இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 5 : மான வீரம்-தொடர்ச்சி)
தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்
புலிகேசன்
வடநாட்டில் உள்ளது வாதாபி நகரம்1. அந்நகரில் நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர் சளுக்கர் குல வேந்தர். அக் குலத்திலே தோன்றினான் புலிகேசன் என்னும் வீரன். அவனது படைத்திறங்கண்டு நடுங்கினர் பகைவரெல்லாம். மண்ணாசை பிடித்த புலிகேசன் கங்கரையும் கதம்பரையும் வென்றான்; அவர் ஆண்ட நாடுகளைக் கவர்ந்தான். மாளுவநாட்டு மன்னனும் அவனடி பணிந்தான். புலிகேசன் பெற்ற வெற்றிகளால் வாதாபி நகரம் ஏற்றமும் தோற்றமும் அடைந்தது.
நரசிம்மனும் புலிகேசனும்
அக்காலத்தில் நரசிம்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சி மாநகரில் அரசு புரிந்தான். அவனையும் வெல்லக் கருதிப் படையெடுத்தான் புலிகேசன். அப்போது பல்லவன் சேனை விரைந்து எழுந்தது; சாளுக்கியப் படையை மணி மங்கலத்திலே தாக்கிற்று. பல்லவப் படையின் வேகத்தைக் கண்ட புலிகேசன் பின்வாங்கினான்; வாதாபியை நோக்கித் திரும்பினான்.
படைத்தலைவர்-பரஞ்சோதியார்
மண்ணாசை பிடித்த புலிகேசனை நொறுக்கி, அவன் படைச் செருக்கை அழித்தாலன்றித் தமிழ் நாட்டார் அச்சமின்றி வாழுமாறில்லை என்பதை அறிந்தான் நரசிம்மன்; பரஞ்சோதி என்னும் பெருஞ் சேனாதிபதியுடன் கலந்தான். “காட்டைக் கலக்கி வேட்டையாடுதல் போன்று புலிகேசனை அவன் நாட்டிற்போந்து அடித்து முடித்தல் வேண்டும்” என்று பரஞ்சோதியார் கூறினார். ‘அப்படியே செய்க’ எனப் பணித்தான் அரசன். தமிழ்ப் படை திரண்டு எழுந்தது. பரஞ்சோதியார் அப்படையின் தலைவராகப் போர்க்களிற்றின் மீதேறிப் புறப்பட்டார்.
படையெடுப்பு
பல்லவன் படை தன் நாட்டை நோக்கி வரும் பான்மையை ஒற்றர் வாயிலாக அறிந்தான் புலிகேசன்; ஏளனம் பேசினன்; “மாமல்லன் மதியிழந்தான்” என்றான். “பல்லவக் காக்கைகள் பல்லாயிரம் வந்தாலும் வாதாபிக் கோட்டையின் ஒரு கல்லை அசைக்க முடியுமா?” என்று அசதியாடினான். அது கேட்ட அமைச்சர் முதலியோர் ஆரவாரித்தனர். வாதாபியில் வீரர் ஆடிப்பாடி அகமகிழ்ந்தார்கள்; கள்ளுண்டு களித்திருந்தார்கள்.2
வாதாபி நகரின் புறத்து வந்திறுத்தது தமிழ்ச்சேனை. புலிகேசன் எதிர்த்தான். நெடும்பொழுது இருதிறத்தாரும் கடும்போர் புரிந்தார்கள். பரஞ்சோதியின் முன்னிற்க மாட்டாது சளுக்கர் சேனை பின்னிட்டது. அது கண்ட புலிகேசன் நால்வகைச் சேனையோடும் போர்க்களத்தை விட்டுக் கோட்டையினுள்ளே போயினான்.
வலிமைசான்ற வாதாபிக் கோட்டையை வளைத்தது தமிழ்ச் சேனை. பரஞ்சோதியார் அக்கோட்டையின் மதில்களைத் தாக்கித் தகர்க்கப் பணித்தார். மலை போன்ற யானைகள் திண்ணிய மரங்களைத் துதிக்கையால் எடுத்து நெடிய மதில்களை இடித்தன. எவ்வகைப் பண்டமும் கோட்டையின் உள்ளே செல்லாதபடி காலாட்படைகள் கண்ணும் கருத்துமாய்க் காவல் புரிந்தன. சில நாளில் கோட்டை இடிந்தது. உள்ளேயிருந்த புலிகேசனது மறப்படை கடுமையாக எதிர்த்தது. ஆயினும் மடைதிறந்த கடல்போல் தமிழ்ச் சேனை கோட்டையின் உள்ளே புகுந்து மாற்றாரைத் தாக்கி வென்றது. புலிகேசனும் போர்க்களத்தில் விழுந்துபட்டான்.
பரஞ்சோதியார் வெற்றி
தலைவனை இழந்த சேனை தள்ளாடத் தொடங்கிற்று. அதனை வளைத்துப் பற்றுமாறு பரஞ்சோதியின் ஆணை பிறந்தது. புலிகேசன் முப்பதாண்டுகளாகத் திரட்டி வைத்திருந்த பொன்னும் மணியும் பரஞ்சோதியார்க்கு உரியவாயின. அவற்றைக்கொண்டு அவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.
“பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண் ணிலகவர்ந்தே
இகலரசன் முன்கொணர்ந்தார். [3]என்று அவர் வரலாறு கூறுகின்றது.
நரசிம்மன் மனமகிழ்ந்தான்; நெடும்பகை தொலைத்த பரஞ்சோதியை மனமாரப் பாராட்டினான். வாதாபி நகரத்தில் வெற்றித் தூண் நாட்டினான்; ‘வாதாபி கொண்ட நரசிம்மன்’ என்ற விருதுப் பெயர் பூண்டான்.4 அது முதல் பன்னீராண்டு சாளுக்கிய நாடு அரசிழந்து அவலமாய்க் கிடந்ததென்றால் பரஞ்சோதியின் படைத்திறமைக்கு வேறு சான்றும் வேண்டுமோ?
பரஞ்சோதியே சிறுத்தொண்டர்
வாதாபியை வென்ற பரஞ்சோதியார் வீரத்தோடு சீலமும் வாய்ந்தவர். மாற்றார்முன் அடலேறுபோல் விளங்கிய அவ் வீரர் பெருமான் சிவனடியார் முன்னே தலைவணங்கித் தாழ்ந்து கைகுவித்துத் துவண்டு நின்றார். செற்றாரைச் செறுத்த வீரர், சிவனடியார் முன்னே சிறியராய் நின்று, அவர்க்கு திருஅமுது செய்வித்தலே சிறந்த அறமெனக் கொண்டார். ஆதலால் அப்பெரு வீரரைச் சிறுத் தொண்டர் என்று திருத்தொண்டர் புராணம் போற்றுகின்றது.
வாதாபி கணபதி
சோழ நாட்டிலுள்ள பழம்பதியாய திருச்செங் காட்டங்குடியிலே தோன்றினார் சிறுத்தொண்டர். அவர் சிவப்பணியைச் சிறப்பித்துத் தேவாரம் பாடிற்று. அவ்வூரில் ஒரு சின்னஞ்சிறு பிள்ளையார் கோவில் உள்ளது. அங்கு அமர்ந்தருளும் பிள்ளையார் வாதாபி கணபதி என்னும் பெயர் பெற்றுள்ளார். வாதாபி நகரத்தை நீறாக்கிய சிறுத்தொண்டர் அங்கிருந்த கணபதியை ஆதரித்தெடுத்து வந்து தம்மூரில் அமைத்தார் போலும்! இன்று வாதாபி கணபதியின் பெருமை இசையரங்கின் வாயிலாகத் தமிழ்நாடெங்கும் பரந்து நிலவுகின்றது. வாதாபி நகரத்தின் பொருட் செல்வத்தைப் பெற்றான் குலோத்துங்க வளவன்; வாதாபி கணபதியின் அருட்செல்வத்தைப் பெற்றார் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார்.
கலிங்கம் வென்ற கருணாகரன்
வட கலிங்கம்
பெருநில மன்னனாகிய குலோத்துங்க சோழன் ஒரு நாள் பாலாற்றங்கரையில் வேட்டையாடக் கருதிப் பரிவாரங்களோடு புறப்பட்டுக் காஞ்சிமாநகரை அடைந்தான்; அங்கு அரண்மனையின் ஒருபால் அமைந்த சித்திர மண்டபத்தில் சிறப்புற வீற்றிருந்தபோது சிற்றரசர் பலர் திறை செலுத்தி அவனடி பணிந்தார்கள். அந்நிலையில் வடகலிங்க நாட்டு அரசன் இருமுறை திறை செலுத்தத் தவறினான் என்பதை அறிந்தான் மன்னர் மன்னன்; உடனே படைத்தலைவரை நோக்கி,”வடகலிங்கன் வலிமையற்றவன்; ஆயினும் அவன் நாட்டு மலையரண் வலிமை சான்றது. நமது படை இன்றே எழுந்து அக்குன்றுக் கோட்டையை இடித்துக் கலிங்கனையும் பிடித்து வருக” எனப் பணித்தான்.
படைத்தலைவன் – கருணாகரன்
அப் பணி தலைமேற்கொண்டான் கருணாகரன் என்னும் தானைத் தலைவன். அவன் பல்லவ குலத்துதித்த பெருவீரன்; வண்டையர் கோமகன்; தொண்டைமான் என்ற பட்டம் பெற்றவன். அவன் தலைமையில் எழுந்தது தமிழ்ப் பெருஞ்சேனை; பல ஊரும் ஆறும் கடந்து கலிங்க நாட்டிற் புகுந்தது.5 சேனை சென்ற இடமெல்லாம் மதில் இடிந்தது; புகை எழுந்தது; பொழில் அழிந்தது; படை படையென்று குடிகள் பதறி ஓடினர்;
“ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடநாடர்
அருவர் அருவர்என அஞ்சி” 6 அரசனிடம் சென்று முறையிட்டனர்.
கலிங்கப் போர்
அது கேட்ட அரசன் ஆவேசமுற்று எழுந்தான்; “குலோத்துங்கனுக்கு நான் எளியனேயாயினும் அவன் படைக்கு இளைத்தவனோ?” என்று கூறி நகைத்தான்; “என்னுடைய தோள்வலியும் வாள்வலியும் அறியாது இங்கு அமைந்த கடலரணும் கருதாது எழுந்த சேனையை இன்னே பொருதழிப்பேன்” என்று புறப்பட்டான்.
தமிழர் வெற்றி
வெற்றி பெற்ற தமிழ்ச் சேனை வீர முழக்கத்தோடு மீண்டது. கலிங்க நாட்டிற் கவர்ந்த பொருள்களையெல்லாம் குலோத்துங்கன் அடிகளில் வைத்து வணங்கினான் கருணாகரன்.
“கடற்கலிங்கம் எறிந்துசயத் தம்பம் நாட்டிக்
கடகரியும் வயமாவும் தனமும் கொண்டு
சுடர்க்கதிர்வாள் அபயனடி அருளி னோடும்
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே.”[7]
இத்தகைய வீரப் புகழ் வாய்ந்த கருணாகரத் தொண்டைமானை ஈன்ற பெருமை சோழநாட்டு வண்டாழஞ்சேரி என்னும் சிற்றூருக்கு உரியது. அவ்வூர்ப் பெயர் வண்டை என மருவி வழங்கிற்று. ஆதலால், கலிங்க மெறிந்த கருணாகரனை ‘வண்டையர் கோன் தொண்டை மான்’ என்று தமிழ்க் கவிதை புகழ்ந்து மகிழ்ந்தது.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), தமிழர் வீரம்
+++++++++++++++++++++++++++++++
குறிப்புகள்
1. பீசப்பூர் சில்லாவில் உள்ளது வாதாபி, அதனை “வடபுலத்து வாதாபித் தொன்னகரம்” என்றார் சேக்கிழார்.- திருத்தொண்டர் புராணம், சிறுத்தொண்டர், 6.
2. “அந்நாட்டுப் படைவீரர் மாற்றார்க்குக் கூற்றுவர்; மதுவை மாந்திப் போர்க்களம் புகுவர்; போர்க்களிறுகளுக்கும் மதுவை ஊட்டுவர். தன் படைத்திறத்தால் இறுமாப்புற்ற மன்னன் மற்றைய அரசரை மதிப்பதில்லை” என்று எழுதியுள்ளான் ஃகயூந்தாசாங்கு என்னும் சீனத்துறவி–இந்தியர் வரலாறு, 310-311.
3. சிறுத்தொண்டர் புராணம், 6.
4. காஞ்சிப் பல்லவர் சரித்திரம், 98.
5. பாலாறு முதலாகக் கோதமை ஈறாகப் பதின்மூன்று நதிகளைக் கடந்து சென்றது அச்சேனை. . கலிங்கத்துப் பரணி, 367-369 தாழிசைகளில் விவரம் காண்க.
6. பெருந்தொகை, 803
7. கலிங்கத்துப்பரணி, 471.
Comments
Post a Comment