சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் முனைவர் இரத்தின வேங்கடேசன், "புதுச்சேரித் தமிழ்க் கவிதைகள்' என்கிற அற்புதமான ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிரெஞ்சு ஆட்சியிலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற 1954-ஆம் ஆண்டில் தொடங்கி அடுத்த 40 ஆண்டு காலக் கவிதைகள் இந்த நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பண்டைய தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கியதுதான் வேதபுரி என்று அழைக்கப்பட்ட இன்றைய புதுச்சேரி என்றாலும், அரிக்கமேட்டு அகழ்வாய்வு, இந்தப் பிரதேசம் ஈராயிரம் ஆண்டு இலக்கிய, சரித்திரப் பாரம்பரியத்தை உள்ளடக்கியது என்பதைத் தெளிவாக்குகிறது. அது இந்திய தேசிய விடுதலை இயக்கமாக இருந்தாலும் சரி, தமிழையும் தமிழ் இனத்தையும் முன்னிறுத்தி எழுந்த திராவிட இயக்கமாக இருந்தாலும் சரி, புதுச்சேரியின் பங்களிப்பு கணிசமாகவே இருந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த வீரராகவக் கவி என்பவர் எழுதிய "வில்லைப் புராணம்' என்கிற நூற் பிரதியை முலியேன் வேன்சான் என்கிற பிரெஞ்சு அறிஞர் 1891-ஆம் ஆண்டு பாரீசிலிருந்து "தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாதய்யருக்கு அனுப்பி வைத்தார். 18-ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த புலவர்கள் பற்றிய குறிப்புகள் ஆனந்தரங்கம் பிள்ளையின் தினப்படி சேதிக் குறிப்பில் காணப்படுகின்றன. அன்று முதல் இன்று வரை புதுவையில் வாழ்ந்த புலவர்களையும், கவிஞர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும் முனைவர் வேங்கடேசனால் புதுச்சேரி சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைந்த பிறகு இங்கு வாழ்ந்த கவிஞர்கள் பலரின் படைப்புகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவர்களில் முன்வரிசைக் கவிஞர்களாக முனைவர் வேங்கடேசனால் அங்கீகாரம் பெறுபவர்கள் பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் வாணிதாசன், தமிழ்ஒளி மற்றும் கவிஞர் புதுவைச் சிவம் ஆகியோர் மட்டுமே. கம்பதாசன் என்கிற அற்புதமான கவிஞன் அவரது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாதது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, கம்பதாசனின் திரையுலகத் தொடர்புகள் அவருக்கு இலக்கிய அங்கீகாரம் தரப்படுவதைத் தடுத்ததோ என்னவோ? மதுப் பழக்கத்துக்கு அடிமையானார் என்பதால், தமிழகம் இழந்த ஒரு மிகச் சிறந்த கவிஞர் கம்பதாசன் என்பதை முனைவர் இரத்தின. வேங்கடேசன் குறிப்பிட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? புதுச்சேரிக் கவிஞர்களின் புதுக்கவிதைகள் பற்றி ஆழமாக ஆய்வு நடத்தி இருக்கிறார் முனைவர் வேங்கடேசன். புதுவை நாகி, எ.மு. ராஜன், மலையருவி, அரிமதி தென்னகன், முகம்மது ஆரிப்மியான், சி.எஸ். முருகேசன் போன்ற கவிஞர்களின் புதுக்கவிதைகள் இவரது ஆய்வுக்கு உள்படுகின்றன. ""ஓ! தமிழே! நீ தமிழன் மனத்தில் மட்டும்தான் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளாய் என்று நினைத்தேன். பழைய பேப்பர்காரனின் எடை விலையில் கூடவா?' என்கிற கவிஞர் சி.எஸ். முருகேசனின் கவிதையும், "நிகழ்காலம்' என்கிற கவிஞர் எ.மு. ராஜனின் புதுக் கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளும் சட்டென நம்மைக் கவர்கின்றன. "நிகழ்காலம்' தொகுப்பிலிருந்து ஒரு கவிதை~ ""பேருந்தில் பயணி ஒருவரை முட்டியது முதல் உதவிப் பெட்டி! முகத்தில் காயம். மருந்து போடத் திறந்து பார்த்தாலோ முட்டிய பெட்டிக்குள் மூன்று கட்டு 305 பீடிகள்!'' ****** தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியத்தின் மறைவு என்பது பேரிழப்பு. 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசியல் ஆதாயத்துக்காக அல்லாமல், உண்மையான பற்றுடன் தமிழ்த் தொண்டாற்றிய மூவர் எஸ். வையாபுரிப் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் மற்றும் ரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோர். அவர்களுக்கு அடுத்தபடியாகப் பங்களிப்பு நல்கியவர் யார் என்று கேட்டால், வையாபுரிப் பிள்ளையின் அன்புக்குப் பாத்திரமான மாணக்கராக விளங்கிய "வி.ஐ.எஸ்.' என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட வ.அய். சுப்பிரமணியம்தான். அவர் தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பதவி ஏற்றதும், அவரைப் பேட்டி காணச் சென்ற அனுபவம் எனக்கு உண்டு. ""என்னை எதற்காகப் பேட்டி காண்கிறீர்கள்?'' என்கிற கேள்விக்கு, ""நீங்கள் ஒரு தலைசிறந்த இலக்கிய ஆய்வாளர், அறிஞர் அதனால்தான்'' என்று பதிலளித்தேன். ""இலக்கியத்துக்கும் உங்கள் வார இதழுக்கும் என்ன சம்பந்தம்?'' என்கிற அவரது பதில் கேள்வி என்னை வாயடைக்க வைத்துவிட்டது. காலந் தவறாமை என்பதில் கறாராக இருந்தவர் "ஐயா' வி.ஐ.எஸ். எந்தவிதப் பரிந்துரையும் இல்லாமல், திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இவரை நியமித்தவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இரண்டாவது முறை இவருக்குப் பதவி நீட்டிப்பும் கொடுத்தார். முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க வி.ஐ.எஸ். முன்பே நேரம் கேட்டுப் பெற்றிருந்தார். குறித்த நேரத்துக்கு முன்பே தலைமைச் செயலகத்துக்கு வந்து விட்டிருந்தார் வி.ஐ.எஸ். தான் வந்திருக்கும் செய்தியை உதவியாளரிடம் தெரிவித்து விட்டார். தனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து 15 நிமிடமாகியும் அவர் அழைக்கப்படவில்லை. வேறு யார் யாரோ முதல்வர் அறைக்குச் செல்வதும் வருவதுமாக இருந்தனர். எதுவும் பேசாமல் எழுந்தார் அன்றைய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரான வி.ஐ.எஸ். நேராக கவர்னர் மாளிகைக்குச் சென்று, தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநர் குரானாவிடம் தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்து விட்டார். தான் எடுத்த முடிவிலிருந்து மாறவும் இல்லை. அதுதான் அவர். ஐயா வி.ஐ.எஸ். பற்றி இன்னொரு செய்தி. அவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அளித்த அறிக்கை ஒன்றில் "திராவிட மொழிகள்' என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சகத்தின் அதிகாரிகளில் ஒருவர் "திராவிட மொழிகள்' என்பதை ஏன் "தென்னிந்திய மொழிகள்' என்று குறிப்பிடக்கூடாது என்று வி.ஐ.எஸ்.க்கு கடிதம் எழுதிக் கேட்டபோது, அவரிடமிருந்து வந்த பதில் என்ன தெரியுமா? ""தங்களுடைய பரிந்துரைக்கு மிக்க நன்றி. முதலில் தாங்கள் இந்தியாவின் தேசிய கீதத்தில் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு, இந்தப் பரிந்துரையைச் செய்தால் பரிசீலிக்க முயல்கிறேன்!'' என்பதுதான் அது. "அடையாளம்' பதிப்பகத்தார் இரண்டு தொகுதிகளாக வ.அய். சுப்பிரமணியத்தின் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். வி.ஐ.எஸ். நேரிலறிந்த தமிழ் அறிஞர் பெருமக்களான "ரசிகமணி' டி.கே.சி., தெ.பொ.மீ., மு. இராகவையங்கார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, தனிநாயகம் அடிகள் போன்றவர்கள் குறித்த பதிவுகளை இந்தத் தொகுப்பில் காணலாம். தமிழ் மொழியின் சரித்திரம் எழுதப்படும்போது, அதில் "ஐயா' வ.அய். சுப்பிரமணியத்தின் பெயர் குறிப்பிடப்பட்டே தீரும்.
எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்! தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது. எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்...
Comments
Post a Comment