வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்
(வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி- தொடர்ச்சி)
வள்ளுவர் சொல்லமுதம்
அறிவும் ஒமுக்கமும்
கற்றும் கேட்டும் தெளிந்தும் பழகியும் பெற்ற அறிவே நிறைந்த அறிவாகும். “கல்வியின் பயன் அறிவு” என்று கற்றறிந்தோர் கூறுவர். தெய்வப் புலவராய திருவள்ளுவர் அறிவின் இலக்கணத்தைத் திறம்பட இயம்பியுள்ளார். கல்வி கேள்விகளின் நிறைவே அறிவு பெறுதற்கு உறுதுணை என்பதை அறிவுறுத்தக் கல்வி கேள்விப் பகுதிகளை அடுத்து அறிவுடைமை என்னும் அதிகாரத்தை அமைத் துள்ளார். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தலே அறிவாகும் என்று இலக்கண உரையாசிரியர்கள் விளக்குவர். இதனையே நம் தெய்வப்புலவர்,
“சென்ற இடத்தால் செலவிடா திதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு”
என்று கூறியருளினர். குதிரையை நிலம் அறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்று பரிமேலழகர் உரைவிளக்கம் தந்தார். எந்தப் பொருளை எவர், எவர் இயம்பக் கேட்பினும் அப்பொருளின் மெய்யான பயனைக் காணவல்லதே அறிவாகும் என்று மேலும் குறிப்பர். உலகத்தோடு பொருந்த ஒழுகுவதே அறி வாகும். அவ்வாறு ஒழுக அறியாதவர் பல கற்றா ராயினும் கல்லாத புல்லரே என்று சொல்லுவார் வள்ளுவர். உலகத்தை ஒருவனுக்கு நட்பாக்குவதும் அந் நட்பின்கண் முன்மலர்தலும் பின்கூம்புதலும் இன்றி ஒருநிலையனாமாறு செய்வதும் அறிவே இத்தகைய அறிவு, தன்னை உடையவர்க்கு இறுதி வாராமல் காக்கும் கருவியாகும். பகைவர்க்கும் அழிக்கலாகாத உட்கோட்டையாகும். தெளிந்த அறிவினை உடையவர்கள் தாம் சொல்லும் பொருள்கள் அரியனவாயினும் கேட்பார்க்கு எளியனவாய் மனங்கொள்ளுமாறு சொல்லுவர். பிறர்பால் தாம் கேட்பன அறிதற்கரிய நுண்ணிய வாயினும் அவற்றைக் கூர்ந்து நோக்கித் தெள்ளிதின் அறிவர். அவர் பின்னே வரக்கடவதனை முன்னே அறியவல்லராயிருப்பர். அஞ்சத்தக்கவற்றிற்கு அஞ்சி ஒழுகுவர். இத்தகையார் நடுங்குமாறு வருந்துன்பம் ஒன்றும் இல்லை என்பர். இவர்கள் அவ் அறிவை அன்றிப் பிறிதொன்றும் இலராயினும் எல்லாம் பெற்றவர் ஆவர். அறிவிலார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இல்லாத வறியராவர் என்பார் வள்ளுவர். அறிவை உலகறிவு என்றும் மெய்யறிவு என் றும் இருகூறு படுத்துவர் சான்றோர். உலக வாழ்வை நலம்பெற கடத்துவதற்குப் பெருந்துணை புரிவதே உலகறிவாகும். உயிர், வீடுபேறாகிய உயர்நலம் பெறுதற்கு உறுதுணைபுரியும் அறிவே மெய்யறிவு என லாகும். இதனைத் திருவள்ளுவர் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தால் விளக்குவார். எப்பொருள் எத் தன்மைத்தாகத் தோன்றினாலும் அத் தோன்றிய இயல்பைமட்டும் கண்டொழியாது அப்பொருளின் கண் நின்று மெய்யான பொருளைக் காண்பதே மெய்யறி வாகும் என்பர். மேலும் பிறப்பிற்கு முதற்காரண மாகிய அறியாமை அகல, அரிய வீடுபேற்றிற்குக் காரணமாகிய செவ்விய பொருளைக் காண்பதே மெய் யுணாவாகும் எனபா்.
மெய்யறிவுடைய மேலோர் மீண்டும் உலகில் பிறத்தல் இலர். அவர்கட்கு வீட்டின்பம் விளைவது உறுதியாகும். அவர்கள் எய்துகின்ற நிலவுலகத் தினும் எய்தக் கடவதாய வீட்டுலகம் அவர்கட்கு மிகவும் நணித்தாகும். அத்தகைய மெய்யுணர்வை உபதேச வாயிலாகவே ஒருவன் பெறமுடியும். அனுபவமுடைய ஞானதேசிகளைப் பணிந்தே அவன்பால் கேட்டுணர வேண்டும். அங்ங்னம் கேட்ட உபதேச மொழிப் பொருளை அளவைகளாலும் பொருந்தும் ஆற்ருலும் தெளிய ஆராய்தல் வேண்டும். அதன்ை முதற் பொருளை உள்ளவாறு உணர்தல் வேண்டும். அங்ங் னம் உணர்ந்தாற்குப் பிறப்பு உளதாகாது என்பர். எல்லாப் பொருட்கும் சார்பாய் உள்ள செம்பொருள் தன்மையை உணர்ந்து இருவகைப் பற்றும் அற் ருெழிய ஒழுக வல்லயிைன் அவனைச் சாரநின்ற துன் பங்கள் சேராது அகலும். மெய்ஞ்ஞான முதிர்ச்சி உடையார்க்குக் காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அறவே அற்ருெழிதலால் அவற்றின் காரியமாகிய வினைப்பயன்கள் விலகுவனவாகும்.
இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றென மதிக்கும் உணர்வுடையாரே மெய்யுணர்வுடையார். அன்ன வரே மெய்ப்பொருளைக் காணும் மேலவர் என்பர் ஆன்றோர்,
வைத்தனை இன் சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானும்-ஊறிய
கைப்பதனைக் கட்டியென்று உண்பானும் இம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ்வார்’
-என்பது திரிகடுகம். பழித்துப் பேசும் இழிமொழிகளை இனிய வாழ்த்தென எண்ணுவார், பாழும் கூழைப் பசுநெய் கலந்த சோறென எண்ணி உண்ணுவார், மிகவும் கசப்பான பொருளை இனிப்பான கருப்பங்கட்டி என்று விருப்புடன் உண்ணுவார் ஆகிய இன்னவ ரெல்லாம் மெய்ப்பொருள் காணும் மெய்யுணர்வுடை யார் என்று கல்லாதனார் சொல்லுவார்.
அறிவின் பயனை ஒழுக்கமென ஆன்றோர் உரைப்பர். ஒழுக்கம் என்னும் சொல், தான் ஒழுகுதலும் பிறரை ஒழுகுமாறு செய்தலும் என்ற இரு கருத்தையும் உணர்த்துவதாகும். ஒருவன் தனது அறிவின் முதிர்ச்சியால் ஒழுகலாற்றைப் பிறர்க்கு மட்டும் அறிவுறுத்தலால் பயன் இல்லை. தானும் அவ் வொழுக்க நெறியில்நின்று மற்றவர்க்கு எடுத்துக்காட் டாய் இலங்குதல் வேண்டும். “ஒதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை” என்பது முதுமொழிக்காஞ்சி.
” இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்”
என்பது வள்ளுவர் சொல்லமுதம். ஒழுக்கம் உடையவர் வாய்ச்சொற்களே வாழ்வில் ஊன்றுகோல்போல உதவுவதாகும். அறிவுடையார் வாய்ச்சொல் என்று வள்ளுவர் குறிக்காததன் கருத்துக் கூர்ந்து நோக்கத் தக்கது. ஒழுக்கம் உடையவர்கள் மறந்தும் தீய சொற்களை உரையார், ஒழுக்கம் இல்லாதவன் அறிவு, உலகிற்குப் பயன்தராது என்பது நம் புலவரின் உறுதி யான கருத்து. ஆதலின், பல்வேறு ஒழுக்கங்களையும் தனித்தனியே வகுத்துப் பேசும் வள்ளுவர், ஒழுக்க முடைமை என்றே ஓர் அதிகாரம் வகுத்தருளினார்.
ஒழுக்கமே ஒருவற்குப் பெருமையும் சிறுமையும் தருவதாகும். ஒழுக்கம் இல்லாதவன் உயர்குடிப் பிறப்பினனாயினும் அச் சிறப்பினை இழப்பான். இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் என்றே குறிப்பார். வேதியன் கற்ற வேதத்தை மறந்தாலும் பின்னும் ஓதி அவ்வறிவைப் பெற்றுக்கொள்ளலாம். அவன் குலவொழுக்கம் குன்றுவானாயின் எல்லா நலங்களும் இழந்தொழிவான். ஆதலின், ஒழுக்கம் உடைமையே உயர்குடிப் பிறப்பாகும். அதுவே எல்லார்க்கும் சிறப்பினைத் தருவது. உயிரினும் மேலாக ஓம்பத்தக்கது என்பர். அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து தெளிந் தாலும் இருமைக்கும் துணையாவது இவ் ஒழுக்கமே. இவ் உண்மைகளை அறிந்த சான்றோர் என்றும் ஒழுக்கத்தில் தவறமாட்டார்கள். தவறுவராயின் அடையத் தகாத பெரும்பழி வந்து சாரப் பெறுவர். அன்னர் மறந்தும் தீய சொற்களே வாயால் கூறார்,
இங்ஙனம் ஒழுக்கத்தைப் பொதுவாகப் பேசிய பெருநாவலர், இன்றியமையாது அமையவேண்டிய சில சிறப்பான ஒழுக்கங்களைக் குறிப்பிடுகிறார் இல் வாழ்க்கை முதலாகப் புகழ் இறுதியாக உள்ள இருபது அதிகாரங்களால் இல்லறத்தார்க்குரிய நல்லொழுக்கங்களை எல்லாம் தெளிவுறப் பேசும் திருவள்ளுவர் ஒழுக்கத்தை நடுநாயகமாக வைத்துப் பின்னும் முன்னுமாக அறவொழுக்கங்களை வலியுறுத்துகிறார். ஆதலின் அன்புடைமை முதலாகப் புகழ் இறுதியாகக் கூறும் எல்லா இயல்புகளும் ஒழுக்கத்தின் பாற்பட்டனவே.
அன்பென்னும் அடிப்படையின்மேல் தான் ஒழுக்கமென்னும் உயர்மாடத்தை அமைக்கமுடியும். அன்பு முதிர்ந்துழித் தொடர்பற்ற பிறரையும் விரும்பும் பேரார்வம் பிறக்கும். அவ் ஆர்வமிகுதியால் எத் தகையாரும் இனிய நட்பினர் ஆவர். எவரையும் விருந்தினராக ஏற்றுப் போற்றும் பெருந்தகைமை உளதாகும். எல்லாரிடத்தும் இன்சொல் பேசும் இயல்பு தானே அமையும். பணிந்து நடக்கும் பண்பு பெருகும். செய்ந்நன்றி மறவாத சீரிய திறம் வாய்க்கும்.
வள்ளுவர் செய்ந்நன்றி அறியும் ஒழுக்கினைப் பெரிதும் வற்புறுத்துகிறார், தனக்கு முன் ஒர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவி யின் சிறப்பு அளப்பரியது. அதற்குக் கைம்மாறாக மண்ணுலகும் விண்ணுலகும் சேர்த்து வழங்கினாலும் ஒப்பாகாது. ஒருவனுக்கு உயிர் நீங்கும் எல்லைக்கண் செய்த உதவி, அவனது தகுதியை நோக்கச் சிறிய தாயினும் அக்காலத்தை நோக்க ஞாலத்தின் மாணப் பெரிதாகும். பயனை எதிர்நோக்காது செய்த உதவி யின் உயர்வு கடலினும் பெரிதாகும். இங்ஙனம் உதவியின் மாண்பினைத் தெளிவுற விளக்கினர்.
“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பது தெள்ளிய பழமொழி. துன்பக்காலத்துப் பற்றுக்கோடாய் நின்று அதனை அகற்றினாரது நட்பை மறத்தலும் துறத்தலும் பொருத்தமற்ற செயலாம். தினத்துணை நன்றி செய்தாலும் பனைத்துணையாக மதித்தலே அறிஞர் கடனாகும். நல்லோர் தமது அல்லல் அகற்றியார் நட்பை, எழுபிறப்பும் எண்ணிப் போற்றுவர் ஆதலின், நன்றிமறப்பது நன்றன்று என்று கூறுவர் செய்ந்நன்றி மறத்தல் உய்தியில்லாத பெரும்பாவம் பெரிய அறங்களை அழித்தவர்க்கும் கழுவாய் உள தாகும்.
(தொடரும்)
வள்ளுவர் சொல்லமுதம்
வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்
Comments
Post a Comment