Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 79 : எழிலியின் கையறுநிலை

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 78 – தொடர்ச்சி)

தருவது தொழிலாக் கொண்டது தமிழகம்

அயன்மொழி பலவும் ஆய்ந்து தெளிந்து

மயலற மொழியும் மாந்தர் பற்பலர்

எம்முடை நாட்டினில் இலங்கிடல் காணுதி!

          எம்மொழி யாயினும் எம்மொழி என்றதை  125

          நம்பும் இயல்பினர் நாங்கள்; இந்நிலை

அறிகதில் ஐய! அமிழ்தெனும் தமிழை

மறந்தும் பிறமொழி மதிக்கும் பெற்றியேம்;

ஆயினும் தமிழை அழிக்கும் கருத்தின்        

          சாயல் காணினும் தரியேம் எதிர்ப்போம்;    130

          மொழியியல் ஆய்வோர் முந்நீர் வணிகர்

எழிலுறுங் கூத்தர் இவ்வகை மாந்தர்

பன்மொழிப் பயிற்சி பாங்குறப் பெறுவர்;

என்தொழில் கூத்தென ஏற்றுளேன் ஆதலின்       

          அயன்மொழி சிற்சில அறிந்துளேன் அன்ப!         135

          உரிமை வாழ்வை உவந்தனர் என்னினப்

பெருமை உணர்ந்த பெரியோர், அதனால்

உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டினர்; ஊட்டத்

தளர்ச்சி நீங்கித் தமிழக மாந்தர்         

          வளர்ச்சி நாடிக் கிளர்ச்சிகள் செய்தனர்;     140

          தமிழர் உயர்வைத் தகைக்கக் கருதிப்

ழியும் பொய்மையும் பகர்தல் நாணா

இழிமதிக் கூட்டம் எம்செயல் கண்டே

அவ்விய நெஞ்சில் அச்சமும் சேர        

          எவ்வகை யேனும் தமிழியல் எழுச்சியைக்   145

—————————————————————

          எம்மொழி – எந்தமொழி, எம்மொழி – எமதுமொழி, தரியேம் – பொறுக்கமாட்டோம், முந்நீர் – கடல், அவ்விய – பொறாமையுற்ற.

++++

          கொல்லும் நோக்கொடு குழுமிய சிற்றினம்

ஒல்லும் வகையாற் பல்வகைப் பழியைச்

சொல்லித் தீர்த்தது சூழ்ச்சிகள் விளைத்தது;

சூழ்ச்சியால் அயன்மொழி ஆட்சியைப் பரப்பிடப்       

          பாழ்ச்செயல் புரிந்தது; பகைமனங் கொண்டெமைக்  150

          குறுமனம் என்று குறைகள் சொற்றது;

பிறமொழி வெறுக்கும் பெற்றியர் என்றது;

உடனிருந் தழிக்கும் நோய்நிகர் மாந்தர்

கொடுமனம் உடையோர் விடுபொய் மொழியை

          நண்ப! மெய்யென நம்பேல்; எம்முயர்          155

          பண்பினை நடுநிலைப் பாங்கினர் ஏத்துவர்’

எனஅக் கூத்தன் எடுத்தியம் பின்னால்;       

தலைவன் மகிழ்வும் வேண்டுகோளும்

          மனமிகக் களித்த பழுவூர்த் தலைவன்

கூத்தன் உரைத்திடும் கொள்கைகள் போற்றி      

          `நாத்துணை யாகிய நாவல! ஈங்கிவண்      160

          காத்துனைப் போற்றிடக் கருதினம்; எம்முழைச்

சின்னாள் வதிந்து சிறியேம் மகிழ

நன்னூல் ஒன்றின் நலமுரைத் தேகுதி!

கூத்தின் திறமெலாம் பார்த்திடும் விழைவினேம்        

          ஆயினும் நின்குழு அனைத்தும் இழந்து       165

          பாய்மரம் துணையாப் பற்றிவந் துற்றனை;

ஆதலின் நன்னூல் அறநூல் ஒன்றினை

ஓதுதி எமக்கு’என உரைத்தன னாகக்

கூத்தன் திருக்குறள் உரைத்தல்

          கூத்தனும் இசைந்து குலவி மகிழ்ந்தனன்;  

          பாத்திறம் காட்டும் பாவலன், நாவலன்,       170

—————————————————————

          சொற்றது – சொல்லியது, எம்முழை – எம்மிடம், பாத்திறம் – பாடல் திறம்.

++

          தீத்திறம் யாவும் தீர்த்திடும் ஆசான்,

உலகம் உய்ந்திட உயர்நிலை எய்திடப்

பலபொருள் பொதிகுறட் பாவினைத் தந்தனன்;

எப்பா லவரும் ஏத்தும்அம் முப்பால்   

          செப்பிய பொருளறம் தப்பா துரைத்து         175

          எஞ்சா துணர்த்திய எழிலறம் அனைத்தும்

நெஞ்சாற் கொண்டனர்; நிறைமொழி மாந்தன்

வள்ளுவன் ஓதிய வாய்மைகள் கண்டனர்; 

          தெள்ளிய தமிழியம் தேர்ந்தனர் அன்பை    180

          உள்ளிய பழுவூர் உறையும் மாந்தர்;

நன்னூல் மொழிந்திடும் நவைதவிர் அறமெலாம்

பன்னூற் கூத்தன் பகர்ந்திடக் கேட்டுக்

கழிமிகு மகிழ்வினர் நிறைபடு நிதியம்      

          அரும்பொருள் பலவுடன் அளித்தனர் போற்றப்   185

          கருங்கடல் கடந்தனன் கலந்தரு துணையால்

தாயகம் கண்டனன் தளிர்த்தனன் மனனே;

வேயனை தோளி மீளுறுங் காதலற்    

          காணலும் நீள்துயர் களைந்தனள் ஆங்கே;  190

          பேணிய கூத்தும் பெரும்பே ரிசையும்

நீணில மாந்தர் நெஞ்சங் களிகொள

மீண்டும் மலர்ந்தே யாண்டும் பரவின;

எழிலிதன் வாழ்வில் எழிலி ஆயினள்;

          தொழுதகும் அந்தத் தூயவள் பாங்கில்         195

          எழுக! இசையின் நுணுக்கம் யாவும்

பழுதற உணர்க! பரப்புக பாரில்!        

          என்றனர் அடிகள் எழுந்தனள் அவளே.          198

—————————————————————

          தமிழியம் – தமிழின் கொள்கை, வேயனை தோளி – எழிலி.    

      ++

(தொடரும்)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்