இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 8 : தமிழ்நாட்டுக் கோட்டைகள்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்-தொடர்ச்சி)
தமிழர் வீரம் 8
தமிழ்நாட்டுக் கோட்டைகள்
அரண்மனை
நாட்டைக் காப்பவன் அரசன்; அவனைக் காப்பது அரண்மனை. அரசன் வாழும் இடம் அரண்மனை எனப்படும். அரண் என்பது கோட்டை. எனவே, அரணுடைய மனையே அரண்மனையாகும்.
தமிழகத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்தது மதுரை மாநகரம். நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாகப் பாண்டியர் அத்தலைநகரில் அரசு வீற்றிருந்தனர். அங்கு அமைந்திருந்த ஓர் அரண்மனையின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.1 மாளிகையைச் சூழ்ந்து நின்றது நெடுமதில். பலவகைப் பொறிகள் அம் மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றாரை மறித்துத் தள்ளும் இருப்புக் கவை; தானே வளைந்து சரமாரி பொழியும் யந்திர வில்; உருக்கிய செம்பையும் இரும்பையும் மாற்றார் மீது வார்க்கும் உலைப்பொறி; பற்றிய பகைவர் கரங்களைப் பொதிர்க்கும் ஊசிப்பொறி; கழுத்தை முறுக்கும் இரும்புத் தொடர்; இன்னும் புலி, யானை, பன்றி, பாம்பு இவற்றின் வடிவத்தில் அமைந்த பொறிகள்; இவற்றை யெல்லாம் கொண்டு விளங்கிற்று மதுரைக் கோட்டை.
மலை அரண்
செங்குத்தாக எழுந்த மலைகளைச் சிறந்த இயற்கை அரணாகக் கொண்டனர் பண்டைக் குறுநில மன்னர். குன்றுகளிற் கோட்டை கட்டி அவர் ஆட்சி புரிந்தனர். பாண்டி நாட்டிலே பறம்புக் கோட்டை; கொங்கு நாட்டில் கொல்லிக் கோட்டை; சோழ நாட்டில் செஞ்சிக் கோட்டை- இவை முற்காலத்தில் சிறந்து விளங்கின.
பறம்பும் பாரியும்
பாண்டி நாட்டிலே பறம்பு மலையை ஆண்டான் பாரி என்ற சிற்றரசன். அவன் வேளிர் குலதிலகன்; ஆண்மையும் அருளும் வாய்ந்தவன். அங்க நாட்டு அரசனாகிய கருணனும் பறம்பு நாட்டுத் தலைவனாகிய பாரியும் கொடைக்கு வரம்பாகத் தமிழ் இலக்கியத்திற் குறிக்கப்படுகின்றனர். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்து எல்லையற்ற புகழெய்திய பாரியைத் தேவாரமும் வியந்து பாடிற்று.2
மூவேந்தர் முற்றுகை
பாரியின் புகழை அறிந்து எரிவுற்றனர் பெருநில மன்னர். சேர சோழ பாண்டியராகிய மூவரும் ஒன்று சேர்ந்தனர்; பெரும் படை திரட்டினர்; பறம்பு மலையை முற்றுகையிட்டனர்; சில நாளில் பாரி சரணமடைவான் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மலைக்கோட்டையில் அவன் வாட்டமின்றி இருந்தான். கழைநெல்லும் பலாக்கனியும் கிழங்கும் தேனும் குறைவறத் தந்தது அக்குன்றம்.
கபிலர் பரிகாசம்
பலநாள் முற்றுகையிட்டனர் பகைவேந்தர்; பறம்புக் கோட்டையின் திறங்கண்டு மனந்தளர்ந்தனர். அப்போது பாரியுடன் இருந்த கபிலர் என்ற கவிஞர் ஒரு பாட்டிசைத்தார். “மாநில மன்னரே! இம் மலையடி வாரத்தில் உள்ள மரந்தொறும் உமது மதயானையைக் கட்டினாலும், பரந்த வெளியெங்கும் தேர்ப்படையை நிரப்பினாலும் உம்மால் வெற்றி பெற முடியாது. பறம்பு மலையைப் பெறுதற்குரிய வழியை யான் அறிவேன். உங்கள் வாளைக் கீழே போடுங்கள்; யாழைக் கையில் எடுத்து வாசியுங்கள்; இன்னிசை பாடுங்கள்; பாரியின் கோட்டை வாயில் திறக்கும்; அவன் நாடும் மலையும் உமக்கு நன்கொடையாகக் கிடைக்கும்” என்று ஏளனம் செய்தார் கவிஞர்.3
கன்னியர் கண்ணீர்
ஆள்வினையால் வெல்ல முடியாத பாரியைச் சூழ்வினையால் வஞ்சித்துக் கொன்றனர் வெஞ்சின வேந்தர். அப்போது அறம் வாடிற்று; ஆண்மை மாசுற்றது; பாரியின் பெண் மக்கள் இருவரும் தந்தையை இழந்து தமியராயினர்; நாடிழந்து நல்குரவெய்தினர்; தாம் பிறந்து வளர்ந்த பறம்பு மலையைக் கண்ணீர் நிறைந்த கண்களோடு கடைசிமுறை நோக்கி வறியராய் வெளியேறினர்.4 பாரியின் ஆருயிர்த் தோழரான கபிலர் தம் அருந்துயரை அகத்தடக்கி அவர் கண்ணீரைத் துடைத்தார்; ஆறுதல் கூறினார்; அம் மங்கையர் இருவரையும் அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டின் எல்லையைக் கடந்தார்; பெண்ணைநாட்டை வந்தடைந்தார்.
கபிலர் முடிவு
அருளுருவாகிய பாரி இல்லாமையால் தமிழகம் கபிலருக்கு இருளகமாய்த் தோன்றிற்று. முடிவேந்தர் இழைத்த தீமை அவரால் மறக்க முடியவில்லை; பொறுக்க முடியவில்லை. பெண்ணையாற்றங்கரையில் பெருந்தீயை வளர்த்தார்; மும்முறை வலம் வந்து வணங்கினார்; பாரியின் பெண்ணை வாழ்த்தினார்; செந்தீப் பாய்ந்து உயிர் நீத்தார்.5 பறம்புமலை யாண்ட பாரியும், புலனழுக்கற்ற புலவராகிய கபிலரும் நட்பின் நேர்மைக்குப் பெருஞ்சான்றாக விளங்குகின்றனர்.
கொல்லிமலைக் கோட்டை
சேலம் நாட்டிலே கொல்லி என்னும் மலையொன் றுண்டு. அது முன்னாளில் சேரகுல மன்னருக்கு உரியதாயிருந்தது. வளமார்ந்த அம் மலைச் சோலையில், எப்போதும் செந்தேன் துளிக்கும்; செழும்பலாப் பழுக்கும்; ஊசன் அருள் விளங்கும் அறைப்பள்ளியென்னும் திருக் கோயிலும், தீயவரை மருட்டியழிக்கும் தெய்வப் பாவையும் அம்மலையிலே உண்டு.
வில்லாளன் ஓரி
இத்தகைய கொல்லி மலையிலே குறுநில மன்னனாக வாழ்ந்தான் ஓரி என்ற பெயர் பெற்ற வீரன். வில்லாண்மையில் அவன் நிகரற்றவன். முடிவேந்தரும் அவனுதவியை நாடினர். அமர்க்களங்களல் அவன் வில்லால் மடிந்த வீர்ர் எண்ணிறந்தவர். காற்றின் வேகமும், கனலின் வெம்மையும் வாய்ந்த அம்புமாரி பொழிந்த அவ் வில்லை “வல்வில்” என்று எல்லோரும் புகழ்ந்தனர்.
ஓரியின் வேட்டை
போர் ஒழிந்த காலத்தில், அவ்வீரன் வேட்டையாடிப் பொழுது போக்குவான். அவ் வேட்டைகளில் ஒன்று பாட்டில் அமையும் பேறு பெற்றது. ஒரு நாள் வல்வில் லெடுத்துத் தன்னந் தனியனாய்க் கொடிய விலங்குகள் திரியும் கொல்லிமலைக் காட்டினுள்ளே சென்றான் ஓரி. பெரிய யானையொன்று அவன் கண்ணெதிர்ப்பட்டது. உடனே வல்வில் வளைந்தது; அடுகணை எழுந்தது; வேழத்தின் தலையில் வேகமாய்ப் பாய்ந்து வெளிப்பட்டது; பின்னும் விசை குன்றாமல் சென்று குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றது; அதனையும் கடந்து ஒரு கலைமான் மீது பாய்ந்தது; மேலும் சென்று காட்டுப் பன்றியொன்றை வீட்டியது; அம்மட்டிலும் அமையாது, புற்றிலே இருந்த ஓர் உடும்பின்மேறெ பாய்ந்து சினம் தீர்ந்தது.
பாணர் வியப்பும் திகைப்பும்
அவ் வேட்டையைக் கண்டது ஒரு பாணர் கூட்டம்; வியப்பும் திகைப்பும் உற்றது; “கொல்லிமலையில் இப்படிக் கொலை புரிந்தவன் யாவன்?” என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்டது. “இவன் விளையாட்டின் பொருட்டு வேட்டையாடும் வீரனா? அன்றி விலைப்பொருட்டால் விலங்குகளைக் கொலை செய்யும் வேடனா?” என்று ஒருவரையொருவர் வினவி நின்றனர்.
ஓரியின் தோற்றம்
அப்போது வில்லாளன் அவர் நின்ற பக்கம் திரும்பினான். அவனுடைய ஏற்றமும் தோற்றமும் அவர் கண்களைக் கவர்ந்தன. வண்ண மேனி; திண்ணிய தோள்; நறுஞ் சாந்தம் பூசிய பரந்த மார்பு; நெடிய கை; கொடிய வில்; கழல் அணிந்த கால்; ஏறு போன்ற நடை – இவற்றைக் கண்டனர் பாணர்; “கொல்லிமலை யாளும் கொற்றவன் இவன்தானோ!” என்று எண்ணினர். ‘கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததோ!’ என்று வியந்து நின்றார்.
இசையரங்கு
அந்நிலையில் பாணரிடையே ஆர்வம் பெருகிற்று. முழவும் சிறுபறையும் முழங்கின. இசைத்தழும்பேறிய கைகள் தாளமிட்டன. பாணர் தலைபண்ணொடு ஒரு வண்ணம் பாடினான். கொல்லிமலைச் சாரல் ஒரு நல்லிசை அரங்கமாயிற்று. இசைப் பாட்டை ஆர்வத்தோடு கேட்டு மனம் தழைத்தான், வில்லின் செல்வன். ‘நல்லிசையாளும் கொல்லிக் கோவே‘ என்று எடுத்து இசைப்பாட்டைப் பாடி முடித்தான் பாணப் புலவன். தன் பெயரைக் கேட்ட நிலையில் நாணித் தலை கவிழ்ந்தான் வீரன்; பாடிய பாணர் பசி தீர, ஊன் கலந்த சோறும் உயர்ந்த மதுவும் அளித்தான்; நல்ல பொன்னும் மணியும் பரிசாகக் கொடுத்தான்.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்
++++++++++++++++++++++++
குறிப்பு
- சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை,207-215
- கொடுக்கிலாதனைப் பாரியே என்று
கூறினும் கொடுப்பாரில்லை
- சுந்தரமூர்த்தி தேவாரம், திருப்புகலூர்ப் பதிகம்
- 3. புறநானூறு 109
- 4. புறநானூறு 112
- 5. புறநானூறு 152
Comments
Post a Comment