Skip to main content

பாட்டுடைத் தலைவர்களாகப் பழங்குடி இனத்தலைவர்கள் – புலவர் கா.கோவிந்தன்

 

பாட்டுடைத் தலைவர்களாகப் பழங்குடி இனத்தலைவர்கள் – புலவர் கா.கோவிந்தன்



(போர்ப்பாடல் மரபுகள் – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி)

பாவாணர்கள், பண்டைக்காலம் தொட்டே, பரிசில் பெறும் நோக்கோடுதான் பாடினார்கள். ஆகவே, அவர்களுடைய பாட்டுடைத் தலைவர்களெல்லாம், பழங்குடி இனத் தலைவர்களே. போர் இத்தலைவர்களால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில நிகழ்ச்சி களின்போது மட்டுமே, ஆற்றல்மிகு அருஞ்செயல் ஆற்றும் வாய்ப்பு, பொதுமக்களுக்கு வாய்க்கும். ஆனால், போரில் ஆற்றும் அருஞ்செயல்களுக்கான பெருமையெல்லாம், பொதுவாகப் போர்ப்படைத் தலைவர்களையே சென்று சேரும். ஏழையின் காதலைப் பாடினால் பரிசு கிட்டாது. ஆகவே காதற் பாக்களின் பாட்டுடைத் தலைவர்களும் அரசர்களே. அவ்வகைப்பாட்டுடைத் தலைவர்களும் அவர் வழிவந்தவர் களும், அவர்கள் வாழும் நிலத்தோடு தொடர்புடைய சொல்லால் பெயரிடப்பட்டனர். “திணைகளுக்குரிய பழங்குடித் தலைவர்களின் பெயர்கள், பெயர் அதாவது : பண்பு, வினை, அதாவது செயல் ஆகிய இரண்டை அடிப்படையாகக் கொண்டு வருவனவாம், என்றும், ஆயர், வேட்டுவர் என்ற, திணைவாழ் மக்களுக்குரிய பெயர்கள், அத்திணைவாழ் மக்களின் தலைவர்களுக்கும் பொருந்தும்” என்றும் ஏனைய நிலங்களில் வாழும் மக்களைக் குறிக்க வரும் திணைப் பெயர்களை ஆராய்ந்து காணின், அவையும் இவை போன்றனவே. அவை, அத்திணை மக்களின் தலைவர்க்கும் பொருந்தும் என்றெல்லாம் கூறுகிறார் தொல்காப்பியனார்.

பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய

திணைதொறும் மரீஇய திணைநிலப் பெயரே”

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்

ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே”

ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை

ஆனா வகைய திணைநிலப் பெயரே”

(தொல். அகத்திணை இயல் – 20,21,22)

பழங்குடி மக்களின் இனப்பெயர்களாக இருந்த அப்பெயர்களெல்லாம், இப்போது, சாதிப் பெயர்களாகி விட்டன, உ-ம். குறவர், பரதவர், இடையர், வெள்ளாளர். குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியிலேயே வாழ்ந்து, அப்பழங்குடியினரிடையே இயற்கைச் சூழல், விதித்துவிட்ட தொழில்களுக்கே உரிய பழக்க வழக்கங்களை மேற் கொண்டவரிடையே, தங்கள் தங்கள் இனத்தவர்க்குள்ளாகவே திருமண உறவு கொள்ளும் முறை, இடம் பெற்று விடுவது இயல்பே. இவ்வகையான உறவுக்கட்டுப்பாடல்லாமல், பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்கள் பால், இவ்வினப் பெண்டிர் காட்டும் பற்றுமே, பழங்குடி இனம் பிற்காலத்தே சாதியாக மாறியதற்குக் காரணமாம். பழங்குடி இனத்தவர் தலைவன் அல்லது அரசனின் செல்வாக்கும், பழங்குடியினர் பழக்க வழக்கங்களை அழியா நிலைபேறுடையதாக ஆக்கத் துணை நின்றது. ஆட்சிமுறை அறிவு, வளர்ந்திருந்தது, அல்லது நூல்வழியிலோ, நடைமுறை யிலோ, ஒருவகை ஆட்சிமுறை பின்பற்றப்பட்டது என்பதை உணர்த்த, பண்டைத் தமிழ்ப்பாக்களிலோ, தொல்காப்பியப் பொருளதிகாரத்திலோ எதுவும் இல்லையாகவே, பழங்குடித் தலைவனின் அரசுரிமை, நாகரீக வளர்ச்சி பெறாக் காட்டுத்தன் இயல்பினதாகும்.

பல்வேறு நிலங்களுக்கும் உரிய தெய்வங்கள் அந்நிலங்களுக்கு உரிய கருப்பொருள்களில், முதல்வனவாகக் கூறப்படுகின்றன. திறனாய்வுக்காக, அவை, உடனடியாக எடுத்துக் கொள்ளப்படும். அவை தவிர்த்த ஏனைய கருப்பொருள்கள், அந்நிலம் ஒவ்வொன்றிற்கும், அந்நிலம் பற்றிய பாக்களுக்கும் உரியனவாய், உணவுப் பொருள்கள், மாவினங்கள், மரவினங்கள், பறவைகள், பறைகள், தொழில்கள், யாழ்கள் முதலியனவாம்.

தெய்வம், உணாவே, மா,மரம்,புள், பறை,

செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப.

– தொல்காப்பியம் – பொருளதிகாரம் – 18.

அக்கருப்பொருள்களை வரிசைப்படுத்திக் காண்பது, பழந்தமிழ்ப்புலவர்கள், எத்துணை நுண்ணிய நோக்கர்கள், இயற்கையோடு உண்மையான உறவு கொண்டிருப்பதில் எத்துணை ஆர்வமுடையவர்கள் என்பதைக் காட்டுகிறது. முல்லைக்கு உரிய உணவு, வரகும், சாமையும் அவரையும் மாவினம்: மானும், முயலும், மரம் : கொன்றையும், குருந்தும். பறவை ; காட்டுக் கோழியும், கெளதாரியும். தொழில் : நிரை மேயத்தலும், வரகு, சாமை திரட்டலும். பொழுதுபோக்கு : ஏறுதழுவல். மலர்; இந்நிலத்துக்குத் தனிப்பெயர் தந்த முல்லையும், பிடவும், தளவும் தோன்றியும், நீர்: காட்டாறு.

குறிஞ்சிக்குப் பொருந்தும் உணவு: ஐவனம் எனப்படும் மலை நெல்லும், மூங்கில் அரிசியும், தினையும் . மாவினம் : புலியும், யானையும், கரடியும், காட்டுப்பன்றியும். மரம்: அகிலும், ஆரமும் தேக்கும், திமிசும், வேங்கையும். பறவை : கிளியும் மயிலும், தொழில் : தேன் அழித்தலும், தினை விளைத்தலும், கிளிகடிதலும், வேட்டையாடலும். மலர்கள்: குறிஞ்சியும், காந்தளும், சுனைக் குவளையும். நீர்: அருவி நீரும் சுனை நீரும். மருதத்துக்குரிய உணவு: செந்நெல்லும், வெண்ணெல்லும். மாவினம்: எருமையும் நீர் நாயும். மரம்: மருதமும், காஞ்சியும், வஞ்சிக் கொடியும். பறவை: தாராவும் நீர்க்கோழியும், அன்னமும், அல்லிசைப் புள்ளும். தொழில் : நடுதலும், களைகட்டலும், அரிதலும் கடாவிடுதலும். மலர் : தாமரையும் கழுநீரும். நீர்: ஆற்று நீரும், கிணற்று நீரும், குளத்து நீரும்.

நெய்தல் திணைக்குரிய உணவு உப்பு, மீன் விற்றுப் பெற்ற பண்டங்கள். மாவினம்: உப்பு மூட்டை சுமக்கும் பொதிமாடு.. மரம் : புன்னையும் ஞாழலும், கண்டலும். பறவை : கடற்காக்கை. தொழில் : மீன் பிடித்தலும், உப்பு விளைத்தலும், அவற்றை விற்றலும். மலர்: கைதையும், நெய்தலும். நீர்: மணற்கிணறும், உவர்க்குழியும்.

பாலைக்குப் பொருந்தும் உணவு : ஆலனைத்தும், சூறையாடியும் கொண்ட பொருள்கள் மாவினம்: வலுவிழந்த யானையும், புலியும், செந்நாயும். மரம்: வற்றிய இலுப்பை , ஓமை, உழிஞை, ஞெமை, பாலை கள்ளி தாழை முதலியன. பறவை : கழுகும், பருந்தும், புறாவும். தொழில் : ஆறலைத்தலும், சூறைகோடலும். மலர்கள்: மரா, குரா, பாதிரி ஆகியவை நீர்: அறுநீர்க்கூவலும் சுனையும். இப்பொருள் களும், தொழில்களும், அவ்வவற்றின் திணைகளுக்குரிய பாக்களில் இடம் பெற்றிருப்பதற்கான எடுத்துக்காட்டுகள், அடுத்துவரும் பல அதிகாரங்களில், மேற்கோள்களாகக் கொடுக்கப்படும் செய்யுட்களில் காணலாம்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்