கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 78 : எழிலியின் கையறுநிலை
ஃஃஃ 19 December 2024 அகரமுதலாக
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 77 – தொடர்ச்சி)
பூங்கொடி
16. எழிலியின் வரலாறறிந்த காதை – தொடர்ச்சி
எழிலியின் கையறுநிலை
`பெயருங் கூத்தன் பெருவளி தன்னால்
உயர்கலம் மூழ்கி உயிர்துறந் தான்’என
உயிர்பிழைத் துய்ந்தோர் வந்தீங் குரைத்த 60
கொடுமொழி செவிப்படக் கொடுவரிப் புலிவாய்ப்
படுதுயர் மானெனப் பதைத்தனள், கதறினள்;
துடித்தனள், துவண்டனள், துடியிடை கண்ணீர்
வடித்தனள், `என்னுடை வாழ்வில் வீசிய
பெரும்புயல் விளைத்த துயரம் பெரிதே! 65
மாலுமி இல்லா மரக்கலம் ஆகிப்
பாழும் இடர்க்கடல் வீழும் தனியேன்
எவ்வணம் உய்குவென்? யாதுநான் செய்குவென்?
கவ்விய இத்துயர் கடப்பது யாங்ஙனம்?
—————————————————————
பெருவளி – புயல், மிடல் – வலிமை, கலம் – மரக்கலம், பகுமரம் – மரத்துண்டு, உண்டியர் – உணவினர், குழீஇ – கூடி, மொழிபெயர் – மொழிமாறிய, கழி – உப்பங்கழி, விளிவிலன் – இறக்காதவன், கொடுவரி – வளைகோடு, கவ்விய – பற்றிய.
++
பிரிவெனும் பெருஞ்சுறா பேழ்வாய் காட்டி 70
விரைவினில் வந்தெனை விழுங்கிடும் அந்தோ!
இசையொலி பரவிட இன்புறுங் காலை
வசையிலா யாழில் வடிநரம் பறுந்ததே!
கூடி மகிழ்ந்த கூத்தும் இசையும்
வாடி வதங்கி வாழ்விழந் தனவே! 75
பண்ணொலி இழந்தது பாடல் அந்தோ!
கண்ணொளி இழந்தது கருவிழி அந்தோ!
கொழுநன் இழந்தேன்! கொழுநன் இழந்தேன்!
உழலும் வாழ்வும் உயிரும் வேண்டேன்!’
எனுமொழி புலம்பி, இனைதுயர் நலியக் 80
கண்படை கொண்டிலள், கருதிலள் உணவைப்
புண்படு நெஞ்சம் பூண்டனள்; அதனால்
பண்ணும் இசையும் பரிவுற் றேங்கக்
கண்ணும் மனமும் கவலை தேங்க;
உயிரும் உடலும் நலிந்து மெலிந்தனள்; 85
வானொலிச் செய்தியும் எழிலியின் களிப்பும்
`ஊர்பெயர்ந் தேகிய உயர்பெருங் கூத்தன்;
சூர்வளி தாக்கத் தொலைகலப் பட்டோன்;
ஊர்திரை உந்த ஒடிமரம் துணையாக்
கல்லா மாந்தர் கடுங்கண் மறவர்
பல்லோர் வாழும் பழுவூர்ப் பாக்கம் 90
சார்ந்துளன்’ என்று சாற்றிய வானொலி
வாய்மொழி கேட்டோர் வந்துடன் புகலத்
தழலில் உருகும் நெஞ்சம் தளிர்த்தனள்,
உயிரும் தளிர்த்தனள், ஊனெலாம் தளிர்த்தனள்,
பயிரை விளைத்தோன் பயனெதிர் நோக்கும் 95
—————————————————————
பேழ்வாய் – திறந்தவாய், கண்படை – உறக்கம், சூர்வளி – புயல், ஊர்திரை – ஊரும் அலை, ஊன் – உடல்.
++
பான்மைய ளாகிப் பண்ணுயர் எழிலி,
வாழ்க்கைத் துணைவன் வரவெதிர் நோக்கி
வீழ்த்திய துயரம் விலகிட இருந்தனள்;
கூத்தன் பழுவூர்த் தலைவனை அடைதல்
அடைகரை சேர்ந்து விழுமகன் றன்னை
மிடைமணற் பரப்பின் இடையினிற் கண்டோர் 100
பழுவூர்த் தலைவன் பக்கலிற் சேர்த்தனர்,
கொழுவிய தலைமகன் கூத்தன் நிலைகண்
டிரங்கிய நெஞ்சினன் இவன்பசி களைவோன்
நறுங்கனி பலவும் நல்கின னாகப்
தலைவன் வியப்பும் வினாவும்
பசியும் தளர்வும் நீங்கியோன் பழுவூர் 105
வதியும் பிறமொழி மாந்தர் தம்முடன்
அவர்மொழி பேசிட, அவ்வூர்த் தலைவன்
உவப்பும் வியப்பும் உற்றன னாகித்
`தவறிலா துரைத்தனை எமது தாய்மொழி!
யாங்ஙனம் உணர்ந்தனை? ஈங்கெமக் குணர்த்துதி! 110
ஆங்கிலம் வடபுலத் தாரிய மொழிகளால்
தீங்குவந் துறுமென நின்னுடைத் தேய
மாந்தர் பலரும் மற்றைய மொழிகளைக்
காந்திய நெஞ்சொடு கனன்று வெறுத்துரை
கூறுவர் என்றே கூறக் கேட்டுளேம்; 115
ஆயினும் நீயோ அழகுற எமது
தாய்மொழி புகன்றனை யாங்ஙனம் உணர்ந்தனை?
ஈங்கெமக் குணர்த்துதி’ என்னலும் உரைப்போன்
தமிழரின் பரந்த மனப்பான்மை
`வருவிருந் தோம்பும் பெருந்திரல் உடையோய்!
வருமொழி தமக்கெலாம் வணங்கி வரவுரை 120
—————————————————————
மிடை – நெருங்கிய, கொழுவிய – வளமிக்க, காந்திய – கொதிக்கும்.
++
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment