Skip to main content

உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : கலைமகள் திருக்கோயில்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை – தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 49

கலைமகள் திருக்கோயில்

மாயூரத்தில் வசந்தோற்சவம் ஆன பிறகு சுப்பிரமணிய தேசிகர்
திருவாவடுதுறைக்குப் பரிவாரங்களுடன் திரும்பி வந்தனர். அவருடன்
பிள்ளையவர்களும் நாங்களும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தோம். வழக்கப்படி
மடத்திலே பாடங்கள் நடைபெற்று வந்தன.

தேசிகரின் பொழுது போக்கு

சுப்பிரமணிய தேசிகர் காலை எழுந்தது முதல் இரவில் துயிலச் செல்லும்
வரையிற் பாடம் சொல்வது, வித்துவான்களோடு சம்பாசணை செய்வது,
மடத்திற்கு வருபவர்களுடைய குறைகளை விசாரித்து வேண்டிய உதவிகளைச்
செய்வது ஆகிய விசயங்களிலே பெரும்பாலும் பொழுதைப் போக்கி வந்தார்.

நீராடல்

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவர் எழுந்துவிடுவார். சில
சமயங்களில் ஒரு முதிய தம்பிரான் வந்து அவரை எழுப்புவார். எழுந்தவுடன்
ஐந்து மணியளவுக்குக் காவிரிக்கு நீராடச் செல்வார். மடத்திலிருந்து
காவிரித்துறை அரை கல் தூரம் இருக்கும். நடந்தே செல்வார். ஆசனப்
பலகை, மடி வத்திரப் பெட்டி முதலியவற்றுடன் தவசிப் பிள்ளைகளும்,
தம்பிரான்களும் உடன் செல்வார்கள். குளித்துத் திரும்பி வரும்போது,
காவிரி சென்று குளியல் சடங்குகளை முடித்துக் கொண்ட
பிராமணர்களும் சைவர்களும் அவரைக் கண்டு பேசிக் கொண்டே உடன்
வருவார்கள். காவிரிக்குச் செல்லும் பொருட்டு அமைக்கப் பெற்ற சாலையின்
இரு பக்கங்களிலும் மருத மரங்கள் வளர்ந்திருக்கும். அம் மருதமரச்சாலையில், தேசிகர் குளித்துவிட்டு வரும்போது அவருடன் சல்லாபம் செய்வதற்காகவே சிலர் காவிரித்துறையில் காத்திருப்பார்கள்.

ஆலயத் தரிசனம்

வரும் வழியில் சமாதித் தோப்பு என்ற ஓரிடம் இருக்கிறது. அதைச்
சார்ந்து திருவாவடுதுறை மடத்தில் தலைவர்களாக இருந்த பலருடைய சமாதிக்
கோயில்கள் உள்ளன. அதற்கு முன்னே சிறிது தூரத்தில் சாலையின் ஓரமாக
மறைஞான தேசிகர் என்ற பெரியாரின் சமாதி இருக்கிறது. சுப்பிரமணிய
தேசிகர் காவிரியிலிருந்து மடத்துக்கு வரும்போது அவ்விடத்தில் நின்று
தரிசனம் செய்து விட்டு வருவார். அப்பால் சிவாலயத்துக்கு வந்து சாமி
தரிசனம் செய்து பிறகு மடத்திற்குச் செல்வார். செல்லும்போது ஆலயத்தின்
கிழக்கு வாயிலிலுள்ள துணைவந்த விநாயகருக்குச் சில சிதர்த் தேங்காய்கள்
உடைக்கப்படும்.

மடத்தில் முதலில் திருமாளிகைத் தேவரைத் தரிசித்து விட்டுப் பிறகு
சிரீ நமச்சிவாய மூர்த்தி சந்நிதியில் வந்து தரிசிப்பார். அம் மூர்த்தியின்
தோத்திரமாகிய சிரீ பஞ்சாட்சர தேசிகர் மாலை என்னும் பிரபந்தத்திலிருந்து
பத்துப் பாடல்களை ஓதுவார்கள் முறையே சொல்வார்கள். ஒவ்வொரு பாடல்
சொல்லி முடிந்ததும். ஒருமுறை தேசிகர் சாசுட்டாங்கமாக நமசுகாரம் செய்வார்.
இவ்வாறு பத்து நமசுகாரங்கள் செய்துவிட்டு அடியார்களுக்கு விபூதி
அளிப்பார். பிறகு ஒடுக்கத்திற்குச் சென்று தம் ஆசனத்தில் அமர்வார். ஐந்து
மணிக்கு முன்னரே எழுந்தவர் ஒடுக்கத்துக்கு வந்து அமரும்போது காலை
மணி எட்டாகிவிடும்.

உடனே மடத்திலுள்ள தம்பிரான்களும் மற்ற அடியார்களும் தேசிகரைப்
பணிந்து விபூதிப் பிரசாதம் பெற்றுக்கொள்வார்கள். பிறகு யாரேனும் யாசகர்
வந்திருக்கிறாரா என்று தேசிகர் விசாரிப்பார்.

தருமச் செயல்

யாரேனும் தேசிகரிடம் பொருளுதவி பெறும் பொருட்டு வந்தால்
அவர்கள் காலையிலே தேசிகரைப் பார்த்துத் தம் காரியத்தை நிறைவேற்றிக்
கொள்வார்கள். தேசிகர் தம் ஆசனத்தில் அமர்ந்தவுடன் கவனிக்கும் முதற்
காரியம், “யாசகர் வந்திருக்கிறார்களா?” என்ற ஆராய்ச்சிதான். யாரேனும்
வராவிட்டால். “இன்று ஒருவரும் வரவில்லையே!” என்று சிறிது வருத்தத்தோடு
சொல்வார்.காலையில் அவர் எந்த உணவையும் உட்கொள்வதில்லை. முதலில்
சைவசித்தாந்த சாத்திரங்களைப் பாடம் சொல்ல ஆரம்பிப்பார். சில
தம்பிரான்கள் கேட்பார்கள்.

வரிசை அறிதல்

சாத்திரங்களில் விற்பத்தி உள்ள வித்துவான் யாரேனும் வந்தால்
அவரைப் பார்த்துப் பேசுவதிலும் அவர் என்ன என்ன விசயங்களில் வல்லவர்
என்பதை அறிந்து கொள்வதிலும் அவருக்கு அதிக விருப்பம் இருந்தது.
வித்துவான்கள் வந்தால் மடத்து வேலைக்காரர்கள் உடனே தேசிகரிடம்
தெரிவிப்பார்கள்.

கொலு மண்டபத்து வாயிலில் ஒரு காவற்காரன் இருப்பது வழக்கம்.
அக்காலத்தில் முத்தையன் என்ற ஒரு கிழவன் இருந்தான். சுப்பிரமணிய
தேசிகரிடம் தொண்டு புரிந்து பழகிய அவன் அவருடைய இயல்புகளை நன்றாக
அறிந்திருந்தான். யாராவது சாத்திரிகள் வந்தால் அவரிடம் மரியாதையாகப்
பேசி அவர் இன்ன இன்ன விசயங்களில் வல்லவர் என்பதை அறிந்து
கொள்வான். பிறகு ஓரிடத்தில் அவரை அமரச் செய்து உள்ளே சென்று
பண்டார சந்நிதிகளிடம் “ஒரு பிராமணர் வந்திருக்கிறார்” என்பான்.

“என்ன தெரிந்தவர்?” என்று தேசிகர் கேட்பார்.

“தருக்கம் வருமாம்” என்றோ, “மீமாம்சை தெரிந்தவராம்” என்றோ,
வேறுவிதமாகவோ அவன் பதில் சொல்வான்.

உடனே வித்துவான் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடைக்கும். அவர்
சென்று தேசிகரோடு சம்பாசணை செய்வார். பேசப் பேச வந்த வித்துவான்,
“நாம் ஒரு சிறந்த இரசிக சிகாமணியோடு பேசுகிறோம்” என்பதை உணர்ந்து
கொள்வார். வித்துவானுடைய திறமையை அறிந்து தேசிகரும் ஆனந்தமுறுவர்.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, தேசிகர் வந்த வித்துவானுடைய
தகுதியை அறிந்து விடுவார். அப்பால் அவருக்கு ஏற்றபடி சம்மானம் செய்வார்.
தம்முடைய திறமையை அறிந்து அளிக்கப் பெறும் அந்தச் சம்மானத்தை
வித்துவான் மிக்க மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்வார்.

“இங்கே சில காலம் தங்க வேண்டும்; அடிக்கடி வந்து போக
வேண்டும்” என்று தேசிகர் சொல்வார். அவ்வார்த்தை உபசார வார்த்தையன்று;
உண்மையான அன்போடு கூறுவதாகவே இருக்கும். “இம்மாதிரி இடத்துக்கு
வராமல் இருப்பது ஒரு குறை” என்ற எண்ணம் வித்துவானுக்கு உண்டாகிவிடும். அவர் அது முதல் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவராகிவிடுவார். இவ்வாறு வருகிற
வித்துவான்களுக்கு ஊக்கமும், பொருள் இலாபமும் உண்டாவதோடு
தேசிகருடைய அன்பினால் அவர்களுடைய கல்வியும் அபிவிருத்தியாகும். ஒரு
துறையிலே வல்லார் ஒரு முறை வந்தால் அவருக்குத் தக்க சம்மானத்தைச்
செய்யும்போது தேசிகர். “இன்னும் அதிகமான பழக்கத்தை அடைந்து வந்தால்
அதிக சம்மானம் கிடைக்கும்” என்ற கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவார்.
வித்துவானும் அடுத்த முறை வரும்போது முன் முறையைக் காட்டிலும்
வித்தையிலே அதிக ஆற்றல் பெற்று வருவார். அதன் பயனாக அதிகமான
சந்தோசத்தையும் சம்மானத்தையும் அடைவார்.

பல சமத்தானங்களில் நூற்றுக்கணக்காகச் சம்மானம் பெறும்
வித்துவான்களும் தேசிகரிடம் வந்து சல்லாபம் செய்து அவர் அளிக்கும்
சம்மானத்தைப் பெறுவதில் ஒரு தனியான திருப்தியை அடைவார்கள். தேசிகர்
அதிகமாகக் கொடுக்கும் பரிசு பதினைந்து உரூபாய்க்கு மேல் போகாது. குறைந்த
பரிசு அரை உரூபாயாகும். ஆனாலும் அப்பரிசை மாத்திரம் அவர்கள் கருதி
வருபவர்களல்லர்; வித்தையின் உயர்வையும், அதை உடையவர்களின்
திறமையையும் அறிந்து பாராட்டிப் பேசும் தேசிகருடைய வரிசையறியும்
குணத்தை அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணியே வருவார்கள்.

மடத்திற்கு வரும் வித்துவான்கள் சில சமயங்களில் வாக்கியார்த்தம்
நடத்துவார்கள். தாம் தேசிகரைப் பாராட்டி இயற்றிக் கொணர்ந்த
சுலோகங்களையும் செய்யுட்களையும் சொல்லி விரிவாக உரை கூறுவார்கள். பல
நூற்கருத்துகளை எடுத்துச்சொல்வார்கள். இடையிடையே தேசிகர் சில சில
விசயங்களைக் கேட்பார். அக்கேள்வியிலிருந்தே தேசிகருடைய
அறிவுத்திறமையை உணர்ந்து அவ்வித்துவான்கள் மகிழ்வார்கள். இப்படி
வித்தியா விநோதத்திலும் தியாக விநோதத்திலும் தேசிகருடைய பொழுது
போகும்.

மடத்து நிருவாகம்

மடத்துக் காரியங்களைக் கவனிப்பதற்கு நல்ல திறமையுள்ளவர்களைத்
தேசிகர் நியமித்திருந்தார். பெரிய காறுபாறு, சின்னக் காறுபாறு, களஞ்சியம்
முதலிய உத்தியோகங்களில்
 தம்பிரான்கள் பலர் நியமிக்கப் பெற்றிருந்தனர்.
உக்கிராணம், இராயசம் முதலிய வேலைகளில் மற்றவர்களையும்
நியமித்திருந்தார். மடத்தில் தினந்தோறும் நிகழவேண்டிய காரியங்கள்
ஒழுங்காக ஒரு தவறும் இல்லா முதலிய இடங்களிலிருந்து அவ்வாறு படிப்பதற்காக வந்தவர்கள்
பலரோடு நான் பழகியிருக்கிறேன். அம்மாணாக்கர்களிற் சிலர்
திருவாவடுதுறையிலுள்ள அன்னசத்திரத்திலே உணவுகொண்டு வித்துவான்கள்
உள்ள இடத்திற்கு முற்பகலிலும் பிற்பகலிலும் சென்று பாடம் கேட்டு
வருவார்கள். சிலர் அவ்விடங்களிலே இருந்து சமையல் செய்து உண்டு
வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய அரிசி முதலிய பொருள்கள்
சுப்பிரமணிய தேசிகர் கட்டளையின்படி மடத்திலிருந்து அளிக்கப்பெறும்.

சங்கீதம் பயில்வோர்

மடத்தைச் சேர்ந்த சங்கீத வித்துவான்களிடமும் நாதசுரக்காரர்களிடமும்
சிலர் சங்கீதம் பழகி வந்தனர். அடிக்கடி மடத்திற்குச் சங்கீத வித்துவான்கள்
வந்து வினிகை நடத்துவார்கள். அதனால் அம்மாணாக்கர்களுக்கு உண்டாகும்
இலாபம் அதிகம்.

தமிழ் மாணாக்கர்கள்

பிள்ளையவர்களிடமும் தேசிகரிடமும் பல மாணாக்கர்கள் தமிழ்ப்
பாடம் கேட்டு வந்தார்கள். அவர்களில் பிராமணர்கள், சைவர்கள், மற்ற
வகுப்பினர்கள் முதலிய பல வகையினர் இருந்தனர்
. பிராமணர்கள்
அன்னசத்திரத்தில் உண்டு வந்தார்கள். சைவப் பிள்ளைகள் மடத்திற்
பந்தியிலே ஆகாரம் செய்து வந்தனர். மற்றவர்களுக்கும் தக்கபடி உணவுக்கு
ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன.

என்னோடு பிள்ளையவர்களிடம் தமிழ்ப் பாடம் கேட்டு வந்தவர்களில்
சிலர் முதிய தம்பிரான்கள்; சிலர் குட்டித் தம்பிரான்கள். அண்ணாசாமி ஐயர்,
சாத்தனூர்ச் சுப்பிரமணிய ஐயர், கஞ்சனூர்ச் சாமிநாதையர்
 என்பவர்கள்
பிராமண மாணாக்கர்களில் முக்கியமானவர்கள். மேலகரம் சண்பகக் குற்றாலக்
கவிராயர், விக்கிரமசிங்க புரம் அனந்த கிருட்டிணக் கவிராயர், மதுரைச்
சாமிநாதபிள்ளை, முகவூர் அருணாசலக் கவிராயர், சந்திரசேகர முதலியார்,
பூமிநாத செட்டியார்
 முதலிய பலர் சைவர்கள். இராமகிருட்டிண பிள்ளையென்ற
ஒருவர் இருந்தார். அவர் வைணவ வேளாளர். இப்படிப் பல வகுப்பினரும்
பல நிலையினருமாக மாணாக்கர்கள் இருப்பினும் யாவரும் ஒரு
குடும்பத்தினரைப் போலவே பழகி வந்தோம். எல்லா மாணாக்கர்களிடத்தும்
சுப்பிரமணிய தேசிகருக்கு உள்ள அன்புக்கு இணை வேறு ஒன்றும் இல்லை.
மடத்திற் படிக்கும் மாணாக்கர்களுக்கு ஒரு குறைவும் வராமற் பாதுகாக்க
வேண்டுமென்பது அவரது கட்டளை. அவருக்குக் கோபம் வருவது அரிது.
அப்படி வருமானால்அதற்குத் தக்க காரணம் இருக்கும். மாணாக்கர்களில் யாருக்காவது
குறை நேர்ந்தால் அதற்குக் காரணமானவரிடம் தேசிகருக்கு உண்டாகும்
கோபம் மிகவும் கடுமையானது.

சருவ கலாசாலை

மடத்தின் விசயம் ஒன்றும் தெரியாத அயல் நாட்டார் ஒருவர் வந்து
பார்த்தால் அவ்விடம் ஒரு சருவகலாசாலையோ என்று எண்ணும்படி இருந்தது
அக்காலத்து நிலை. அங்கே ஆடம்பரம் இல்லை; பெரிய விளம்பரங்கள்
இல்லை; ஊரறியச் செய்யும் பிரசங்கங்கள் இல்லை; வேறு வேறாகப் பிரித்து
வகுக்கும் பிரிவுகள் இல்லை. பொருள் இருந்தது; அதைத் தக்க வழியிலே
உபயோகிக்கும் தாதா இருந்தார்; அவர் உள்ளத்திலே அன்பு நிறைந்திருந்தது;
எல்லோரிடமும் ஒற்றுமை இருந்தது; கல்வி நிறைந்திருந்தது; வயிற்றுப்
பசியையும் அறிவுப் பசியையும் போக்கி வாயுணவும் செவியுணவும் அளிக்கும்
நித்தியோற்சவம் அங்கே நடந்து வந்தது.

அத்தகைய இடத்திலே கல்வி விளைந்து பெருகுவதற்குத் தடை என்ன?
கலைமகள் களிநடம் புரியும் திருக்கோயிலாகவே அது விளங்கியது.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்