போர்ப்பாடல் மரபுகள் – புலவர் கா.கோவிந்தன்
(காதற்பாக்களின் இலக்கிய மரபுகள் – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 9
நில இயல்புக்கு ஏற்ப அமையும்
போர்ப்பாடல் மரபுகள்
காதல் அல்லாமல், பாக்களின் மற்றொரு கருப்பொருள் போர். குறிஞ்சி நிலத்தில், போர், வெட்சி எனப்படும் ஆனிரை கவர்தலில் அடங்கியிருந்தது. ஆனிரை கவரப்படையெடுத்துச் செல்வார் வெட்சி மலர்களால் ஆன மாலை அணிந்து கொள்வர் ஆதலின், அப்போர், வெட்சி என அழைக்கப்பட்டது. கவர்ந்து சென்றாரிடமிருந்து ஆனிரைகளை மீட்டுக்கோடல், அது போலும் ஒரு காரணத்தால், கரந்தை எனப் பெயரிடப்பட்டது, அடுத்து இருந்த காட்டு நிலம். தற்காப்புப் போர் நிலையில், இயற்கை முதல்தரமாக அமைந்து அதனால் காவற்காடு என அழைக்கப்பட்டது. வஞ்சி மாலை அணிந்த படைத் தலைவர்கள், காட்டு நிலத்துள் படையெடுத்துச் சென்றனர்; இது வஞ்சித்திணை என அழைக்கப்பட்டது. அரசர்கள், தங்கள் தலைநகர்களை, ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிகளில் அஃதாவது மருதத்தில் நிறுவிய போது, தங்கள் காப்பிற்காகக் கோட்டைகளைக் கட்டினார்கள்; முற்றுகையும், அது தொடர்பான செயல்களும் போர்முறைகளில் ஓர் அங்கமாகி விட்டன. இந்நடவடிக்கைகளின் போது, உழிஞைக்கொடி அணிந்து கொள்ளப்பட்டது. அதனால் அந்நடவடிக்கைகளை விளக்கும் பாடல்கள் உழிஞை என்ற இனத்தின் கீழ் வந்தன. போர்த் தந்திரங்களைப் பேராண்மைகளை மேற்கொள்ள நேரிடும். எதிர் எதிர் நின்று செய்யும் போர்கள், மரங்கள் செறிந்த காட்டு நிலங்களுக்கும், விளை நிலங்களுக்கும் வெகு தொலைவிலான, திறந்த போர்க் களத்திலேயே இயலுமாதலின், நெய்தல் என அழைக்கப்படும் கடற்கரைக்கு அணித்தாக உள்ள அகன்ற சம நிலங்களோடு தொடர்புடையதாகி, இந்நிகழ்ச்சிகளில், தும்பை மாலைகள் அணிந்து கொள்ளப்பட்டமையால், தும்பை என அழைக்கப்பட்டன. இறுதியாகப் பாலை நிலத்தோடு தொடர்புடைய காதலர்களின் பிரிவோடு ஒத்திருப்பது, பாவாணர்கள், வாகை மலர் மாலை அணிந்து கொண்டு, போரின் அவலம் போர்களிலிருந்து விளையும் நாட்டழிவுகளைப் பாடுவேது போலவே, வெற்றிகளையும் பாடும், வாகை ஆகும்.
பல்வேறு வகைப்பட்ட இத்திணைப் பாடல்களெல்லாம் மலர்களால் பெயர் சூட்டப்பட்டுள்ளன என்பது ஈண்டுக் குறிப்பிடல் வேண்டும். ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு நிலத்தின் தனிச் சிறப்பியல்பு வாய்ந்த விளைபொருளாம். இம்மலர்களால் ஆன மாலைகள், காதல் துறையின் அல்லது போர்த் துறையின், விளக்கப்படும் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியின் சின்னமாக அணிந்து கொள்ளப்பட்டன. மலர்கள் போர்க்கள நிகழ்ச்சியின் போது, போர் வீரர்களை இனம் பிரித்து உணர்த்தும் சீரணிகளாக அமைந்தன. பழந்தமிழர்கள், மலர்களில் பேரின்பம் கண்டனர்; தங்களைத் தங்கள் தொழிற் கருவிகளை, ஏனைய உடமைகளைத் தங்கள் வீடுகளைப் பந்தல்களை, நன்மிகப் பழங்காலம் தொட்டே, இலைகளாலும், மலர்களாலும் அழகு செய்தனர்.
கொடிகள், இலைகள், மலர்கள், விலங்குகள் போலும் வடிவங்களைச் செதுக்குவதன் மூலம், தங்களுடைய தொழிற்கருவிகள் வீடுகள், தட்டுமுட்டுப் பொருள்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை அழகு செய்ததற்கும், இயற்கைப் பொருள்கள் மீது கொண்ட அதே காதல் தான் காரணமாம். இன்றைய நாட்களில்தான், தமிழர் வீடுகளில், அழகிழந்த அணிநலன் இழந்த, விசைப் பொறிகள் வனைந்து குவிக்கும் பண்டங்கள், அணி அழகுமிக்க பண்டைய பண்டங்களுக்கு மாற்றாக இடம் பெற்றன. இன்றைய நவநாகரீக வாழ்க்கையை மேற்கொண்டு விட்டோர் உள்ளங்களிலிருந்து, கவின் கலை யுணர்வைத் துடைத்து அழித்து விடுகின்றன. தங்கள் பாடல்களில் போலவே, தங்கள் வாழ்க்கையிலும், தங்கள் எண்ணங்களை, அடையாள வடிவில் வெளிப்பட உணர்த் தும், மலர்களின் மொழி ஒன்றைத் தமிழர் வளர்த்தனர்.
இலக்கிய மரபுகளின் முறையான வளர்ச்சி
பாக்களின் இவைபோலும் பல்வேறு மரபுகளெல்லாம், தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் விளக்கியவாறே, (இனி – வெளிவரவிருக்கும், பண்டைத் தமிழர்கள் (Ancient Tamils ) என்ற என் நூலில் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. ஆகவே அவ்விலக்கண நூலில் விளக்கிக் கூறப்பட்டிருக்கும் இலக்கிய , மரபுகள், கீழே குறிப்பிட்டிருக்கும் கால கட்ட வரிசை யில்தான் வளர்ந்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுவது ஒன்றையே ஈண்டுக் கருத்தில் கொண்டுள்ளேன்.
1. மனித நாகரீகத்தின் ஐந்து படிநிலைகளும், இயற்கை நிலப்பகுதிகள் ஐந்திலும் உருப்பெற்று மெல்ல மெல்ல வளர்ந்த காலகட்டம். (இஃது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எண்ணப்பட வேண்டிய மிக நீண்ட காலக் கட்டமாதல் வேண்டும்.)
2. பாவாணர்கள், ஒவ்வொரு நிலப்பகுதியிலும், பாடத் தொடங்கி அந்நிலப்பகுதியில் மக்கள் வாழ்க்கை நிலைகள் அந்நிலங்களின் மாவடை, மரவடைகள், சுற்றுக்சூழலுக்கு எதிர் ஏற்று வளர்ந்த பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தங்கள் பாக்களில் தங்களை அறியாதே எதிர் ஒலிக்கும் காலக்கட்டம்.
3. ஒரு பாட்டு, ஐவகை நிலப்பகுதியில் எந்நிலப்பகுதியில் பாடப்பட்டிருந்தாலும், அது குறிப்பிட்ட ஓர் ஒழுக்கம் பற்றிக் கூறுவதாயின், அதை அந்நிகழ்ச்சிக்கு உரிய திணைக்கே உரியதாக ஆக்கச் செய்யும், மாற்றுதற்கியலா இலக்கிய மரபுகளாகப் பாவணர்களின் பாடற்பணிகள் உறுதிப்படுத்தப்பட்ட காலக்கட்டம். இயற்கை நிலப்பிரிவு, மற்றும் அந்நிலத்து நிகழ்ச்சிகளைக் கூறும், ஒருவகைப் பாடல் என்ற இருபொருள்களை ஒரு நிலையில் இயல்பாகக் குறித்த, திணை என்ற அச்சொல், இப்போது, இலக்கிய மரபாக, ஐந்து இயற்கை நிலப்பிரிவுகளில், ஒரு – நிலப்பிரிவோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.
இம் மரபுகளெல்லாம் தொல்காப்பியனார் இயற்றிய தமிழ் இலக்கணமாம். தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும், கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்படாத காலத்தில் இயற்றப்பட்டு, இன்றுவரை அழியாமல் இருக்கும் மிகப் பழைய தமிழ் நூலாம் இந்நூல், செய்யுள் இலக்கணம் பற்றிய, இப்போது ஒன்றுகூடக் கிடைக்காத, பழைய விதிமுறைகள் பலவற்றைச் சுட்டுகிறது. அவ்விலக்கணம் தோன்றுவதற்கு அடிப்படையாய் அமைந்த, பெரும்பகுதி அல்லது முழுவதும் அழிந்துபோன தமிழ்ச் செய்யுள் இலக்கியப் பெருந்தொகுதி பண்டு இருந்ததை ஊகிக்கச் செய்கிறது.
காதல், போர் ஆகிய நெறிகளில் நிகழும், பாடல் புனைவதற்கு உரிய கருப்பொருள்களாகும், நூற்றுக்கணக் கான நிகழ்ச்சிகளைத் தொல்காப்பியனார் விளக்கியுள்ளார்.
இலக்கண ஆசிரியன், காதல், போர் பற்றிய ஒழுக்கங்களில், நடைபெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து முன்னதாகவே ஆராய்ந்து வகைப்படுத்தி இலக்கணம் – வகுத்தான். அதன்பின், பாவாணர்கள், அவ்விலக்கண ஆசிரியன் ஆராய்ந்து வகைப்படுத்திய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்று குறித்தும் பாக்களைப் புனைந்தனர் எனில், எள்ளி நகையாட்டிற்குரியது. ஆகவே, இந்நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்தும், தம் காலத்திற்கும் முன் வாழ்ந்த பாவாணர்களால் பாடப்பெற்ற ஒரு சில பாக்களையாவது, தொல்காப்பியனார், தம் உள்ளத்தில் கொண்டிருக்க வேண்டும்.
அழிந்துபடாமல் இப்போது கிடைக்கும் பழம்பாக்கள் அனைத்துமே, தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திற்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தனவே. தொல்காப்பிய உரையாசிரியர்கள், தொல்காப்பிய விதிகள் பலவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைப், பிற்காலத்தைச் சேர்ந்த இப்பாக்களில் காணல் அரிது என்பதை உணர்கின்றனர். சில இடங்களில், அவர்கள் காட்டும் பொருள் விளக்க மேற்கோள்கள் பொருத்தமற்றவை ஆகின்றன; பல நேரங்களில், தொல்காப்பிய விதிகளுக்கான மேற்கோள்களைக் கண்டுகொள்ளுமாறு படிப்பவர்க்கே விட்டு விடுகின்றனர். கூறிய இவ்வெல்லாவற்றிலுமிருந்து தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர், மிகப் பரந்த தமிழ் இலக்கியம் இயற்றப்பட்டது என்பது தெளிவாகிறது. இவ்விலக்கியம் வளர்ந்த காலம், ஐந்நூறு ஆண்டுகள் என்பது, கூட்டல், குறைத்தல் இல்லா, ஓர் அளவான மதிப்பீடாம்.
இவ்விலக்கியம், அதனுடைய, அழிக்கலாகா, உரம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டுவிட்ட பாவின மரபுகளோடு இணைந்து தோன்றுவதற்கு முன்னர், இந்த மரபுகளெல்லாம், வெறும் மரபுகளாக இல்லாமல், உண்மை நிகழச்சிகளாக இருந்தது. உதாரணத்திற்குப் புலவன், காதல் பிறப்பதை, மலைநாட்டுக்கு உரியதாக, பா மரபுக்காகக் கற்பித்துக் கூறாமல், தன்னுடைய பாக்களில் ஐந்து இயற்கை நிலக்கூறுகளின் உண்மை வாழ்க்கை நிலகளை, உள்ளது உள்ளவாறே எதிரொலித்த வேறுஓர் இலக்கியம் இருந்திருக்க வேண்டும், அந்த மிகத் தொலைநாட்களில், காதலர்களின் தற்காலப்பிரிவு, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய நிலங்களுக்கு உரியதாக மரபுக்காக ஏற்றிப் பாடாமல், அந்நிலங்களில் வாழ்ந்து அந்நிலங்களைப் பாடிய புலவன், அந்நிலம் ஒவ்வொன்றிலும், தான் கண்ணெதிரில் கண்ட, காதலர்கள் பிரிவால் நேரும் கருத்துரையை விளக்கிக் கூறினான், தொல்காப்பியனார், தம்முடைய இலக்கண நூலுக்கு ஆதாரமாய்க் கொண்ட மரபுவழிப்பாடல்களுக்கு முற்பட்டதான , இயற்கைப் பாடல்கள் என அழைக்கப்படும் பாடல்களின் வளர்ச்சிப் பருவத்திற்கு, ஐந்நூறு ஆண்டுகளை வகுப்பது, மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளாகா. இவ்வகையில் தமிழ் இலக்கியத் தோற்றத்தின் பிற்பட்ட கால கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம் 43 எல்லையாக, ஏறத்தாழ கி.மு. 1000ஐ அடைகிறோம். இவ்வகைப் பாக்களின் வளர்ச்சிக்கு வழி செய்து, அப்பாக்களில் எதிர் ஒளி காட்டும் நாகரீகம் வளர்ச்சி பெறுவதற்கும் பல நூறு ஆண்டுகளை எடுத்துக் . கொண்டிருக்க வேண்டும். ஆகவே, தமிழர்களின் பழம்பெரும் நாகரீகத்தை, அவர்கள், கிறித்துவுக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்க வேண்டும் என காள்ளலாம்.
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Comments
Post a Comment