அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 56-58 – சமூகம்
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 53-55-தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
56. மூத்த மாப்பிள்ளை
ஒரு சமயம் நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவர் தன் அருகில் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “இவர்தான் எங்கள் வீட்டு முதல் மாப்பிள்ளை. பெரிய மாப்பிள்ளையும் கூட. இவர் மிகவும் நல்லவர். ஏனெனில் எங்கள் குடும்பத்துக்குப் பெரிய உதவி செய்துள்ளார். இதற்காக எங்கள் குடும்பமே இவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது” என்று முகமலர்ச்சியுடன் கூறினார்.
நான் வியப்படைந்து, அப்படிப்பட்ட உதவி இவர் என்ன செய்தார்?” என்று வினவினேன்.
அவர் மிக அமைதியாகச் சொன்னார். “இவருக்குப் பெண் கொடுத்த பின்புதான், இனிமேல் எவருக்கும் பெண் கொடுத்தால் நன்கு ஆலோசித்து கவனித்துப் பெண் கொடுக்க வேண்டும் என்ற அனுபவமே எங்களுக்கு உண்டானது. அது இவர் எங்களுக்குச் செய்த மிகப் பெரிய உதவியல்லவா?” என்றார்.
நான் இடிந்துபோய் உட்கார்ந்திருந்தேன். என்னத்தைச் சொல்ல?
————–
57. நீதிபதியின் மகன்
சென்னை உயர்நீதி மன்றத்தில் பல ஆண்டு பணி யாற்றிய நீதிபதி ஒருவர்க்கு, ஒரே மகன்தான் துணை. அவனை நல்லமுறையில் வளர்த்துப் பெரிய ஆளாக்க எண்ணினார்.
தானே சமையல் செய்து, மிக எளிமையாகக் குடும்பம் நடத்தி, வேலைக்கும் சென்று வந்ததால், மகனுடைய படிப்பில் தனிக்கவனம் செலுத்த அவரால் முடியவில்லை. அவனோ ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லாமல் கூடாநட்புக் கொண்டு, நெறிதவறிய செயல்களில் ஈடுபட்டு, உல்லாசமாக வாழ்ந்துவந்தான். இதை அறிந்த நீதிபதி, மிகவும் அதிர்ச்சியடைந்து, தன்னைத்தானே வெறுத்து மனம் சலித்தார்.
பையன் வாலிபன் ஆனான். அவனுடைய தேவைகளுக்கு நிறையப் பணம் வேண்டியிருந்தது. ஆகவே, அவரை அதட்டியும், மிரட்டியும் பணம் பறித்து வந்தான். இதையெல்லாம் எண்ணி நாள் முழுவதும் துன்பப்பட்டார் நீதிபதி. மனம் வருந்தித் தன் உறவினர் சிலரை விட்டு மகனுக்குப் புத்தி புகட்டச் செய்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை.
ஒருநாள் இரவு மகன் தந்தையை அணுகிப் பணம் கேட்டபோது, அவர் அவனைத் தன் அருகில் அன்போடு அழைத்து, மிகநெருக்கமாக அமர்ந்து, “தம்பி! என் தந்தை ஒரு புரோகிதர். பரம்பரைச் சொத்து எதுவும் கிடையாது. சாப்பாட்டிற்கே கடினம். புரோகிதம் பண்ணி வந்தால்தான் சாப்பாடு. தெரு விளக்கு வெளிச்சத்தில் தான் நான் படித்தேன். புத்தகங்களை இரவல் வாங்கித் தான் படித்தேன். என் செலவுக்குக் காலணாக்கூட கிடைக் காது. நான் இப்படிக் கடினப்பட்டு வளர்ந்திருக்க, நீ இப்படி, நோட்டு நோட்டாகச் செலவழிக்கிறாயே! இது நியாயமா?” என்று கேட்டார்.
அதற்கு அவன் உடனே எழுந்து, “நீ புரோகிதருடைய மகனாகப் பிறந்தாய்; அதனால் துன்பப்பட்டாய்! நான் நீதிபதியின் மகனாகப் பிறந்திருக்கிறேன். நினைவு இருக்கட்டும்.” என்று கூறிவிட்டு வெளியேறினான். என்ன செய்வார் நீதிபதி?
————-
4. சமூகம்
58. சீர்திருத்தம்
இன்றைக்கு 65 ஆண்டுகட்கு முன்பு, 1919ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு பெரிய கோடீசுவரர் இருந்தார், அவருக்குத் தன்னிடம் எத்தனை கோடி தாலர்கள் இருக்கிறது என்பதே தெரியாது. அவ்வளவு பெரிய செல்வந்தர்.
அவருடைய ஒரே மகன் யுத்தத்தில் இறந்ததைத் தொடர்ந்து, சகோதர பாசத்தால் மகளும், புத்திர சோகத்தால் மனைவியும், அவரை விட்டு மறைந்தனர்.
குடும்பத்தினர் அனைவரையும் இழந்த அவர், தன்னையும் ஒருநாள் சாவு தழுவ வரப்போவதை எண்ணி சிந்திக்கத் தொடங்கினார். உறவினர் என்று சொல்லவும் எவரும் இல்லை. தான் சாவதற்குள் இந்தச் சொத்துகளை நல்ல வழியில் பயன்படுத்தச் செய்து மறைய எண்ணினார்.
இந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியபோது, நண்பர்கள் பலர் கோயில் கட்டவும், மருத்துவமனை, கல்விக் கூடங்கள், அறநிலையங்கள் அமைக்கவும் அவருக்கு ஆலோசனை கூறினர்.
இதைக் கேட்ட செல்வந்தரோ, “இவையெல்லாம் அமெரிக்காவில் இருக்கின்றன.
ஆனால் ‘சமூக சேவை’ என்பதே இங்கு இல்லை. இந்த அமைப்புக்கே என் சொத்துகள் பயன்பட வேண்டும்” என்று கூறினார். சமூகச் சீர்திருத்தத் தொண்டு செய்பவர்களை உண்டாக்கவும், நன்கு பிரச்சாரம் செய்யவும், சொற்பொழிவாளர்கள் தேவை என்றும், அவர்களுக்குப் பெருந்தொகை சம்பளமாகக் கொடுக்கப்படும் என்றும் விளம்பரம் செய்தார். இதற்கு அறிஞர்கள், பேராசிரியர்கள். சொற் பொழிவாளர்கள் ஆகிய பல துறையினரிடமிருந்தும் 832 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.
அப்போது செல்வந்தர் கூறினார், “நான் ஒரு மூடன் அமெரிக்காவில் சீர்த்திருத்தம் இல்லை என்று நினைத்தேன். சமூகத் தொண்டு புரிந்து நம் நாட்டைச் சீர்த் திருத்த 832 பேர் வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் சமூகச் சீர்திருத்தம் என்ன என்பதை நன்கு உணர்ந்தவர்களும், அதை மக்களுக்கு போதிக்கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்கிறீர்கள். ஆகவே,…
“என் பணத்தை இதற்கு வீணாகச் செலவிட விரும்ப வில்லை. தயவு செய்து நீங்கள் 832 பேரும் எவரையும் திருத்த வேண்டியதில்லை. உங்களை நீங்களே திருத்திக் கொண்டால் போதும். நம்நாடு உருப்பட்டுவிடும்.” என்று சொல்லி, விடை கொடுத்து அனுப்பிவிட்டார்.
————-
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Comments
Post a Comment