அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தாய்ப்பாசம். மனித குலத்திலாவது தாய், தான் பெற்றெடுத்த பிள்ளைகள் தன்னைப் பிற்காலத்தில் காப்பாற்றுவர் எனக் கருதி கூடுதல் அக்கறையுடன் வளர்ப்பதாகக் கொள்ளலாம். ஆனால், ஐந்தறிவு கொண்ட விலங்குகள், பறவை இனங்களில் அந்த எதிர்பார்ப்பே இல்லை. எனவே, அவையிடத்தில்தான் தாய்ப்பாசம் முழுக்க முழுக்க பிரதிபலன் பாராதது என உறுதியாய்ச் சொல்லலாம். கண்ணில் விழுந்த காட்சியை, தான் மட்டும் நினைத்து மகிழாமல் நிலையான கலை மூலம் அதை நிலைபெறச் செய்வோரே கலைஞர்கள். ஒரு வினாடியைத் தன்னுள் பதுக்கிவைத்து, பார்க்கும் நேரமெல்லாம் காண்போரின் நெஞ்சுக்குள் நினைவலைகளை நிரப்புவன புகைப்படங்கள். கவிதை, ஓவியங்கள் போன்ற கலைகளும் அவ்வாறே! படிக்கும்தோறும், பார்க்கும்தோறும் பரவசப்படுத்துவன. அவ்வாறு படிக்கும் போதெல்லாம் பரவசத்தில் ஆழ்த்தும் வகையிலான, புலவரின் கண்பட்ட பொன்னான காட்சிகள் பல "நெடுந்தொகை' எனப்படும் "அகநானூறு' முழுவதும் அழகு செய்கின்றன. அவற்றில், காட்டுப்பூனை தன் குட்டிகளிடம் காட்டும் தாய்ப்பாசத்தையும், பருந்து தன் குஞ்சுகளுக்கு இரை தேடிக் கொணரும் இணையற்ற தாய்ப்பாசத்தையும் எடுத்தியம்புகின்றன இரு பாடல்களின் இடைப்பட்ட சில வரிகள். வனத்தில், சுற்றி முள்வேலி அமைக்கப்பட்ட குடில். முற்றத்தில் மெல்லத் தழுவிச் செல்லும் தென்றலில் புலால் நாறுகிறது. அங்கு, குட்டிகளை ஈன்று சில நாள்களே ஆவதால் மெலிந்து காணப்படும் காட்டுப்பூனை ஒன்று படுத்துக்கிடக்கிறது. அதைச் சுற்றி பூளைப் பூவைப்போல அடர்த்தியான மயிரையுடைய அதன் குட்டிகள் கிடக்கின்றன. அழகிய ஓவியம்போன்ற இக் காட்சியைக் காண்கிறார் புலவர் மதுரை மருதன் இளநாகனார். அடுத்த வினாடி, அவர் மனத்திரையில் முன்னொரு நாள் வானில் கண்ட வண்ணக் காட்சி, அது வன்னக் (அழகான) காட்சியும்கூட. மதியும் அதைச் சூழ்ந்துள்ள விண்மீன்களும் அவரது மனத்திரையில் வந்து செல்கின்றன. ஒரு கணம்தான். புலவர் மனது வனக் காட்சிக்கும், வானக் காட்சிக்கும் முடிச்சுப் போடுகிறது. அந்தக் காட்சி அழியா காவியமாகிறது இப்படி.""ஈர்முள் வேலிப் புலவுநாறு முன்றில் எழுதி அன்ன கொடிபடு வெருகின் பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை மதிசூழ் மீனின் தாய்வழிப் படூஉம்...'' (பா-297)எனத் தொடர்கிறது அப் பாடல்.கொடிபடு வெருகின் அன்பை விளக்கிய பாடலைப் பார்த்தோம். இதோ, பருந்தின் தாயன்பைக் கூறும் பாடல். இலைஇல ஓங்கிய நிலைஉயர் யாஅத்து மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்குக் கல்லுடைக் குறும்பின் வயவர் வில்லிட நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும் கணவிர மாலை இடூஉக்கழிந் தன்ன புண்உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் கண்ணுமிழ் கழுகின் கானம்... (பா-31)வறட்சியின் ஒரு குறியீடாக தீய்ந்துபோன சுற்றுப்புறத்துக்கு இடையே, இலைகள் இல்லாமல் சில கிளைகளுடன் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ள "யாமர'த்தின் (ஒருவகை மரம்) உச்சியில் உள்ள கிளையில் கூடு கட்டிய பருந்து, முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தது.இளங்குஞ்சுகளின் மெல்லிய வாயைப் புண்படுத்தாதவாறு அவற்றுக்கு ஏற்ற மென்மையான உணவுப் பொருளைத் தேடித் தருவதே இப்போது தாய்ப் பருந்தின் தலையாய பணி; அதனால் திசையெலாம் பறந்து திரிகிறது.பாலை வழியே செல்லும் வழிப்போக்கர்களை ஆறலைகள்வர்கள் அம்பால் கொன்றனர். அப் பிணங்களைச் சுற்றி செவ்வரிமாலைகள் இட்டுவைத்தாற்போல ரத்தம் உறைந்துகிடக்கிறது. அருகே வந்து அமர்கிறது தாய்ப் பருந்து. இந்த உடல்களில் எந்த உறுப்பை தனது இளங்குஞ்சுகளுக்கு இன்று உணவாக்கலாம் என உற்றுநோக்குகிறது.உடலின் வெளிப்புறத்தில் தெரியும் உறுப்புகளில் கண்கள்தான் மிகவும் மென்மையானவை. இதை இயற்கை கொடுத்த அறிவின் மூலம் அறிந்துள்ள அப் பருந்து, பிணங்களின் கண்களைக் கொத்திக் கவர்ந்து சென்று தன் குஞ்சுகளின் வாயில் உமிழ்ந்து உண்ணச் செய்கிறது. கண்ணில் பட்டதற்காக கண்ட உணவுப் பொருளையும் கொத்திச் செல்லாமல், கண்ணுக்குக் கண்ணாக வளர்க்கும் தன் குஞ்சுகளுக்கு ஏற்றது "கண்' உணவுதான் என அது எண்ணியதோ என்னவோ? புலவர் மாமூலனாரின் கண்கள் இக் காட்சியை அருந்துகின்றன. மனது அசைபோடுகிறது.
எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment