஏற்றி, வாயால் ஊதி அணைத்துக் கொண்டாடும் அபத்தமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அன்றைக்கு ஒரு நாள் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். நல்லதை நினைத்து, நல்லதைச் செய்பவருக்கு எல்லா நாளும் மகிழ்வான நாள்தான். ஈனப் பிறவியான எலி ஒன்று, அறியாமல் ஒரு தீபத்தை தனது மூக்கினால் தூண்டிவிட்டதன் பயனாய், அது அடுத்த பிறவியில் மிகப்பெரிய அரசனான மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தது என்பதை புராணங்கள் கூறுகின்றன. ""ஒரு தீபத்தை ஏற்றினால் எத்தனை புண்ணியமோ, அதுபோல ஒரு தீபத்தை, அதுவும் வாயால் ஊதி அணைக்க ஏழு தலைமுறைக்குப் பாவம் தொடரும்'' என்றும் வேதங்கள் கூறுகின்றன. அப்படி விளக்கை அமர்த்த வேண்டுமானால், பசும்பால் கொண்டோ, பூவைக் கொண்டோதான் அமர்த்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன. பிறந்த தினம் எதற்காகக் கொண்டாட வேண்டும்? அது ஒரு தாயின் மறுபிறவிக்கான வேதனை இல்லையா? அவள் ஒரு மகவைப் பெற்றெடுக்க மறுபிறவி எடுத்த நாளல்லவா? அது அவள் பிறந்த நாள்தானே. அன்று அவளை வணங்கி அவள் ஆசியைப் பெற்று அவளைத் தானே போற்ற வேண்டும்? இதைவிடுத்து நாமே நமக்குப் பிறந்தநாள் கொண்டாடிக் கொள்கிறோமே இது என்ன அபத்தம்? நம்மைப் பெற்றெடுப்பதற்காக தாய் அனுபவித்த மரண வேதனையை இப்படியா மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது? தாய் நமக்காக மறுபிறவி எடுத்த நாளில் பல தீபங்களை அணைத்து கொண்டாடி மகிழ்வது எத்தனை பெரிய கொடுமை. அக்னியை இவ்விதம் வாயினால் ஊதி அணைப்பது முக்கியமான மரணச் சடங்குகளில் ஒன்றாகும். மன நிறைவுடன் கொண்டாட வேண்டிய பிறந்த நாளில் மரணச் சடங்கையா செய்வது? இந்தப் பிறவி, தாய்க்கு மட்டுமல்ல; இனி அடுத்தடுத்த பிறவி வாய்த்தால் அந்தத் தாய்க்கும் நான் மரண வேதனையைத் தந்துவிடக்கூடாது; அதனால் எனக்குப் பிறவியே வேண்டாம் என்கிறார் பட்டினத்தடிகள் ஒரு பாடலில். ""மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால் சலித்தேன்; வேதாவும் கை சலித்து விட்டானே - நாதா இருப்பையூர் வாழ்சிவனே இன்னம்ஓர் அன்னைக் கருப்பைஊர் வாராமல் கா'' நான் பிறந்த நாளே கொண்டாட மாட்டேன்; எனக்குப் பிறந்தநாள் யாரும் கொண்டாட வேண்டாம் என்று சொல்லியும் எழுதியும் மேடையில் முழங்கியும் வருபவர்கள்தான் ஆண்டு தவறாமல் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர் என்ற வேதனையைவிட, தீபத்தை அணைத்துக் கொண்டாடுகின்றனர் என்பது வேதனையிலும் வேதனை.
By marimuthu
6/26/2009 4:23:00 PM
By Vignesh
6/25/2009 11:41:00 AM
By Vignesh
6/25/2009 11:16:00 AM
By Ganapathy
6/13/2009 11:21:00 PM
By somasundaram
6/13/2009 9:27:00 PM
By jani
6/13/2009 2:33:00 PM
By
r saravanan 6/13/2009 11:26:00 A