Skip to main content

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக

 



(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 39 : சிறியர் செய்கை- தொடர்ச்சி)

பூங்கொடி
சொற்போர் புரிக


பிழைஎனப் படுமேல் பேசுக அரங்கில்
கழைஇனி தென்றேன் கசக்குமென் பீரேல்
சான்றுடன் நிறுவுக, சால்பது வாகும்; 120
நான்தரு கருத்தினை மறுத்துறை நவிலுதல்
அறிவோர் கொள்கை; அதனை விடுத்துச்
சிறியோர் செயல்செய முனைதல் நன்றோ?
திறமிலார் செயலெதும் திருந்திய கொள்கை
உரமுளார் போக்கினை ஒதுக்குதல் இல்லை; 125

 ஞாலத்து இயற்கை   

நல்லன செய்வோர்க்கு நலிவே தருதல்
மல்லன்மா ஞாலத் தியற்கையே யாகும்;
உலகுக் குழைக்கும் உத்தமர் தம்மைச்
சிலுவையில் அறைந்தும் சிறையினில் அடைத்தும்
கொலைத்தொழில் புரிந்தும் குண்டுகள் பாய்ச்சியும் 130
நஞ்சுணச் செய்தும் நலிவுகள் தந்தும்
நன்றி கொன்றிடும் நல்லதோர் உயர்குணம்
இன்றுநம் மிடையே இறுகப் பிணைந்தது;
ஆதலின் இச்செயல் ஆற்றத் துணிந்தீர்!
பூங்கொடி துணிபு

சாதல் உறுதி, சதைபடு இவ்வுடல் 135
கழுகு பருந்துகட் குணவாய்க் காட்டில்
அழுகிக் கிடக்கும், அத்தகு நிலையுடல்
என்னின மக்கள் எறிகல் பட்டுச்
செந்நீர் சிந்திச் செந்தமிழ் காக்க
மாய்தல் பெறின்நான் மனங்கொள ஏற்பேன்; 140

சிந்தனை செய்க

 ஆய்தற் றொழிலோர் அறிவினுக் கெட்டாக்

காலங் கடந்தநும் தாய்மொழி வாழ
ஞாலம் வாழ நவின்றனென் சிலவழி,
ஒவ்வும் வழியெனின் உவப்புடன் கொள்க
செவ்விதன் றாயின் சிந்தித் தொகுக்குக’
எனவாங்கு
உணர்வு பொங்க உரையாற் றியபின்
மணமலர்ப் பந்தர் மருங்கிருந் தனளே.

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி

 கழை - கரும்பு, நிறுவுக - நிலை நாட்டுக, சால்பு - தக்கது, நலிவு - துன்பம், மல்லல் - வளப்பம், ஞாலம் - உலகம், செவ்விது - சிறந்தது, பந்தர் - பந்தல்.  

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue