ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 1 – புலவர் கா.கோவிந்தன்
(பாட்டுடைத் தலைவர்களாகப் பழங்குடி இனத்தலைவர்கள் – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 11
சமயம்
மனிதன், தொழிற்கருவிகளையும், உணவு சமைக்கும், ஆடை நெய்யும், சொல் வழங்கும் உயிரினம் மட்டுமல்லன், சமய உணர்வு வாய்ந்த உயிரினமும் ஆவான். உயிரினங்கள் அனைத்திலும், மனிதன் ஒருவன்தான், தன்னை அச்சுறுத்தும் உண்மையான அல்லது கற்பனையான இன்னல்களைத் தீர்த்துத் தான் நீண்ட காலமாக, ஆர்வத்தோடு அவாவி நிற்கும் பெரும் பொருளைக் கொடுத்தருளுமாறு எல்லா வற்றுக்கும் மேலான இறைவன் துணையை வழிபாட்டின் மூலம் வேண்டும் அல்லது வற்புறுத்தும் முறையைக் கண்டவன். இச்சமய வழிமுறைகளெல்லாம் சமயச் சார்புடைய மாயமந்திர வழிபாடுகள், சமயங்களுக்கிடையே, உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை காணல், பாராட்டும், காணிக்கை வழங்கலுமாகிய முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மனிதன், கட்டளைகளுக்கு, இயற்கையின் ஆற்றல்களுக்குப் பணியுமாறு வற்புறுத்தும் வழிமுறையாம் மாயாசால அநாகரீக காட்டுமுறை பிற்பட்ட நாகரீக நிலையைச் சார்ந்ததாம். இச்சமயச் சடங்கு முறை என்பது, சமயச் சார்பான விருந்து (இஃது, உண்ணா நோன்பைத் தொடர்தலும் கூடும்) சமயச்சார்பான பாடல் கூட்டாகவும் தனித்தும் சமயச் சார்பான ஆடல்களை உள்ளடக்கியதாம். பிற்காலத்தில், விருந்து, பாடல், ஆடல், நாடகம் ஆகியவை, சமய, நெறியிலிருந்து பறிக்கப்பட்டு, உடனடி இன்ப நுகர்வுக்காக மேற் கொள்ளும் செயல்களாக ஆக்கப்பட்டுவிட்டன
மனித வாழ்க்கை வளர்ச்சியின் தொடக்க காலத்திலிருந்தே, அவன், சில கடவுள் அல்லது கடவுள்களை வணங்கி வந்தான் . என்பதில் ஐயம் இல்லை.
அப்பழங்காலத்தில் குடிப்பெயர்களில் அக்குடிகளுக்கு ” உரிய அடையாளச் சின்னங்களைக் காணவல்ல, இருளில், வன்னியர் போலும், பல்வேறு குழுக்களாக மக்கள் பிரிக்கப் பட்டனர். சமற்கிருத இலக்கியத்தில் வானரர், (குரங்குப் பழங்குடி) கசர் (வெள்ளாட்டுப் பழங்குடி) கருடர் (கருடப்பழங்குடி) மட்சர் (மீன் பழங்குடி) விருட்டிணர் (செம்மறியாட்டுப் பழங்குடி நாகர் (பாம்புப் பழங்குடி ) என்ற அடையாளச் சின்னக் குடிபெயர்களைக் காண்கிறோம். இவர்களில் நாகர்கள், வரலாற்றுக் காலத்தில், வடகிழக்கு, வடமேற்கு, மத்திய, தென்னிந்திய மாநிலங்களில் வாழக் காண்கிறோம். ஆதலின், அவர்கள், பரவலாக வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. நாகவழிபாட்டு முறை பெரும்பாலும், மலைநாட்டுக் குகைவாழ் மக்களிடையே தோன்றியதாகும். குலமரபு காட்டும் அடையாளச் சின்னக் கடவுள்களே! அல்லாமல், மரங்கள், ஆறுகள், மலைகளில் வாழும் கடவுள், காவல் தெய்வங்கள், கிராமத் தேவதைகள், எல்லையம்மன்கள், துயர் தரும் பேய்கள், எண்ணற்ற ஆவிகள், பல்வேறு சிறு தெய்வங்களையும் மக்கள் வழிபட்டனர். இந்தப் பழைய கடவுள் வழிபாட்டு முறைகளில், பெரும்பாலானவை, மக்களில், சமுதாய நிலையில் தாழ்ந்திருப்பவர்களிடையே, தங்களுடைய நாகரிகமற்ற காட்டுமிராண்டிக் கரடுமுரடான நிலையில், இன்றும் இடம் பெற்றுள்ளன. சமுதாயத்தில் மேல்தட்டில் நிற்கும் மக்களும் துன்பக் காலங்களில், பேய், பிசாசு போலும் ஆவிகளின் துணை நாடிச் செல்வதை அடியோடு விட்டு விட்டாரல்லர்.
இவற்றில் ஒருசிலவழிபாட்டு முறைகள், ஒரு படி உயர்ந்த நாகரீக நிலையை உணர்த்தும், உயர்ந்த வழிபாட்டு முறைகளால் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அவ்வகையில், நாகவழிபாடு, முருக வழிபாட்டோடு இணைந்து ஒன்றாகி விட்டது. அம்முருகன் ஆரியர்களின் சுப்பிரமணியனோடு மீண்டும் இரண்டறக் கலந்து ஒன்றாகிவிட்டான், காரணம், பக்தனின் ஊனக் கண்களுக்குச் சுப்பிரமணிய சுவாமி, பாம்பு வடிவிலேயே காட்சி அளிக்கிறான். முருக பக்தன் அவன் துணை வேண்டித் தொழும் போது, பாம்பு தோன்றுவது, அக்கடவுள், அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு விட்டது என்பதே பொருளாம். மர வழிபாட்டுமுறை, சிவவழிபாட்டு முறையோடு கலந்துவிட்டது. இப்போதுள்ள சிவன் கோயில்களில், மிகவும் புகழ்பெற்ற கோயில்களெல்லாம், ஏதோ ஒரு நிலையில், சில மரங்களோடு, நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளன. அதுபோலவே, உடலுக்கு நலம் தரும் துளசி வழிபாடும், விட்ணு வழிபாட்டோடு கலந்துவிட்டது. நாக வழிபாட்டிலிருந்து, சிவன், எண்ணற்ற பாம்பாபரணங்களைப் பெற்றான். விட்ணு, ஆயிரம் தலைகளைக் கொண்ட படுக்கையைப் பெற்றான். புத்தர் தாமே ஒரு நாகர் ஆகிவிட்டார். பல புத்த, செயினக் கடவுள்கள், ஐந்து தலை நாக வடிவினராகி விட்டனர்.
ஆனால் “ஆசமிகம்” எனப்படும், நாகரிக நிலையால் உயர்ந்த இவ்வழிபாட்டு முறைகள் தோன்றுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே, உள்நாட்டுப் பேய்கள், மரம், ஆறு, மலைகளில் குடிகொண்டிருக்கும் ஆவிகளைக் காட்டிலும் உயர்ந்த கடவுள்கள் நாட்டில் தோன்றி வளர்ந்து நின்றன. இக்கடவுள்கள், ஒவ்வொரு நிலப்பகுதியிலும், அவ்வந்நிலங்களின் நில இயல்புகளுக்கு ஏற்ப, தனித்தனியே தோன்றி வளர்ந்தன. மலைநாட்டுத் தெய்வம் செம்மேனிக் கடவுள், அதாவது சேயோன். அவன், புணர்ச்சிக்கு முந்திய தான களவுக்காதல் காவலனாம் முருகன் எனவும் அழைக்கப் பட்டான். அவனை வழிபடுவார், அவனுக்காகப் பலி கொடுத்த ஆட்டின் செங்குருதி கலந்த சோற்று உருண்டைகளை அவனுக்குப் படைத்தனர். அவன் ஒரு வேடுவன். வேல் ஏந்துவான். அதனால், வேலன் என அழைக்கப்பட்டான். அவனை வழிபடும் அருச்சகனாம் பூசாரியும் வேலன் என அழைக்கப்பட்டான். மகளிரிடையே, அவன், காதல் நோயைத் தோற்றுவிப்பான். மகளிர் அம் முருகனால் அலைக்கழிக்கப் படும்போது, வேலன், பெண்களின் காதல் நோய் தீர்க்க, மாயாசால வழிபாட்டு முறைகளை மேற்கொள்வன். வேலன், முருகனோடு கலந்து தெய்வம் வரப்பெற்று அவனோடு உரையாடும் பொழுது, அவனும், தெய்வீக வெறிக்கு உள்ளாகி, வெறியாட்டம் எனப்படும் பேயாட்டம் ஆடுவதும் பாடுவதும் செய்வன். இவ்வெறியாட்டத்தில், மகளிரும் பங்கு கொள்வர். ஆடவர் அல்லது மகளிர் பூசாரிகள், கடவுள் ஏறி, அக்கடவுள் ஆட்சிக் கீழ் இருக்கும் போது ஆடுவதும், பாடுவதும் மட்டும் செய்வதில்லை. இருண்டு போன இறந்த காலத்தைப் படித்துக் .. காட்டுவர். எதிர்காலத்தே வருவது அறிந்து கூறுவர். எந்தப் பேய் எந்த நோயைத் தந்தது என நோய்க் காரணம் கண்டு கூறுவர். உடலையும் உள்ளத்தையும் உடைமையாகக் கொண்டுவிட்ட அனைத்து நோய்களையும் தீர்ப்பர். நோய் தீர்க்கும் முறை, தெய்வத்தன்மை மட்டுமே வாய்ந்தது அன்று, மலைநாடு, நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பெருமளவில் கொண்டது. ஆகவே, வேலன், தேவராட்டிகளின் வெறி யாடல் நிகழ்ச்சி, அம்மூலிகைகளாலும் அரண் செய்யப் பட்டது. ஆகவே, பழங்காலப் பூசாரி , மருத்துவனும் ஆவன். ஆயிரமாயிரம் சமயத் தத்துவங்கள் வளர்ந்து விட்டிருக்கும். இன்றும், பேய்களை வழிபடுவோரும், மருத்துவருமாக இணைந்த தாழ்த்தப்பட்ட இனத்தவராம் குறவர், சமுதாயத்தில் உயர்நிலை பெற்றவரிடையேயும், இலைமறைவு காய்மறைவாகச் சிறந்த வாணிகத்தை நடத்தி வருகின்றனர்.
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Comments
Post a Comment